Published : 03 Dec 2017 12:25 PM
Last Updated : 03 Dec 2017 12:25 PM

செவிலியர் போராட்டம்: செவிசாய்க்குமா அரசு?

ம் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளில் இன்றியமையாத பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணிக்கு முறையான கல்வியும் பயிற்சியும் இவற்றைவிட முக்கியமாகப் பொறுமை, சேவை உணர்வு ஆகிய குணங்களும் தேவை. இவற்றையெல்லாம் பெற்று கடந்த இரண்டாண்டுகளாக அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் பணியில் இருக்கும் சில ஆயிரம் செவிலியர்கள் கடந்த வாரம் சென்னையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரக (டி.எம்.எஸ்) வளாகத்தில், ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும் கால முறை அடிப்படையில் ஊதியம் வழங்கவும் நடத்திய போராட்டம் நீதிமன்ற ஆணையால் நிறுத்தப்பட்டது. ஆனால், கோரிக்கைகள் நிறைவேற அவர்கள் இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.

மாறிய வார்த்தைகள்

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தனியார் மருத்துவப் பணியில் இருந்து தேர்வு எழுதி அரசுப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தவர்கள். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் என்று சொல்லப்பட்டது. ரூ.8000-க்குக் குறைவான சம்பளத்துக்கே வேலை பார்த்துவருகின்றனர். இரண்டு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும் கிடைக்காததை எதிர்க்கும் வகையில் கறுப்புப் பட்டை அணிந்து ஒருநாள் வேலை செய்த அடையாளப் போராட்டம் பலன் கொடுக்கவில்லை. எனவே, நவம்பர் 27 அன்று டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

“காலியிடம் ஏற்பட்டால்தான் பணி நிரந்தரமும் அதற்கேற்ற சம்பளமும் வழங்க முடியும் என்று அரசு சொல்கிறது. காலியிடங்கள் இல்லை என்றால் ஏன் இத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள். பல மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதுதான் உண்மை” என்று போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்கள் ஒருமித்த குரலில் சொல்கின்றனர்.

திணிக்கப்பட்ட உண்ணாநிலை

இந்தப் போராட்டத்தை ஒடுக்கப் பல்வேறு முயற்சிகள் நடந்தன. அனைத்துக் கழிவறைகளும் பூட்டப்பட்டன. தங்களது சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொண்ட தற்காலிகக் கழிவறையைப் பயன்படுத்த காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டினர். கர்ப்பிணிகள், கைக்குழந்தையை வைத்திருந்தவர்கள் உட்பட அனைவரும் அவதிப்பட்டனர். மாதவிடாய் வந்த பெண்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. மூன்றாவது நாள் போராட்டத்தில் கழிவறை இல்லாததால் செவிலியர்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தனர். ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் தேர்ந்தெடுக்கப்படும் உண்ணா நிலை, செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டது.

இது தவிர பல்வேறு வகைகளில் தங்களை மிரட்டியதாகவும் செவிலியர்கள் குற்றம்சாட்டினர். “போராடிய செவிலியர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் மெமோ அனுப்பப்பட்டுவிட்டது” என்று அவர்களில் சிலர் கூறினர்.

போராட்டக் களத்துக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்தது காவல்துறை. இதை எதிர்த்து அவர்கள் வளாக வாசலிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தியதையடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நிறுத்தவைத்த நீதிமன்றம்

செவிலியர்கள் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார மையங்களிலும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரும் பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போராட்டத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று செவிலியர்களை எச்சரித்தனர்.

நாளைக்கே பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு அவர்களது ஊதிய உயர்வுக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையை 2018 ஜனவரி 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் அரி பரந்தாமன் இந்த நீதிமன்ற ஆணை செவிலியர்கள் கோரிக்கைக்குச் சாதகமானது என்று நம்பிக்கையளித்துப் பேசியதை அடுத்து வேறு வழியுமின்றிக் கலைந்து சென்றனர். அடுத்த நாளே பணியில் சேரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போராட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அவசர அவசரமாகப் பேருந்துகளையும் ரயில்களையும் பிடிக்கச் சென்றனர்.

