Last Updated : 12 Nov, 2017 01:11 PM

 

Published : 12 Nov 2017 01:11 PM
Last Updated : 12 Nov 2017 01:11 PM

வரலாற்று எழுச்சி: நவம்பர் புரட்சியில் பெண்கள்!

ரஷ்யாவில்19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைச் சட்டங்களை எதிர்த்துத் தொழிலாளிகள் போராடினர். தொழிலாளிகள் மத்தியில் லெனின் தலைமையில் புரட்சிகர இயக்கம் உருவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண் தொழிலாளர்களின் குரல்களும் ஒலித்தன. குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்டுவதில் அலெக்சாந்திரா கொலந்தாய், நதேழ்தா குரூப்ஸ்கயா, இனெஸ்ஸா அர்மந்த், கொன்கோர்டிலா சாமோயிலோவா போன்ற பெண் தலைவர்கள் முக்கியப் பங்குவகித்தனர்.

உருக்குலைத்த உலகப் போர்

இதனால் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களில் பெண்கள் வலிந்து திணிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேலாக உயர்ந்தது. எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம்வரை ஆலைகளில் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு. கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.

பெண் சமத்துவத்துக்கான முன்னணி

இந்தத் தருணத்தில்தான் ஆலைகளின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்டுகளின் குரல் எழுந்தது. ஏராளமான பெண்கள் செங்கொடியின் கீழ் ஒன்றுதிரண்டனர். கொலந்தாய், குரூப்ஸ்கயா போன்ற பெண் தலைவர்கள் அவர்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினர். தொழிலாளியாகத் தமக்கான உரிமைகளை வென்றெடுப்பதுடன் காலம் காலமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க விலங்கிலிருந்தும் விடுதலைபெற வேண்டிய அவசியத்தை அவர்கள் பெண்கள் மத்தியில் போதித்தனர். இதற்காக ‘ரபோட்னிஷா’ (பெண் தொழிலாளி) என்ற இதழையும் நடத்தினர். ‘பெண் சமத்துவத்துக்கான முன்னணி’ என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கி நடத்தியதில் ரஷ்யாவின் முதல் பெண் மகப்பேறு மருத்துவர் போலிக்ஷேனா ஷிஸ்கினா – லாவெயின் முக்கியமானவர்.

1913-ம் ஆண்டு இவர்கள் தலைமையில் நடந்த மகளிர் தின எழுச்சி மேடையில் சாதாரணப் பெண் தொழிலாளி அலெக்சீவா ஆற்றிய உரையைக் கேட்டு குரூப்ஸ்கயாவும் கொலந்தாயும் மெய்மறந்தனர். ஒட்டுமொத்தப் பெண் சமுதாயத்தின் உணர்ச்சிப் பிரவாகமாக அது பெருகியது. அதே அலெக்சீவா பின்னர் மாபெரும் போல்ஷ்விக்காக உயர்ந்தார். அவரது சுயசரிதை நூல் லட்கக்கணக்கில் விற்பனையானது. இதுபோன்ற எண்ணற்ற ஆலைத் தொழிலாளிகள் கம்யூனிஸ்ட் கட்சியால் உத்வேகம் பெற்று, பெண் உரிமைக்காகப் போராடினர்.

எங்களுக்கு ரொட்டி வேண்டும்

‘எங்களுக்கு ரொட்டி வேண்டும்’ என்பதுதான் அவர்களின் முழக்கம். அவர்கள் தங்களுக்காகக்கூட ரொட்டியைக் கேட்கவில்லை. தங்கள் குழந்தைகளுக்கும் விருப்பத்துக்கு மாறாகப் போரில் திணிக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மனைவிகளுக்கும்தான் ரொட்டி கேட்டனர். பெட்ரோகிராட் நகரில் மட்டும் சுமார் 40,000 பெண்கள் பேரணியாகத் திரண்டனர்.

ஓடும் டிராமை நிறுத்திய தனி மனுஷி

மறுநாள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் திரண்டனர். அதற்கு அடுத்த நாள் போக்குவரத்தை முடக்கும்படி லெனின் அறைகூவல் விடுத்தார். பெட்ரோகிராட் நகரில் அகாட்ஷனோவா என்ற பெண் முன்னே வந்துகொண்டிருந்த டிராமை மறித்துத் தண்டவாளத்தின் நடுவே நின்றார். டிராம் நிற்காமல் முன்னேறினாலும் அஞ்சாமல் நின்றார். டிராம் மோதுவதுபோல வேகமெடுத்தாலும் பணிந்து நின்றது. தொடர்ந்து மற்ற டிராம்களும் நகர முடியவில்லை. அன்று பெட்ரோகிராடில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.

