Last Updated : 29 Oct, 2017 12:31 PM

 

Published : 29 Oct 2017 12:31 PM
Last Updated : 29 Oct 2017 12:31 PM

பெண்ணும் ஆணும் ஒண்ணு 27: இன்னும் பிறவாப் பொருளாதாரச் சுதந்திரம்

பெண் வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறாள். ஆனால் அந்த வேலையும் அவளது வருமானமும் அவளுக்கு முழுமையான பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்கவில்லை. படித்தப் பெண்ணுக்கான நவீன வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு முன்னால் குடும்பம் குடும்பமாக தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழந்தைகள் உட்பட அவர்கள் அனைவரது உழைப்புக்கும் சேர்த்து அந்தக் குடும்பத் தலைவனான ஆணுக்கே ஊதியம் தரப்பட்டது. அதாவது பெண்ணுக்கெனத் தனி ஊதியம் கிடையாது.

அந்த வகையில் பெண்களின் பெயர் ஒரு நிறுவனத்தில் ஊதியப் பட்டியலில் பதியப் பெற்றதே பெரிய புரட்சிதான். பெண்கள் படித்து இந்த வேலைகளுக்குப் போகத் தொடங்கிய புதிதில்கூட பெண்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கே வந்து அந்தச் சம்பளத்தைக் கணவன்மார்கள் அல்லது தந்தைகள் பெற்றுச் சென்றனர். இப்போதுகூட ஒரு சில இடங்களில் இது தொடரக்கூடும். ஆனால் பொதுவான நிலை மாறிவிட்டது. இன்று மனைவி வேலைபார்க்கும் அலுவலகத்தில் கணவன் முழுமையான அந்நியனாகிவிட்டதைப் பார்க்கலாம்.

மாறாத அடிப்படை அமைப்பு

ஒருமுறை தென்னக ரயில்வே ஊழியர்களின் மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இதைப் பகிர்ந்துகொண்டபோது அங்கிருந்த பெண் ஊழியர்கள் சட்டென இடைமறித்து, “இருக்கலாம். ஆனால் ஏ.டி.எம். கார்டுகள் எங்களில் பலர் கையில் இல்லை” என்று பதிலளித்தார்கள். நடைமுறை மாறிய பிறகும் சிந்தனையும் அடிப்படை அமைப்பும் மாறவில்லை என்பதையே அது உணர்த்துகிறது. இந்த உண்மை வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும். எனினும் இதையும் தாண்டி பெண் தனக்கான பொருளாதாரம் என்கின்ற ஒன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்களின் செலவுக்கான வரம்புகள்

தனது ஊதியத்தைத் தானே தனித்து வைத்துக்கொள்ள அல்லது அதைக் கையாள உரிமை பெற்றிருக்கும் பெண்களில் பெரும்பகுதியினர் எந்தெந்தச் செலவுகளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்? முதலாவது வீட்டுத் தேவைக்கான செலவுகள். அதற்கடுத்து ஆடை, அணிமணிகள். இவைதான் பெண்களின் செலவு வரம்புக்குள் பெரிதும் வருகின்றன. சேமிப்பு என்று எடுத்துக்கொண்டால் தங்க நகைகள். இதைத் தாண்டி நமது சமுதாயத்தில் பொருளாதாரச் சிந்தனைகளைப் பெண்களால் வளர்த்துக்கொள்ள முடிகிறதா? எத்தனை முறையானாலும் பட்டுச்சேலை, நகை போன்றவற்றில் பெண்கள் பணத்தைச் செலவழிக்கும்போது முணுமுணுத்துக்கொண்டு அனுமதிக்கிற இந்தச் சமுதாயம் அவள் ‘நிலம் வாங்கப் போகிறேன்’, ‘வீடு வாங்கப் போகிறேன்’ என்று சொன்னால் எப்படி எதிர்கொள்கிறது?

பொருளாதாரத் தன்னாளுமை

ஒரு குடும்பத்துக்குள் தனது வருமானத்தில் தனக்கென ஒரு பெண் சொத்து சேர்க்க முடியுமா? குடும்பச் சொத்து பெண்ணின் பெயரில் எழுதப்பட்டிருப்பதை இதில் சேர்க்கக் கூடாது. குடும்பத்தில், ஏன் இன்று அரசியலிலும்கூட ஆணின் உடனடி பினாமியாக பெண் எப்போதும் பயன்படுத்தப்படுகிறாள். ஆனால் அவளின் சிந்தனையிலிருந்து, அவளின் முயற்சியிலிருந்து, அவளின் கனவிலிருந்து, அவளால் எதையாவது உருவாக்க முடியுமா? அதற்கான சமுதாய அனுமதி அவளுக்கு இருக்கிறதா? அசையாச் சொத்துக்களில் வெறும் 2 சதவீதம்தான் பெண்ணின் பெயரிலிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு சதவீதத்தில் நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் பினாமி உரிமையாளர்களாக இருக்கக்கூடிய பெண்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பார்கள். அப்படியென்றால் பெண்களின் உண்மையான சொத்து மதிப்பு இந்தச் சமுதாயத்தில் எவ்வளவு?

