Last Updated : 12 Sep, 2015 12:57 PM

 

Published : 12 Sep 2015 12:57 PM
Last Updated : 12 Sep 2015 12:57 PM

இணைய மருத்துவ அபிப்பிராயம்

நண்பர் ஒருவர் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் பைக்கிலிருந்து தவறி விழுந்துவிட்டார். கை பெருவிரலில் அடிபட்டுப் பயங்கர வலி. பக்கத்தில் இருந்த பிரபல மருத்துவமனைக்குச் சென்றார். அவருடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ‘ஐ.டி.' நிறுவன அடையாள அட்டையைக் கண்டதும் தனிக் கவனம் கொடுக்கப்பட்டது.

"உங்க பெருவிரல்ல அடிபட்டிருக்கு. உடனே ஒரு சர்ஜரி பண்ணனும். உள்ளே ஒரு சின்ன பிளேட் வைக்க வேண்டியிருக்கு. 30 ஆயிரம் செலவாகும்" என்றார்கள். பதறிப்போன நண்பர், சுதாரித்துக்கொண்டு "நான், இப்போதான் கம்பெனில சேர்ந்திருக்கேன். இன்னும் இன்சூரன்ஸ் வரல. ஒரு வாரம் கழிச்சு வரேன். இப்போதைக்கு முதலுதவி பண்ணுங்க" என்று சொன்னார். விரலுக்கு ஏதோ மருந்து போட்டு, கட்டுப்போட்டு அனுப்பினார்கள். இரண்டு நாட்களிலேயே அவருடைய விரல் பக்காவாகக் குணமாகியிருந்தது.

இரண்டாவது ஆலோசனை

இன்னொரு நண்பரின் ஐந்து வயது மகனுக்கு ‘அடிபிகல் கவாஸாகி சின்ட்ரோம்' எனும் நோய். அது என்னவென்பது முக்கால்வாசி மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே நம்பி மருத்துவத்தைத் தொடரும் நிலை.

இன்றைக்கு மருத்துவமனைகளில் பெரிய நோய்களுக்காக அட்மிட் ஆகும் நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கும் தங்களுக்குத் தரப்படும் சிகிச்சை சரியானதுதானா எனும் சந்தேகம் உண்டு. மருத்துவத் துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்த டாக்டர்களிடம் ‘இரண்டாவது ஆலோசனை' எனப்படும் செகன்ட் ஒப்பீனியனைப் பெற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களோ ஒட்டுமொத்தமாகத் தங்கள் டாக்டரையே கடவுளாக நம்பிக் காத்திருக்கிறார்கள்.

இணைய அபிப்ராயம்

அத்தகைய குழப்ப மனநிலையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறையில் வந்திருக்கும் புதுமையான நடைமுறைதான் ‘ஆன்லைன் செகன்ட் ஒப்பீனியன்' முறை. அதாவது, இணையம் மூலமாகவே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும், மருத்துவ ஆலோசனைகள் பெறவும் முடிகிற வசதி. அந்த வகையில் ஹெல்த்சானா.காம் ( >www.healthsana.com) இணையதளம் வசீகரிக்கிறது.

ரிப்போர்ட்டுகளை ஸ்கேன் செய்தோ அல்லது போட்டோ எடுத்தோ இந்த வலைத்தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் டாக்டர்களின் லிஸ்ட்டில் நமக்குப் பிடித்தவரைத் தேர்வு செய்யலாம். ரிப்போர்ட்டுகளைப் பார்த்துவிட்டு ‘செகன்ட் ஒப்பீனியன்' என்ற கூடுதல் அபிப்பிராயத்தை டாக்டர் தருவார். அவருடைய அபிப்ராயம் திருப்தி அளிக்கவில்லை என்றால், அங்கேயே மூன்றாவதாக வேறொரு டாக்டரிடமும் அபிப்பிராயம் பெறலாம்.

ஒருவேளை எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னால், "சரி, டாக்டர் சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆபரேஷன் பண்ணுவோம்" என உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை அவை முரண்பட்ட பதிலாக இருந்தால் என்ன செய்வது? ஹெல்த்சானாவின் ‘உயர்மட்ட மருத்துவர் குழு’ இந்த ரிப்போர்ட்களைப் பரிசோதித்து, ஒரு பொதுவான முடிவைக் கொடுப்பார்கள்.

நான்கு வசதிகள்

ஹெல்த்சானாவின் பணிகளை நான்கு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்:

ஒரு நோயாளி தனக்குப் பிடித்த மருத்துவரின் அபிப்பிராயத்தை வாங்குவது ஒன்று. இப்படிச் செகன்ட் ஒப்பீனியன் வாங்கும் பணியை MSOaaS - Medical Second Opinion as a Service என்கின்றனர். "நேரடியாக டாக்டர்கிட்ட பேசறது மாதிரி வராது?" என்பவர்களுக்காக, இரண்டாவது பகுதியான MSOoD - Medical Second Opinion on Demand இருக்கிறது. இதன்மூலம் உலகின் எந்தப் பாகத்தில் நோயாளி இருந்தாலும், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் டாக்டர்களுடன் நேரடியாகப் பேசலாம்.

‘என்னோட மருத்துவ அறிக்கைகள் எல்லாம் முறைப்படுத்தப்படாமல் குப்பை மாதிரிக் கெடக்கு’ எனப் புலம்புபவர்களுக்கு, அவற்றை டிஜிட்டலைஸ் செய்து முழு மருத்துவ வரலாற்றையும் கையில் கொடுத்துவிடுவது மூன்றாவது பகுதி. ePRM - Electronic Patient Relationship Management. இதன் மூலம் கையடக்கப் பென்டிரைவில் மருத்துவ வரலாற்றையே வைத்துக்கொள்ளலாம்.

நான்காவதாக வருவது eTMR - Electronic Traveller Medical Record. பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை, அதற்கான மருத்துவ அறிக்கைகள், இத்யாதிகள் எல்லாம் சேர்த்து ‘எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்' உருவாக்கித் தருகிறார்கள். நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்களுடைய பயணத்தை எளிதாகவும், இனிதாகவும் மாற்றும் இது.

அதேநேரம் இந்த நிறுவனத்தின் பணிகளுக்குக் கட்டணம் உண்டு. சில ஆப்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: writerxavier@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x