அகாட்ஷனோவா என்ற தனி மனுஷியின் ஆக்ரோஷம் நாடு முழுவதும் பரவிப் பெரும் அலையாக எழுந்து புரட்சியில் இணைந்துகொண்டது. நவம்பர் புரட்சியில் பெண்களின் பங்கு என்பது ரத்தமும் சதையும் போல. அது பெண்ணும் ஆணும் இணைந்து நிகழ்த்திய புரட்சி. உலகுக்கே புத்தொளி பாய்ச்சிய புரட்சி!

லெனின் அமைச்சரவையில் பொதுநல அமைச்சராக கொலந்தாய் நியமிக்கப்பட்டார். தன்னைத் திருநங்கை எனப் பகிரங்கமாக அறிவித்துக்கொண்ட ஜியார்ஜி சிச்செரின், சோவியத் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு 12 ஆண்டுகள் அதே பதவியில் நீடித்தார்.

ரஷ்யப் புரட்சி பெற்றுத் தந்த உரிமைகள்

புரட்சி முடிந்ததும் ஆட்சியில் அமர்ந்த லெனின் முதலில் கொண்டுவந்த சட்டம் போருக்கு எதிரானது. இரண்டாவது சட்டம், நிலங்களைப் பொதுவுடைமையாக்கி அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்கியது. 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வாக்குரிமையை ரஷ்யப் புரட்சிதான் பெற்றுத் தந்தது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற முதலாளித்துவ நாடுகளில் அனைவருக்கும் சம வாக்குரிமை அமலானது. பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பணியிடங்களில் தனி ஓய்வறைகள், கூடுதல் நேரப்பணி, இரவுப்பணி ஆகியவற்றிலிருந்து விலக்கு போன்ற உலகிலேயே முதன்முறையாக என்று சொல்லத்தக்க பல உரிமைகள் வழங்கப்பட்டன.

திருமணச் சட்டங்கள் மதத்தின் பிடியில் இருந்து விலக்கப்பட்டன. பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் 18 வயதுவரை பராமரித்துக் கல்வி சுகாதாரம் வழங்குவது அரசின் கடமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் விருப்பமாக அறிவிக்கப்பட்டது. திருமணம் செய்வது, சேர்ந்து வாழ்வது, ஓரினப் பாலுறவு ஆகியவை அவரவர் விருப்பம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சோவியத் ராணுவத்தில் அதாவது செஞ்சேனையில் சுமார் 80,000 பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஒரு நாட்டு ராணுவத்தின் கிளைப் பிரிவுகளில்கூடப் பெண்களைச் சேர்க்கத் தயங்கிய காலத்தில் மொத்த செஞ்சேனை ராணுவத்தில் ஐம்பதில் ஒருவர் பெண்ணாக இருந்தார். இத்தனை அதிசயங்களை நவம்பர் புரட்சி நிகழ்த்திக்காட்டினாலும் லெனின் மனநிறைவு கொள்ளவில்லை. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக சோஷலிச அமைப்பிலும் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றே கூறினார்.

மேலும், “அனைத்துச் சட்டங்களுக்குப் பிறகும் பெண் என்பவள் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற வீட்டு வேலைகளின் அடிமையாகவே நீடிக்கிறாள். இந்த வேலைகள் அவளது குரல்வளையை நெரிக்கின்றன. இதற்கு எதிராக அதிகாரம் கொண்ட பாட்டாளி வர்க்கம் எங்கே எப்போது போராட்டத்தைத் தொடங்குகிறதோ அங்கே அப்போது உண்மையான பெண் விடுதலை, உண்மையான கம்யூனிசம் தொடங்குகிறது. இந்த வீட்டு வேலைகள் அனைத்தும் பெரிய அளவிலான சோஷலிசப் பொருளாதாரமாக மாற்றம் அடையும்போதுதான் உண்மையான பெண் விடுதலை, உண்மையான கம்யூனிசம் தொடங்குகிறது” என்றார். உண்மைதானே!

- கட்டுரையாளர் எழுத்தாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x