Published : 20 Jul 2019 12:36 PM
Last Updated : 20 Jul 2019 12:36 PM

வருகிறது செயற்கைச் சிறுநீரகம்!

டாக்டர் கு. கணேசன் 

சிறுநீரகத்துக்கு ஏற்படும் சிக்கல்களில் ‘சிறுநீரகச் செயலிழப்பு’ ஆபத்தானது. இதில் உடனடி செயலிழப்பு, நாட்பட்ட செயலிழப்பு என இரண்டு விதம் உண்டு. முதல் ரகமானது கமாண்டோக்கள்போல் திடீரெனத் தாக்கி, சிறுநீரகத்தை நிலைகுலையச் செய்யும். இரண்டாம் ரகம் தரைப்படைபோல் கொஞ்சம் கொஞ்சமாகத் தாக்கி, சிறுநீரகத்துக்குச் சிக்கலை உண்டாக்கும். முதல் ரகத்தை ஆரம்பத்திலேயே கவனித்தால், 100 சதவீதம் குணப்படுத்திவிடலாம். ஆனால், இரண்டாம் ரகம் வேறு மாதிரி. துப்பிய எச்சிலை விழுங்க முடியாத மாதிரி, பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தைச் சரிசெய்ய முடியாது; அடுத்தடுத்து சிக்கல் வராமல் தடுக்கவே முடியும்.

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு (Acute renal failure) பல வழிகளில் வருகிறது. அவற்றை மூன்று விதமாகப் பிரிக்கிறது மருத்துவம். முதல் வழியானது ஓர் நாட்டுக்கு எதிராக அண்டை நாடுகள் படை எடுப்பதற்கு ஒப்பானது. சிறுநீரகத்துக்கு வருகிற ரத்தம் குறைவதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். விபத்தின்போது, அறுவை சிகிச்சை நடக்கும்போது, பிரசவத்தின்போது, கருக்கலைப்பு செய்கிறபோது ரத்த இழப்பு ஏற்படலாம். அதை உடனடியாகக் கவனித்துச் சரிசெய்யாவிட்டால், சிறுநீரகம் செயலிழக்கும். ரத்த வாந்தி/ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் இதே நிலைமைதான்.

அடுத்து, சிறுநீரகத்துக்கு ஒவ்வாத வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், மூலிகைகள், பஸ்பங்கள், தூக்க மாத்திரைகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றிச் சாப்பிடும்போது சிறுநீரகம் செயலிழக்கிறது. உடலில் எங்காவது கடுமையான நோய்த்தொற்று இருந்து, அதைக் கவனிக்காமலிருந்தால், அது ரத்தத்தில் கலந்து ‘செப்டிசீமியா’வை உருவாக்கும். அப்போதும் சிறுநீரகம் செயலிழக்கும்.

இவை தவிர விஷக்கடிகளின் போது, துத்தம் போன்ற விஷங்களைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயலும்போது, தீ விபத்தின்போது எனச் சிறுநீரகச் செயலிழப்புக்குப் பெரிய காரணப் பட்டியல் இருக்கிறது.
இரண்டாம் வழி, உள்நாட்டுக் கலகம் போன்றது. இதில் சிறுநீரகத்திலேயே கோளாறு இருக்கும். முக்கியமாக, ‘நெப்ரைடிஸ்’ (Nephritis) எனும் சிறுநீரக அழற்சி நோய், காசநோய், நெப்ராடிக் சின்ட்ரோம், குறை ரத்த அழுத்தம், எலிக் காய்ச்சல் போன்றவை சிறுநீரகத்துக்குள் புகுந்து கலாட்டா செய்யும்போது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

மூன்றாம் வழி, பக்கத்து மாநிலம் அருகிலுள்ள மாநிலத்துக்குத் தண்ணீரோ மின்சாரமோ தராமல் கஷ்டப்பட வைப்பதற்குச் சமமானது. சிறுநீர்ப் பாதையில் உருவாகிற கல், புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய், சிறுநீர்த் துவாரம் அடைப்பு, பிறவிக்கோளாறு போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

இந்த நோயை எப்படித் தெரிந்து கொள்வது?

