Published : 22 Oct 2017 12:52 PM
Last Updated : 22 Oct 2017 12:52 PM

அலசல்: விடை தெரியாப் புதிராகும் பெண்ணுக்கான நீதி

2008 -ம் ஆண்டில் நிகழ்ந்த ஆருஷி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வாரும் நுபுர் தல்வாரும் நான்காண்டு சிறை வாசத்துக்குப் பின் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ‘தல்வார் தம்பதி கொலை செய்திருப்பார்கள் என்பது தக்க ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை;

அவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதற்கும் கொலைசெய்யத் தூண்டியிருக்கக்கூடிய நோக்கத்துக்கும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தவறானவை அல்லது ஜோடிக்கப்பட்டவை’ என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, சந்தேகத்தின் பலனைக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்கும் விதியைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுவித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.

வழக்கு வந்த வரலாறு

2008-ம் ஆண்டில் மே 16 அன்று காலையில் நொய்டாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் அவரது படுக்கையறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவருடைய பெற்றோர் ராஜேஷும் நுபுர் தல்வாரும் தங்கள் வீட்டுப் பணியாளர் ஹேம்ராஜ்தான் ஆருஷியைக் கொன்றிருப்பார் என்று குற்றம்சாட்டினார்கள். தாங்கள் அடுத்த அறையில் படுத்திருந்ததாகவும் சம்பந்தப்பட்ட அறையில் ஓடிக்கொண்டிருந்த ஏ.சி. எழுப்பிய சத்தத்தால் வெளியில் நடந்த எதுவும் கேட்கவில்லை என்றும் கூறினர்.

ஆனால், மறுநாள் அந்த வீட்டு மொட்டை மாடியில் ஹேம்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரின் சந்தேகம் தல்வார் தம்பதி மீது திரும்பியது. ஹேம்ராஜும் கொல்லப்பட்டிருந்தார். கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் ஆருஷியின் பெற்றோர் மட்டும்தான் இருந்திருக்கின்றனர், வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால் வெளியிலிருந்து யாரும் வந்திருக்க முடியாது என்று நம்பப்பட்டது. ராஜேஷ் தல்வார் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு தேசிய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் பொருளானது. தினமும் இரவு நேர டிவி விவாத நிகழ்ச்சிகளில் வழக்கு தொடர்பான புதுப் புதுக் கிளைக் கதைகள் விவாதிக்கப்பட்டன. ஆருஷி, தல்வார் தம்பதியின் பாலியல் ஒழுக்கம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும், ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் தொடர்பு இருந்ததால் மகளையும் வேலைக்காரரையும் ராஜேஷ் தல்வார் கொலைசெய்துவிட்டதாகவும் நுபுர் தல்வார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், இது ஆணவக் கொலையாக இருக்கக்கூடும் என்கிற ரீதியில் போலீஸார் வழக்கு விசாரணையை நடத்தினர். இதற்கான சாத்தியங்களை ஊடகங்கள் விவாதித்தன. ஊகத்தின் அடிப்படையில் தல்வார் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வேறு பல கதைகளும் ஜோடிக்கப்பட்டன.

நிரூபிக்கப்படாத குற்றம்

ஆனால், ராஜேஷ் கொலைகாரர் என்பதைக் காவல்துறையால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. அத்துடன் இந்த வழக்கை போலீஸார் தவறாகக் கையாண்டதால் கொலை நடந்த இடத்தில் ஊடகங்கள் உட்பட பலர் அனுமதிக்கப்பட, முக்கிய சாட்சியங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய புலனாய்வுத் துறையிடம் (சி.பி.ஐ.) இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சி.பி.ஐ.-ம் இந்தக் கொலையை ராஜேஷ்தான் செய்திருக்கிறார் என்றோ வேறு யாராவது செய்திருப்பார்கள் என்றோ நிரூபிக்கவில்லை.

