Published : 19 Mar 2016 12:07 PM
Last Updated : 19 Mar 2016 12:07 PM

நோயாளிகளின் குரலுக்கு செவிசாய்த்ததா பட்ஜெட்?

நீங்கள் நாள்பட்ட சிறுநீரக நோயாளியா? டயாலிசிஸ் செய்து கொள்பவரா? அப்படியானால், சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்தியப் பட்ஜெட் உங்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கக்கூடும்.

அந்தப் பட்ஜெட்டில் மாவட்டந் தோறும் சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கு, ரத்தச் சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் மையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா, நல்ல விஷயமாகத் தானே இருக்கிறது என்று நினைத்தால், மாவட்ட மருத்துவமனைகளில்தான் இந்த டயாலிசிஸ் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அதுவும் அரசு - தனியார் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு நன்மை?

இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோலப் பயனாளிகளிடம் கட்டணம் பெற்றே இந்த டயாலிசிஸ் சிகிச்சை நடத்தப்பட உள்ளது. சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளானவர்கள் டயாலிசிஸ் செய்துகொள்ளாமல் வாழமுடியாது. வாரத்துக்கு 2 முறையோ அல்லது 3 முறையோ செய்துகொள்ள வேண்டும். இதற்காக வாரத்துக்குக் குறைந்தபட்சம் ரூ. 3000 செலவாகும். இதைத் தவிர மருந்து மாத்திரைகள், போக்குவரத்து செலவு எல்லாம் சேர்த்து வாரத்துக்கு ரூ. 7000 வரை ஒரு நோயாளி செலவழிக்கும் நிலை ஏற்படும். இந்தச் செலவு மட்டும் மாதத்துக்கு ரூ. 28,000.

கிராமப் புறத்தைச் சேர்ந்த எத்தனை நோயாளிகளால் இதுபோன்று செலவு செய்ய முடியும்? இந்நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை, மருந்துகளை இலவசமாக வழங்குவதைத்தானே ஒரு அரசு செய்ய வேண்டும்? மாறாக இந்தத் திட்டம், தனியார் நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

கூடுதல் பிரச்சினைகள்

டயாலிசிஸை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் துணைப் பொருட்களுக்கான ஆயத்தீர்வையை அரசு கடந்த ஆண்டு அதிகரித்தது. இதன் காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை செலவு 17 முதல் 20 சதவீதம் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் டயாலிசிஸ் கருவிகளின் விலையும் அதிகரித்தது. இந்த இரண்டையும் அரசு திரும்பப் பெறவில்லை. அதேநேரம், டயாலிசிஸ் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட வரி மட்டுமே தற்போதைய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நடவடிக்கையால் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு பெருமளவு குறைய வாய்ப்பில்லை.

இந்தியாவில் 78.5 லட்சம் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 22.5 சதவீதம் பேருக்கு மட்டுமே டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி, வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மத்தியப் பட்ஜெட்டே குறிப்பிடுவதைப்போல ஒவ்வோர் ஆண்டும் 2.2 லட்சம் சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் கூடுதலாக அதிகரிக்கிறார்கள். அதேநேரம் தேசிய அளவில் 1,100 சிறுநீரகச் சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த அம்சங்களைச் சீர்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தவேயில்லை.

மக்கள் மருந்தகங்கள்

நாடு முழுவதும் 3,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்றும், அவற்றில் ஜெனரிக் மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் மத்தியப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த மக்கள் மருந்தகங்களை எங்கே தொடங்கப்போகிறார்கள்?

பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் உள்ளேயே மக்கள் மருந்தகங்களைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவு என்னவாக இருக்கும்? தற்போது அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக மருந்துகள் கிடைத்துவருகின்றன. ஒரு கட்டத்தில் இவை மூடப்பட்டு, காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்.

அதனால், மக்கள் மருந்தகங்களை அரசு மருத்துவமனைகள் அல்லாத பொது இடங்களில் உருவாக்குவதுதானே நியாயமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த 3,000 மருந்தகங்கள் மூலம் மட்டுமே பெரும்பாலான மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகளை நிச்சயமாக வழங்க முடியாது. அதனால் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அரசே ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்.

ஒரு சதவீதத்துக்கும் மேல் சந்தையில் விற்பனையாகும் மருந்துகளின் சராசரி விலையை, மருந்துகளின் விலையாக நிர்ணயம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இது நிச்சயமாக நோயாளிக்குப் பாதகமான, மருந்து நிறுவனங்களுக்குச் சாதகமான ஓர் அம்சம். இதைக் கைவிட்டு மருந்து உற்பத்திச் செலவின் அடிப்படையிலேயே மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்.

காப்பீடு காப்பாற்றுமா?

மேம்போக்காகப் பார்த்தால், சுகாதாரக் காப்பீட்டுக்கு அதிக ஊக்கம் தருவதுபோல இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. பொது மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தனியார் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் வகையில்தான் காப்பீடுத் திட்டங்களுக்கு இந்தப் பட்ஜெட் ஊக்கமளித்துள்ளது.