வழக்கத்தைவிடச் சிறுநீர் குறைவாகப் போவது, திடீரெனச் சிறுநீர் கொஞ்சம்கூடப் போகாமல் ‘ஸ்டிரைக்’ செய்வது, சிறுநீரில் ரத்தம் போவது, விக்கல் ஏற்படுவது, மூச்சுத் திணறுவது, திடீரென உடல் வீங்குவது எனப் பல தொல்லைகள் தோன்றி உடனடி சிறுநீரகச் செயலிழப்பை அடையாளம் காட்டும்.
உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அணுக்கள் பரிசோதனை, யூரியா, கிரியேட்டினின், ஜிஎஃப்ஆர் உள்ளிட்ட சிறுநீர், பொதுவான ரத்தப் பரிசோதனைகளைச் செய்தும், வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி/எம்ஆர்ஐ, டாப்ளர் ஸ்கேன் எடுத்தும் சிறுநீரகப் பாதிப்பை அறிந்து, மருத்துவ சிகிச்சையில் இதைக் குணப்படுத்திவிடலாம். காலம் தாழ்த்தினால் மட்டுமே ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை தேவைப்படும்.

நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு ‘சிகேடி’ (Chronic kidney disease-CKD) எனப்படும் நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்புதான் ஆபத்தானது. நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், இவ்வகைச் சிறுநீரகச் செயலிழப்பைச் சந்திக்க வேண்டிவரும். நோய் ஆரம்பித்துப் பல மாதங்கள் ஆன பின்னரும் அறிகுறி எதுவும் தெரியாமல் உடலுக்குள் உலா வருவது இதன் மோசமான குணம்.‘சிகேடி’யின் தொடக்க நிலையில் இருக்கிறவர்களுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும், மற்றொரு சிறுநீரகம் வேலை செய்வதால், சிறுநீர் பிரிவதில் குறை இருக்காது. ஆகவே, தங்களுக்கு நோய் இருப்பதை நம்ப மறுத்து, சிகிச்சைக்கு வராமல், நிரந்தரச் சிறுநீரகச் செயலிழப்பை வரவழைத்துக்கொள்கின்றனர்.

‘சிகேடி’யின் அறிகுறிகள் என்ன?

இரவில் அடிக்கடி சிறுநீர் போவது இதன் ஆரம்ப அறிகுறி. அப்போதே விழித்துக்கொண்டால், பிரச்சினை பெரிதாகாது. இல்லாவிட்டால், சோர்வு தலைகாட்டும். நடந்தால் மூச்சு வாங்கும். இதயம் படபடக்கும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டலும் வாந்தியும் தொல்லை செய்யும். எடை குறையும். அடிக்கடி விக்கல் வரும். சருமத்தில் அரிப்பு ஏற்படுவதும் ரத்தம் கசிந்து சிவப்புத் திட்டுகள் தோன்றுவதும் உண்டு. ரத்தசோகை ஏற்பட்டு முகம் வெளுக்கும்; பாதம் வீங்கும். தலை முதல் பாதம்வரை எல்லா உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, அந்தந்த உறுப்பின் வெளிப்பாடாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அறிகுறிகள் தோன்றும். இவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே ‘சிகேடி’யை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிறுநீரகத்தைக் காக்க முடியும்.

கீழ்க்கண்டவர்கள் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், குடும்பத்தில் யாருக்காவது ‘சிகேடி’ பிரச்சினை இருக்கிறவர்கள், சிறு வயதில் சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள், ஆண்டுக்கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடுபவர்கள்… இவர்கள் வருஷத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்ய வேண்டியது கட்டாயம். அத்தோடு மாதம் ஒருமுறை ரெகுலர் மருத்துவ செக்-அப் செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். அப்போதுதான் சிறுநீரகத்துக்கு ஏற்படுகிற சீரழிவை முதல் கட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும்.

என்ன சிகிச்சை?

‘சிகேடி’ ஏற்பட்டுவிட்டாலே டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்று பலரும் அவசர முடிவுக்கு வருகிறார்கள். அப்படியல்ல. இந்த நோயில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என மொத்தம் 5 கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று கட்டங்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதுமானது. வேளாவேளைக்கு மறக்காமல் மருந்து சாப்பிடுவது, புரதமும் பொட்டாசியமும் குறைந்த உணவைச் சாப்பிடுவது, நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, கொழுப்பைக் குறைப்பது, உப்பைக் குறைப்பது, தண்ணீரை ‘அளந்து’ குடிப்பது போன்ற பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், சுமார் பத்து வருடங்களுக்குப் பெரிதாகச் சிக்கல் எதுவும் ஏற்படாமல் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும்.

