Last Updated : 12 Aug, 2014 01:01 PM

 

Published : 12 Aug 2014 01:01 PM
Last Updated : 12 Aug 2014 01:01 PM

காக்காய் வலிப்பு: மூடநம்பிக்கைகளும் உண்மையும்

கை கால்களை வெட்டி வெட்டி இழுத்து, வாயில் நுரை தள்ளி, கண்கள் மேலே சுழன்று, பற்களுக்கிடையே நாக்கு கடிபட்டு, வாயில் ரத்தம் வழிய, சுயநினைவின்றிச் சாலையோரம் பரிதாபமாக விழுந்து கிடப்பவரை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இதற்குக் காரணமான வலிப்பு நோய் பற்றி நிறைய தவறான எண்ணங்கள் நிலவுகின்றன.

பண்டைய ஆராய்ச்சிகள்

காக்காய் வலிப்பு எனத் தவறாக அழைக்கப்படும் இந்த நோய் மிகவும் பரவலாகவும் அதிகமாகவும் காணக்கூடிய ஒரு நரம்பு மண்டல நோய். எபிலாம்பானீன் (Epilambanein) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, எபிலெப்சி என்ற சொல் வழக்குக்கு வந்தது.

இது மிகவும் தொன்மையான நோய் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமிய (இன்றைய ஈராக்) நாகரிகக் காலத்தின் மண் கல்வெட்டுகளில் இந்த நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆத்ரேயா, ‘மனது, மூளையில் ஏற்படும் மாற்றங்களால், அவ்வப்போதுவரும் நினைவிழத்தலும் மறதியும் வலிப்புடன் சேர்ந்தே வரும் நிலை’ என்று வலிப்பு நோயை விவரிக்கிறார்.

வலிப்பு நோய் மூளை தொடர்புடையது என்று கிரேக்க மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரடீஸ் (கி.மு. 460-355), கண்டறிந்து சொல்வதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்திய மருத்துவத்தில் வலிப்புக்கான காரணம், மனமும் மூளையும்தான் என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘அபஸ்மரா’ என்ற நூல் வலிப்பைப் பற்றி மிக விரிவாக விவரிக்கிறது. ‘அபஸ்மராபூர்வரூபா’ என்று வலிப்புக்கு முன் வரும் ‘எச்சரிக்கை சமிக்ஞைகள்’ (ஆரா aura) பற்றியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

19 20-ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் டபிள்யு.கோவர்ஸ், சர் சார்லஸ் லோகாக், ஜான் ஹியூலிங்ஸ் ஜேக்சன், ஜீன் மார்டின் ஷார்கோ, பால் ப்ரோக்கா, ஜோஹான்ஸ் பர்ஜர் போன்றோரின் அரிய கண்டுபிடிப்புகளால், வலிப்பு நோயைப் பற்றிய தெளிவான சிந்தனைகள் தோன்றின.

வலிப்பு (Seizures/Fits/Convulsions) என்றால்?

# சிறிது நேரமே இருக்கக்கூடிய (சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை)

# நினைவிழக்கக்கூடிய (சில வலிப்புகளில் இது இருக்காது)

# கை, கால் வெட்டி இழுப்பதோ

# பொதுவான நடத்தையில் மாறுதலோ உதாரணமாக,

# தன் உணர்வின்றிக் கை, கால்களைத் தட்டுதல்

# திருதிருவென்று முழித்தல்

# சம்பந்தம் இல்லாமல் பேசுதல்

# கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்

# குழப்பமான மனநிலையில் இருத்தல்

போன்றவை உள்ள ