Last Updated : 26 Mar, 2016 12:20 PM

 

Published : 26 Mar 2016 12:20 PM
Last Updated : 26 Mar 2016 12:20 PM

பரிசோதனை ரகசியங்கள் - 24: அடிக்கடி எக்ஸ்-ரே எடுக்கலாமா?

அதீதக் கதிரியக்கத் தால் ஏற்படும் முக்கியமான பாதிப்பு புற்றுநோய் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொதுவாகவே நம் தினசரி வாழ்க்கைமுறையில், சுற்றுச்சூழல் காரணமாக, நம்மை அறியாமலேயே கதிரியக்கம் நம்மைத் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. சூரியனின் உச்ச நேரக் கதிர்களில் இருந்தும், கணினி, டிவி, செல்போன், செல்போன் கோபுரங்கள் போன்றவை வெளியிடும் மின்காந்த அலைகளிலிருந்தும் வரும் கதிரியக்கம் எப்போதும் நம்மைச் சுற்றியே இருக்கிறது.

மருத்துவப் பரிசோதனைகளைப் பொறுத்தவரை முன்பு எக்ஸ்-ரேயுடன் முடிந்த கதிரியக்கம் இப்போது சி.டி. ஸ்கேன், மாமோகிராம் எனப் பல வகைகளில் நம் உடலுக்குள் ஊடுருவுகிறது. இந்தப் பரிசோதனைகளுக்கு அடிக்கடி உட்படுவது நம்மைப் பாதிக்குமா? இதற்கு ஏதேனும் வரையறை உள்ளதா? எந்த அளவுக்கு இதை அனுமதிக்கலாம் என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழுவதுண்டு.

எவ்வளவு ஆபத்தில்லை?

கதிரியக்கத்தின் அளவு ‘மில்லி ஸீவர்ட்ஸ்’ (Milli Sieverts - mSv) என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது. கதிரியக்கத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு ஆபத்து குறையும். இதன் அடிப்படையில் ஒரு மனிதருக்கு அவருடைய ஆயுள்வரைக்கும் எந்த அளவுக்குக் கதிரியக்கம் இருக்கலாம் என்பதையும் நவீன மருத்துவம் கணக்கிட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 50 mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம் என்கிறது அந்தக் கணக்கீடு.

சூரியன் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் வருடத்துக்கு சராசரியாக 3 mSv அளவு கதிரியக்கம் நமக்கு வந்துவிடுகிறது. மீதி 47 mSv வரை கதிரியக்கம் ஏற்பட்டால் நமக்கு ஆபத்து இல்லை.

கதிரியக்க அளவு

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின்போது உடலுக்குள் நுழையும் கதிரியக்கத்தின் அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன:

# நெஞ்சுப் பகுதி எக்ஸ்-ரே 0.1 mSv

# முதுகுப் பகுதி எக்ஸ்-ரே 1.5 mSv

# கை, கால் பகுதி எக்ஸ்-ரே 0.001 mSv

# வயிற்றுப் பகுதி எக்ஸ்-ரே 6 mSv

# பல் எக்ஸ்-ரே 0.005 mSv

# நெஞ்சுப் பகுதி சி.டி. ஸ்கேன் 7 mSv

# வயிற்றுப் பகுதி சி.டி. ஸ்கேன் 10 mSv

# தலைப் பகுதி சி.டி. ஸ்கேன் - 2 mSv

# முதுகுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 6 mSv

# இதயத்துக்கான சி.டி. ஸ்கேன் 12 mSv

# மாமோகிராம் பரிசோதனை 0.4 mSv

# டெக்ஸா ஸ்கேன் 0.001 mSv

# ஐ.வி.பி. பரிசோதனை - 3 mSv

# கரோனரி ஆஞ்சியோகிராம் - 7 mSv

முக்கியக் குறிப்புகள்:

# அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் கதிரியக்கம் இல்லை. இது கேளா ஒலி அலைகளைக் கொண்டு எடுக்கப்படும் பரிசோதனை.

# எம்.ஆர்.ஐ. பரிசோதனையிலும் கதிரியக்கம் இல்லை. இது காந்த அலைகளைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனை.

# ஒருவர் தன் வாழ்நாளில் பத்து முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்பட்டால்கூட, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்தான் கதிரியக்கம் உடலுக்குள் செல்லும்.

# அடிக்கடி எக்ஸ்-ரே எடுப்பதால் ஒருவருக்குப் புற்றுநோய் வந்துவிட்டது என்று சொல்வதற்கு ஆதாரமில்லை. என்றாலும், நீங்களாகவே எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை எடுக்க வேண்டாம். எப்போதும் மருத்துவரை ஆலோசித்த பின்னரே எடுங்கள்.





(அடுத்த வாரம்: மாமோகிராம் பரிசோதனை )
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x