இவற்றையெல்லாம் தாண்டி நோய் அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது என்றால், அப்போது ‘டயாலிஸிஸ்’ அவசியப்படும். அதேநேரம், நோய் கடைசி கட்டத்துக்குச் (End stage renal disease) சென்றுவிட்டால், ‘டயாலி ஸிஸ்’ சிகிச்சையும் கைவிரித்துவிடும்; அந்த நிலைமையில் பழுதான சிறுநீரகத்தை மாற்றியாக வேண்டும். அதற்கு உயிருடன் இருப்போரிட மிருந்தும் மூளைச்சாவு மூலம் இறந்தவரிடமிருந்தும் சிறுநீரகம் பெறப்படுகிறது.

என்ன சிக்கல்?

இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இந்த சிகிச்சை தேவைப்படுவோர் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வழியில்லை. நடைமுறையில் இந்தியாவில் வருடத்துக்குச் சுமார் 3 லட்சம் பேருக்குச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால்,  7,500 பேருக்குத்தான் சிறுநீரகம் கிடைக்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்காவிலிருந்து செயற்கைச் சிறுநீரகம் (Bio artificial kidney) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய செய்தி வந்துள்ளது. செயற்கைக் கால், செயற்கைக் கண், செயற்கைக் கணையம்… இந்த வரிசையில் இப்போது செயற்கைச் சிறுநீரகம். இது நடைமுறைக்கு வருமானால் லட்சக்கணக்கான சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

செயற்கைச் சிறுநீரகம் எப்படி வேலை செய்கிறது?

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். சிலிக்கான் நானோ தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. இதில் மின் வயர்கள், பேட்டரி என்று எதுவுமில்லை. அலைபேசி பேட்டரி அளவில் உள்ள இந்தக் கருவியைப் பயனாளியின் வயிற்றுக்குள் பதித்து, ஒரு முனையை அவரது ரத்த ஓட்டத்திலும் மறுமுனையை சிறுநீர்ப்பையுடனும் இணைத்துவிடுகின்றனர். ரத்த அழுத்தம் தரும் விசையில் இது இயங்குகிறது.

இதில் இரு பகுதிகள் உள்ளன. ‘ஹீமோஃபில்டர்’ எனும் ரத்த வடிகட்டி ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை முதலில் பிரித்து எடுத்துவிட்டு, அதனோடு இணைந்த ‘பயோரியாக்டர்’ எனும் பகுதிக்கு அதை அனுப்பிவிடுகிறது. இதில் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட சிறுநீரக செல்கள் இருக்கின்றன.அவை அந்த ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையான தண்ணீர், குளுக்கோஸ், சில உப்புகளை மறுபடியும் உடலுக்குள் கொண்டு சென்றுவிடுகின்றன. மிச்சமுள்ளதை மட்டும் சிறுநீர்ப்பைக்கு அனுப்பி சிறுநீராக வெளியேற்றுகின்றன.

பொதுவாக, செயற்கைச் சிறுநீரகம் போன்ற கருவிக்குள் ரத்தம் செல்லும்போது ரத்தம் உறைந்துவிடும். இதுவரை இதுதான் இந்தக் கண்டுபிடிப்பில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது வந்துள்ள சிலிக்கான் நானோ தொழில்நுட்பம் இந்தச் சிக்கலைத் தீர்த்துள்ளது. இந்தப் புதிய கருவியில் ரத்தம் உறையவில்லை என்பது முக்கியமான திருப்பம். இதுவரை இந்தக் கருவி பொருத்தப்பட்ட அனைவரும் நலமாக உள்ளனர். அடுத்த ஆண்டில் இது மருத்துவச் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிஜமானால், நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஆயுளை நீடிக்கும் அற்புதமான கண்டுபிடிப்பாக இது இருக்கும்.

கட்டுரையாளர், 
பொதுநல மருத்துவர், 
தொடர்புக்கு:  gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x