Last Updated : 25 Mar, 2017 11:13 AM

 

Published : 25 Mar 2017 11:13 AM
Last Updated : 25 Mar 2017 11:13 AM

சந்தேகம் சரியா 28: வெறும் வயிற்றில் வெண்ணெய் சாப்பிடலாமா?

நான் கல்லூரி மாணவி, ஒல்லியாக இருக்கிறேன். “காலையில் எழுந்ததும் வெண்ணெய் சாப்பிட்டால் உடல் தெம்பாக மாறிவிடும்” என்கிறார் என் அம்மா. ஆனால், “காலையில் எழுந்ததும் மோர் அல்லது நீராகாரம் குடித்தால் உடல் குளிர்ச்சி ஆவதோடு தெம்பாகவும் இருக்கும்,” என்கிறார் அப்பா. யார் சொல்வது சரி?

அப்பா சொல்வதுதான் சரி.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோர் அல்லது நீராகாரம் குடிப்பது உடலுக்கு நல்லது. நீங்கள் ஒல்லியாக இருப்பதால் மோர் அருந்துவதுதான் மிக நல்லது. காரணம், நீராகாரத்தில் உள்ளதைவிட மோரில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதனால் உடலுக்கு நல்ல தெம்பு கிடைக்கும்.

குளிர்ச்சி தரும் மோர்

தயிரிலிருந்து தயாரிக்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த புரோபயாடிக் உணவு, மோர். பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் உள்ளன. ஆனால், இதில் கலக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து இந்தச் சத்துகளின் அளவு மாறலாம். இரண்டு வயதுக்கு மேல் எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் அருந்துவதற்கு ஏற்ற பானம் மோர்.

இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. வாய் வறட்சியைப் போக்குகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், அல்சர், அஜீரணம் போன்ற பல வயிற்று நோய்களுக்கு மோர் ஒரு அருமருந்து. காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். இது தவறு. மோரில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் காய்ச்சல், சளி ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

‘பதார்த்தக் குணச் சிந்தாமணி’ எனும் பழந்தமிழ் நூலில் ‘உருக்கிய நெய்யும் பெருக்கிய மோரும் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்று கூறப்பட்டிருப்பதை இங்கு நினைவுகூரலாம். சித்த மருத்துவ முறையில் பல மருந்துகள் மோரில் கலந்து கொடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

வெண்ணெய் கெட்டதா?

கறந்த பாலைக் காய்ச்சி, உறை ஊற்றித் தயிராக்கிப் பிறகு அதை மோராக்கிக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கிறது. இதுதான் வெண்ணெய். இதில் 80 சதவீதம் கொழுப்புச் சத்துதான் உள்ளது. இதை அப்படியே எடுத்துப் பயன்படுத்துவதும் உண்டு. சிலர் உப்பு கலந்தும் பயன்படுத்துகிறார்கள்.

இதிலுள்ள கரோட்டீன் அளவைப் பொறுத்து இதன் நிறம் சாதாரண மஞ்சளாகவோ, அடர்ந்த மஞ்சளாகவோ காணப்படும். இது தயாரிக்கப்படும் முறையைப் பொறுத்து வெண்ணெயில் 400-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக வெள்ளை வெண்ணெய், மஞ்சள் வெண்ணெய் என்ற இரு வகைகளில் கடைகளில் விற்கப்படுகின்றன. வெள்ளை வெண்ணெயில் கொழுப்பு 82 சதவீதமாகவும் மஞ்சள் வெண்ணெயில் இதன் அளவு 80 சதவீதமாகவும் இருக்கிறது. பாலாக இருந்தபோது, அதில் இருந்த கால்சியம், புரதம், பாஸ்பரஸ், மாவுச்சத்து ஆகியவை வெண்ணெயில் குறைவாக உள்ளன. வைட்டமின் - ஏ மட்டும் இதில் அதிகம்.

தனி வெண்ணெய் ஆனாலும் சரி, வெண்ணெய் கலந்த உணவுகள் ஆனாலும் சரி காலையில் எழுந்ததும் சாப்பிடக்கூடாது. இரவிலும் சாப்பிட வேண்டாம். காலையில் சாப்பிட்டால் பசியைக் குறைத்துவிடும், வயிறு மந்தமாகிவிடும். பிறகு காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது. இரவில் இவற்றைச் சாப்பிட்டால், செரிமானம் குறைந்து உறக்கம் கெடும். வெண்ணெய் கலந்த உணவுகளை மதிய நேரங்களில் சாப்பிடுவதுதான் நல்லது.

அளவோடு சாப்பிடலாம்

வளரும் குழந்தைகள், இளம் வயதினர், உடல் உழைப்பு அதிகமுள்ளவர்கள், உடல் மெலிந்தவர்கள், காச நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு நிறைய கலோரிகளும் ஊட்டச்சத்துகளும் தேவைப்படும். இவர்கள் வெண்ணெய் கலந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒல்லியாக இருப்பதால் வெண்ணெயை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் 5 முதல் 10 கிராம்வரை வெண்ணெயைச் சேர்த்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக வெண்ணெயைச் சாப்பிட்டாலும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. இதிலுள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களில் படிந்து இதயம், மூளை, ரத்தக் குழாய் சார்ந்த நோய்களை ஏற்படுத்திவிடும்.

(அடுத்த வாரம்: பால் குடித்தால் சளி பிடிக்குமா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x