குற்றம் நடந்தபோது வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது என்பதால் வெளியாட்கள் யாரும் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சமர்பித்த சூழ்நிலை சாட்சியத்தின் (Circumstantial evidence) அடிப்படையில் தல்வார் தம்பதிக்கு 2013-ல் ஆயுள் தண்டனை வழங்கியது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். அவர்கள் இருவரும் உ.பி.யின் தஸ்னா என்ற பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தல்வார் தம்பதியரை விடுவித்திருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். சி.பி.ஐ. நீதிபதி ஒரு திரைப்பட இயக்குநர்போல வெவ்வேறு உண்மைகளுக்கு இடையில் ஒரு ஒத்திசைவைத் திணித்து, அதன் அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறார் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதோடு தல்வார் தம்பதிதான் கொலைசெய்திருப்பார்கள் என்பதற்கும் ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் இடையில் பாலியல் உறவு இருந்திருக்கிறது என்பதற்கும் குற்றம் நடந்த இரவில் அந்த வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால் வெளியிலிருந்து யாரும் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்பதற்கும் சி.பி.ஐ. அளித்த சாட்சியங்கள் அனைத்தும் உயர் நீதிமன்ற விசாரணையில் தவறானவை அல்லது ஆதாரமின்றி ஜோடிக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

தொலைதூரத்தில் நீதி

ஆருஷியின் பெற்றோர் குற்றவாளிகளா இல்லையா என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாதவரை யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்கிற அடிப்படையில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

ஆனால், பல கனவுகளைச் சுமந்திருந்திருக்கக் கூடிய வாழ்க்கையைத் தொடங்கியிராத ஒரு பதின்பருவப் பெண்ணின் கொலை நடந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும், உண்மையான குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நம் நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளின் திறன் குறித்த வேதனைக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது.

அத்துடன் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமலேயே கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டிருப்பது நீதி வழங்கும் அமைப்பில் உள்ள ஓட்டைகள் காரணமாக தவறான முடிவுகள் எடுக்கப்படுவது தொடர்வதை வெளிப்படுத்துகின்றன. ஒருவேளை தல்வார் தம்பதி குற்றமற்றவர்கள் என்பதுதான் இறுதி உண்மை என்றால், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யவே முடியாது என்பதும் கசப்பான உண்மை.

Aaurshi 2

ஆருஷிக்கான நீதி மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது என்பதும் அது கடைசிவரை கிடைக்காமலே இருக்கக்கூடும் என்பதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தம்.

எப்போதும் பாதிக்கப்படும் பெண்

பாலியல் கோணத்தை உள்ளடக்கிய அல்லது அந்தக் கோணம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் கடுமையாகப் பாதிக்கப்படுபவர் பெண்ணாகவே இருக்கிறார் என்கிற சமூக யதார்த்தம் நம் முகத்தில் அறைகிறது.

ஒரு வாதத்துக்கு, ஒரு பதின்பருவத்து ஆண் பணிப்பெண்ணுடன் பாலியல் உறவுகொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், அதிகபட்சம் அந்தப் பெண் வேலையைவிட்டு நீக்கப்படுவார் அல்லது வேறு வகைகளில் தண்டிக்கப்படுவார். அந்தப் பையனின் செயல் குடும்பத்துக்கான இழுக்காக அவருடைய பெற்றோராலோ மற்றவர்களாலோ பார்க்கப்பட்டிருக்காது.

‘பாலியல் ஒழுக்க’ விதிகளை ஒரு ஆண் மீறினால் அது அவனது தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண் மீறும்போது அது குடும்ப கவுரவத்துக்கான இழுக்காகப் பார்க்கப்படுகிறது. தொன்றுதொட்டு ‘குடும்ப கவுரவத்தை’ கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்கள் மீதே சுமத்தப்படுவதும் அதை ஒரு பெண் மீறிவிட்டதாகச் சந்தேகம்வந்தால்கூட அவள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருப்பதை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டிய நேரமிது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x