அதற்கு முன், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களது பணியின் முக்கியத்துவத்தையும் விரிவாகப் புரிந்துகொள்ள சில செவிலியர்களிடம் பேசினோம். இந்தப் போராட்டத்தின் பின் உள்ள நியாயம் அவர்கள் பேச்ச்சில் வெளிப்பட்டது.

ஏழாயிரத்துக்கு ஏழு மணி நேரப் பயணம்

“நான் பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்கிறேன். ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிற்றுநராக இருந்தேன். அரசு வேலைக்கான அறிவிப்பு வந்ததை அடுத்து தேர்வு எழுதினேன். 19,000 பேர் எழுதிய தேர்வில் நான் 523-ம் ரேங்க் எடுத்தேன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் போஸ்டிங் போட்டார்கள். வீட்டிலிருந்து போகவரத் தினமும் 168 கி.மீ. பயணிக்கிறேன். காலை நாலு மணிக்குக் கிளம்பி மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வருகிறேன்.

பயணத்திலேயே ஏழு மணி நேரம் செலவாகிறது. இதற்கு எனக்குக் கிடைப்பது ரூ.7,700. குழந்தையைப் பார்த்துக்கொள்பவருக்கு ரூ.6,000 கொடுக்கிறோம். பயணத்துக்கும் ஆயிரக்கணக்கில் செலவாகிறது. இதை வைத்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இவர்கள் பணி நிரந்தரம் செய்ய எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்? செப்டம்பருடன் நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதே எனக்கு 35 வயதாகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும்?” என்று தன் ஒரு வயதுக் குழந்தைக்குத் தாய்ப்பால்கூடக் கொடுக்காமல் மூன்று நாட்கள் சென்னையில் வந்து போராடிக்கொண்டிருக்கும் அவல நிலையைக் கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார் ஷாலினி என்ற செவிலி.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

சத்யா என்ற செவிலி, பணியில் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களைப் பட்டியலிடுகிறார் “நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பி.ஹெச்.சி-ல் (ஆரம்ப சுகாதார நிலையம்) வேலை பார்க்கிறேன். என் கணவர் திண்டுக்கல்லில் வேலை பார்க்கிறார். மகன் அவருடன்தான் இருக்கிறார். இங்கு தனியாளாகத் தங்கும் இடத்துக்கே ரூ.2,000 செலவாகிவிடுகிறது. இருப்பினும் வேலை உத்தரவாதத்துக்காக இந்த வேலையில் இருக்கிறோம். பி.ஹெச்.சிக்களில் ஒரு நாளைக்கு 200-300 நோயாளிகள் வருவார்கள்.

கிராமப்புற நோயாளிகளைக் கையாள்வதும் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைப்பதும் கடினம். அதற்குத் தேவையான பொறுமையுடன் வேலை பார்க்கிறோம். இதையும் மீறி எங்களுக்குப் பாதுகாப்பும் கண்ணியமான பணிச் சூழலும் இல்லை. ஆய்வுக்கூடப் பணியாளர், மருந்தாளர் எல்லாம் விடுப்பு எடுத்தால் அந்த வேலைகளை நாங்கள்தான் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் மருத்துவர்களும் இருக்க மாட்டார்கள். ஒரு வாட்ச்மேன்கூட இல்லாமல் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான உதவிப் பணியாளர் ஒருவருடன் பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது.

இரவு நேரங்களில் பிரசவ வலி எடுத்தவர்கள் வருவார்கள். மருத்துவர்கள் இல்லையென்றால் சில நேரங்களில் பிரசவமும் நாங்களே பார்க்க வேண்டியிருக்கும். ஏதாவது தவறு நடந்துவிட்டால் ஊர் மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சுறுத்தலும் இருக்கிறது. இவ்வளவையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். போதுமான ஊதியம் கொடுங்கள் என்று மட்டும்தான் கேட்கிறோம்” என்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அண்மையில் சம்பளத்தை உயர்த்தியிருக்கும் அரசு செவிலியர்களின் நியாயமான கோரிக்கைக்குச் செவி சாய்த்து ஆவண செய்ய வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x