காப்பீடு திட்டத்தின் மூலம் மக்களுடைய முழுமையான மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை எனப் பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லிவிட்டன. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திவரும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களிலேயே மிகப்பெரிய அளவில் மோசடிகளும் ஊழலும் நடைபெறுகின்றன. இதை வேறு யாருமல்ல, மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய நலக்கொள்கை 2015 அறிக்கையே ஒப்புக்கொள்கிறது.

மருத்துவமனை செலவு, மருந்துகளின் விலை, சிகிச்சைக்கான கட்டணம் போன்றவை வானை முட்டுமளவு அதிகரித்துவிட்ட நிலையில், மருத்துவக் காப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயை மத்திய அரசு தருமென்றால், அதை வைத்து என்னதான் அதிகபட்சமாகச் செய்துவிட முடியும்?

சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு முழுமையாகப் பயனளிக்காத காப்பீட்டு திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, பொது மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ வேண்டும்.

அமெரிக்காவிலேயே தோல்வி

அமெரிக்க மாதிரியில் அமைந்த இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் நம் நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பையே உருவாக்கும். அதற்கும் மேலாக அமெரிக்காவிலேயே இத்திட்டம் தோல்வியையே சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஐந்து கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லாததால், மருத்துவச் சிகிச்சைகளைப் பெற இயலாத நிலையில் உள்ளனர்.

அதனால்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா, 'ஒபாமா கேர்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுவும் பல தடைகளின் காரணமாகச் செயல்படுத்தப்பட முடியாத நிலை நீடித்தது. அண்மையில்தான் அத்திட்டத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அமெரிக்காவைப் பார்த்துச் சூடு போட்டுக்கொண்டு, நமது மருத்துவத் துறையைச் சீரழிப்பது சரியல்ல.

தற்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துக்கு ஒதுக்கும் சராசரி நிதி ஆண்டுக்கு ரூ. 957 மட்டுமே. இதில் மத்திய அரசு ரூ. 325-யையும், மாநில அரசு ரூ. 632-யையும் வழங்குகின்றன. இதை வைத்துக்கொண்டு ஒரு நபர் என்ன பெரிய சிகிச்சையைப் பெற்றுவிட முடியும். எனவே, மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீத நிதியை சுகாதாரத் துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுகாதாரத்தில் அக்கறையற்ற மத்திய அரசு

இந்தியாவில் மருத்துவச் செலவுகளின் காரணமாக மட்டுமே, ஒவ்வோர் ஆண்டும் 6 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள். மக்கள்தொகையில் இது ஐந்து சதவீதம். இதை வேறு யாரும் சொல்லவில்லை, மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய நலக் கொள்கை 2015 அறிக்கையே இதைக் கூறுகிறது.

தேசிய அளவில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? வெறும் 1.04 சதவீதம். ஆனால், ராணுவத்துக்கு ஒதுக்கீடு 2.2 சதவீதம். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா அடங்கிய ஐந்து நாடு கூட்டமைப்பில் சுகாதாரத்துக்கு மிகக் குறைந்த அளவு நிதியை ஒதுக்குவது இந்தியாதான். நல்வாழ்வுத் துறைக்கான மத்திய நிதி 3 சதவீதமாக உயர்த்தப்படும் எனத் தேசிய நலக் கொள்கை கூறியது. ஆனால், நடந்ததோ தலைகீழ். கடந்த பட்ஜெட்டிலேயே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி குறைக்கப்பட்டுவிட்டது.

சுகாதார சரிவு

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் 2014-15-ல் கடைசியாகச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கிய நிதியில் ரூ. 2,500 கோடியை, அடுத்துப் பதவியேற்ற மோடியின் பா.ஜ.க. அரசு குறைத்துவிட்டது. அதாவது 15 சதவீதம் குறைப்பு. எச்.ஐ.வி - எய்ட்ஸ் தடுப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் 30 சதவீதத்தைக் குறைத்தது. அது மட்டும் ரூ. 1,300 கோடி.

2014-15-ல் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 39,238 கோடி. மோடி பதவியேற்ற பிறகு 2015-16-ல் ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 33,152 கோடி. கிட்டத்தட்ட ரூ. 6,086 கோடி குறைக்கப்பட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் நல்வாழ்வில் காட்டும் அக்கறை சரிந்துகொண்டே வருவதற்கான முதன்மை அடையாளம் இது.

திட்டமிட்ட குறைப்பு

தற்போதைய 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்திட்டங்கள் இரண்டுக்கும் சேர்த்து ரூ. 1,51,581 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூக நலத்திட்டங்களுக்காக 2013-14-லேயே ரூ.1,93,043 கோடி ஒதுக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு திட்டமிட்டுக் குறைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. சமூக நலத்திட்டங்களால் பெரிதும் பயன் பெறும், சாதாரண ஏழை எளிய மக்களை இது கடுமையாகப் பாதிக்கும். அவர்களுடைய நல்வாழ்வை, சுகாதாரத்தை, அவர்கள் பெறும் மருத்துவச் சிகிச்சைகளையும் இது பாதிக்கவே செய்யும்.

கட்டுரையாளர், சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
தொடர்புக்கு: daseindia2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x