Last Updated : 24 Jun, 2017 12:16 PM

 

Published : 24 Jun 2017 12:16 PM
Last Updated : 24 Jun 2017 12:16 PM

சந்தேகம் சரியா 41: தொக்கம் எடுத்தால் வாந்தி நிற்குமா?

எனக்கு வயது 50. அடிக்கடி வாந்தி வருகிறது. தொக்கம் எடுத்தால் வாந்தி நின்றுவிடும் என்று சொல்கிறார்கள். இது சரியா? இந்த வயதில் தொக்கம் எடுத்துக்கொள்ளலாமா?

எந்த வயதிலும் தொக்கம் எடுக்கத் தேவையில்லை. தொக்கம் எடுத்துக்கொள்வதால் வாந்தி நிற்கும் என்று சொல்வதும் சரியில்லை. நம் உடலமைப்புப்படி வயிற்றுக்குள் சென்றுவிட்ட எந்தப் பொருளையும் வாயில் ஒரு குழலை வைத்து உறிஞ்சி எடுத்துவிட முடியாது.



வாந்திக்கு என்ன காரணம்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது 'வாந்தி எடு', ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.

பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத்தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஒவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

முக்கியக் காரணங்கள்

கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன்சிறுகுடல் அடைப்பு, உணவுக்குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தலாம்.

முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.

காதும் ஒரு காரணம்தான்!

காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அபாரட்டஸ்' என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்க வைக்கிறது; உட்கார வைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்து / கடல் / விமானப் பயணங்களின்போது வாந்தி வருகிறது.

உளவியல் காரணங்கள்

சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாகலாம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ள பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள், காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது. உங்களுக்கு என்ன காரணத்தால் வாந்தி வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். பலன் கிடைக்கும்.

தொக்கம் - ஏமாற்று வேலை

தொக்கம் எடுப்பது ஏமாற்று வேலை. வாய்க்குள் பொருட்களை மறைத்து வைத்துக்கொண்டு, ஒரு குழலின் மூலம் வாய்க்குள் ஊதி அல்லது உறிஞ்சி எடுப்பதைப்போல் பாசாங்கு செய்து, வயதுக்கு ஏற்ப பொருட்களை எடுத்து வைப்பார்கள். இம்மாதிரியான போலி சிகிச்சைகளில் மனம் சார்ந்த வாந்தி நிற்கும். இதை நம்பி மற்ற காரணங்களுக்கு வாந்தி எடுப்பவர்களும் தொக்கம் எடுத்து ஏமாந்து போகின்றனர்.

தொக்கம் எடுத்தால் வாந்தி நிற்கும் என்பது உண்மையானால், மருத்துவர்களும் அந்தக் கலையைக் கற்றுக்கொள்வது சிரமம் இல்லையே!

(அடுத்த வாரம்: உடல் எடையைக் குறைக்க மாத்திரையைச் சாப்பிடலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x