Published : 05 Nov 2017 11:45 AM
Last Updated : 05 Nov 2017 11:45 AM

பெண்ணுக்கு நீதி 08: பிரிவோம் சந்திப்போம்

 

ரு மனம் கலந்து ஒரு மனமாகி ஒன்றி வாழ்வதுதான் மணவாழ்க்கை என்ற தத்துவத்தைத் தம்பதியினர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் இல்லறம் இனிமையாகவே இருக்கும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு சில தம்பதிகள் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தும் நிபுணர்களாக மாறிவிடுகின்றனர். அதனால், வாழ்க்கையில் பரஸ்பர ஆதரவு, மகிழ்ச்சி, வளர்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றை இழந்துவிடுகிறார்கள்.

வணிகமாக்கப்பட்ட வாழ்க்கை

குடும்ப அமைப்புக்குள் இன்று சிறிது சிறிதாக வன்முறை இடம்பிடித்துவிட்டது. வாழ்க்கையைப் பலர் வணிகமாக்கிவிட்டதுதான் அதற்குக் காரணம். இதனால் குடும்ப நீதிமன்ற வழக்குகள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் கொடூரமானவை. ‘இல்லறத்தில் பிரிவுகளும் அதன் தொடர்ச்சியாக விவாகரத்துகளும் பெரும்பாலும் குழப்பமும் கசப்பும் வன்மமும் வன்முறையும் நிறைந்தவையாக ஆகிவிட்டன’ என்று சொன்னார் சித்தானந்த் ராஜ்கட்டா (சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் முன்னாள் கணவர்). தன்னுடைய மனைவி கௌரி இறந்தபோது, “27 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து பெற்றபோதும், நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருந்தோம். உங்களில் ஒருவர் மற்றவருக்குத் தொல்லை தருபவர்களாக இருக்காதீர்கள்” என்று அவர் எழுதினார். ஏன் அப்படி எழுதினார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வலிதரும் பொய்கள்

விவாகரத்துச் சட்டங்கள் அந்தந்தச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக மட்டுமே விவாகரத்து கோர வழிவகை செய்கின்றன. உதாரணமாக, திருமணம் தாண்டிய உறவு, கொடுமை இழைத்தல், கைவிடுதல், மதமாற்றம், தொழுநோய், துறவறம் பூணுதல், பால்வினை நோய் போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே விவாகாரத்து கோர சட்டம் வழிசெய்கிறது. அத்தகைய காரணம் கிடைக்காதவர்கள் அதே காரணங்களைப் புனைவுகளாக்கி, பொய்யையும் போலி நிகழ்வுகளையும் வலிந்து திணித்து வழக்கு தொடுக்கிறார்கள்.

உடைந்த உறவுகள் ஒட்டுவதற்கான கொஞ்சநஞ்ச வாய்ப்பும் ஒட்டுமொத்தமாக அறுந்துபோகும் சூழலை அதன் மூலம் உருவாக்குகிறார்கள். இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் வாழ்க்கை தொய்வடையும் நேரத்தில், ஏற்கெனவே இருந்த நெருக்கமான உறவின் காரணமாக, தீராத வலியாகத் தொடர்ந்து நிம்மதியைக் குலைத்துவிடுகின்றன. இதைத் தவிர்க்க ‘ஒத்திசைவு மனமுறிவு’ அதாவது பரஸ்பர சம்மதத்தின்பேரில் மணவிலக்கு பெறுவது என்ற முறையை நாடலாம்.

நண்பர்களாகப் பிரிவதே நலம்

முறிந்துபோன திருமண உறவின் எஞ்சிய அடையாளமாகக் குழந்தைகள் மிஞ்சும்போது, பெரியவர்களின் பிரச்சினைகள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. பெற்றோரின் வாழ்க்கை பெரும் சகதியில் மாட்டியிருப்பது பற்றியோ அவர்களின் எதிர்காலப் பயணம் எதிர்பாராத ஒரு திசையில் நடக்கவிருப்பது பற்றியோ குழந்தைகளுக்குப் புரிய வாய்ப்பில்லாமல் போகலாம். பெரியவர்கள் பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ளவும் நேரிடலாம். எனவே, பிரியத்தானே போகிறோம் என்ற அலட்சியத்தில் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்தாமல் நண்பர்களாகப் பிரிவதே நலம்.

இந்து திருமணச் சட்டப்பிரிவு 13பி-ன் படி, கணவனும் மனைவியும் பரஸ்பரமாக மனமொத்து மணவிலக்குப் பெற வழிவகை உள்ளது. கணவனும் மனைவியும் மனுச் செய்வதற்கு முன்பு, குறைந்தது ஓராண்டோ அதற்கு அதிகமான காலமோ பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். திருமணத்தை ரத்து செய்வதற்கு அவர்களுக்குள் பரஸ்பர சம்மதம் இருக்க வேண்டும்.

அப்படி மனுத் தாக்கல் செய்த பிறகு, அதை மறுபரிசீலனை செய்ய வசதியாக ஆறு மாத இடைவெளியைக் கட்டயமாக்கி வைத்திருந்தது சட்டம் . இந்த விதிமுறையில் உச்ச நீதிமன்றம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தைக் காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட வேண்டும் என்றாலும் மறுபடியும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பட்சத்தில், ஒரு அர்த்தமில்லாத திருமணத்தை நிலைநாட்டவும், தம்பதிகளின் வேதனையை நீட்டிப்பதற்கும் இந்த விதியைப் பயன்படுத்தத் தேவையில்லை எனவும் விசாரணை நீதிமன்றம் ஆறு மாத காலம் காத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாம் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

பிரிவுக்கு முன் உரையாடல்

ஒத்திசைவு மணமுறிவு வழக்குகளில் மணவிலக்கின் பின்விளைவுகள் பற்றியும் கலந்துபேசி முடிவெடுக்கலாம். உதாரணமாகக் குழந்தைகளை எப்படி வளர்ப்பது, யாரிடம் அவர்கள் வளர்வது, குழந்தைகளுக்கான வாழ்க்கைப் பொருளுதவி ஆகியவற்றையும் முடிவு செய்துவிடலாம். பெண்களைப் பொறுத்தவரை திருமண உறவில் குழந்தைகள் இருந்தால், மணவிலக்குக்குப் பிறகு, முன்னாள் கணவருடனான நட்பைத் தொடர்வது, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அவர்கள் படித்து முன்னேறுவதற்கும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

கணவனும் மனைவியும் மணவிலக்கு என்கிற மதில்சுவரால் பிரிக்கப்பட்டாலும்கூட, குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது உறவு தந்தையாகவும் தாயாகவும் தொடரத்தானே செய்கிறது.

மணவிலக்கு என்பது பெரும்பாலும் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளிலேயே நாடப்படுகிறது என்று எடுத்துக்கொண்டால் பரஸ்பர பிரிதல் என்பது தம்பதியரில் குறிப்பாகப் பெண்களின் தேர்வாக இருப்பது நல்லது. அதுதான் நாகரிகத்தின் அடையாளமாகவும் மனித உறவுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் அளிக்கப்படும் மகத்துவமாகவும் இருக்கும்.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x