

ரயில் நிலையத்தில் நான் கண்ட ஒரு காட்சி. ரயில் புறப்படுவதற்குள், கண்ணில் சொட்டுமருந்து இட்டுவிட வேண்டும் என்று அந்தப் பெரியவருக்குப் பதற்றம். அவசர அவசரமாகச் சொட்டு மருந்தை இட்டுக்கொண்டிருந்தார். சொட்டு மருந்து கண்ணுக்குள்ளே விழவில்லை.
கீழ் இமை விளிம்பில்தான் மருந்து விழுந்தது. இன்னொரு சொட்டுமருந்தை எடுத்து வேகவேகமாக இட்டுக்கொண்டார். அவசரத்தில் அதுவும் அப்படித்தானே விழும். சொட்டுமருந்தை எப்படி இட்டால் என்ன? அவரைப் பொறுத்தவரை கண்ணுக்குச் சொட்டுமருந்து இட வேண்டும்.
அவ்வளவுதான்! அந்தச் சொட்டுமருந்து கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்து வதற்கானது (கிளாகோமா – Eye Pressure). மருந்து கண்ணுக்குள் செல்லவே இல்லையே! பிறகு எப்படி அது வேலை செய்யும்? மேலும் ஒரு மருந்தை இட்டவுடனேயே அடுத்த சொட்டு மருந்தையும் உடனே இட்டால் அதுவும் எப்படிக் கண்ணுக்குள் செல்லும்? சிறிது நேர இடைவெளியாவது வேண்டாமா?
அடுத்தடுத்து வேண்டாம்
சில வகைக் கண் பிரச்சினைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொட்டு மருந்துகள் இடவேண்டியிருக்கும். அதுபோன்ற நேரத்தில் ஒரு மருந்தை இட்ட பிறகு இரண்டு - மூன்று நிமிடங்கள் கழித்து அடுத்த சொட்டு மருந்தை இடுவதுதான் நல்லது.
ஒவ்வொரு முறையும் மருந்தை இட்ட பிறகு, கண்ணைச் சில விநாடிகள் மூடியிருப்பது நல்லது. கண்ணில் மருந்தை இடும்போது வேகமாகக் கண் இமைகளை இறுக மூடக் கூடாது. உடனே கண் இமைகளை இறுக மூடினால் - கண்ணுக்குள் இட்ட மருந்தில் பெருமளவு உடனே வெளியேறிவிடும். மருந்து இட்டும் பயனில்லை.