உண்மையில் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமான கணவன்மாரைப் பெற்றிருக்கும் பெண்களே தங்களுக்கான தனித்த பொருளாதார பலத்தை கட்டியமைக்கிறார்கள். அவர்களால்தான் அது முடிகிறது. பொருளாதாரரீதியில் வலிமை வாய்ந்த கணவன்மாரின் மனைவிகள் அதிகமாக பொருளாதார நுகர்வை அனுபவிக்கிறார்களே தவிர, பொருளாதாரச் சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை. அதாவது அவர்கள் விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களைப் பெறுகிறார்கள். வாகன வசதி பெறுகிறார்கள். விலையுயர்ந்த வீட்டில் வசிக்கிறார்கள். ஆனால் பொருளாதார நுகர்வு வேறு. பொருளாதாரத் தன்னாளுமை அல்லது சுதந்திரம் என்பது வேறு.

நுகர்விலிருந்து உரிமைக்கு

பெண் உழைப்புக்கான ஊதியத்தைப் பெண்ணுக்கு என்று வரையறுத்தது முதல் புரட்சி. அந்த ஊதியத்தை அந்தப் பெண்ணே பெற்றது இரண்டாவது புரட்சி. பெற்ற ஊதியத்தின் மீதான உரிமையைப் பெறுவது அடுத்த கட்டம். அந்த உரிமையைச் சமுதாயத்தின் ஒரு சுதந்திரமான உறுப்பினராகப் பயன்படுத்தும் ஆளுமையைப் பெறுவது அதற்கடுத்த கட்டம் என்று நீண்டுபோகிறது இந்த உரிமைப் போரின் பாதை.

நுகர்பொருள் சந்தையைத் தவிர வேறு இடங்களில் பெண் ஒரு பெண்ணாக இருப்பதனாலேயே கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. ஒரு அவசரத்திற்கு ஆட்டோ பிடிப்பதில் தொடங்கி மருத்துவ நிதி ஏற்பாடு செய்வது, வீடு கட்டுவது, அரசு அலுவலகங்களில் பல்வேறு தேவைகளுக்கான உரிமங்கள் வாங்கத் தரப்படும் லஞ்சம் உட்பட இவையனைத்திலும் ஒரு பெண் தனித்தியங்கத் தொடங்கும்போது இந்தச் சந்தைகள் அவளிடம் கூடுதல் பணம் பறிக்கவே துடிக்கின்றன. ஏனெனில் இதன் நுட்பங்கள் புரியாத அவள் இந்த உலகின் புதிய உறுப்பினர்.

ஏற்கெனவே சுரண்டலில், லஞ்சத்தில், ஊழலில் திளைத்திருக்கும் இந்தச் சமுதாயச் சந்தை ஒருவித பரிகாசத்துடனே தனித்தியங்க முன்வரும் பெண்ணை எதிர்கொள்கிறது. லஞ்சமும் ஊழலும் சட்டவிரோத நடவடிக்கைகளும் மலிந்திருக்கும் ஒரு சமுதாயத்திற்குள் ஓர் அந்நியராகப் பெண் உள்ளே வரும்போது அவளை மனச் சோர்வடைய வைக்கும் அனுபவங்களே அதிகம். இந்த உளவியல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும்.

அதனால்தான் வங்கிகள் பெண்களுக்கான தொழில்முனைவு உதவி விபரங்களைத் தங்கள் இணையதளத்தில் வெளியிடுவதுடன் சரி. நடைமுறையில் எதுவும் செய்வதில்லை. மகளிருக்கென தொடங்கப்பட்ட மகளிர் வங்கியும் மீண்டும் ஸ்டேட் வங்கியுடன் சத்தமில்லாமல் இணைக்கப்பட்டுவிட்டது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மட்டுமே வங்கி உதவியைப் பெற முடிகிறது. ஏனென்றால் அவை பெரும்பாலும் ஆண்களின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்வகிக்கப்படுகின்றன. விதிவிலக்குகளாகச் சில அமைப்புகள் இருக்கின்றன. இதில் பொதுவான நிலையைக் கணக்கில் கொள்கிறோம். மொத்தத்தில் பெண்களின் பொருளாதார உலகம் இன்னும்கூட கருவில்தான் இருக்கிறது.

(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x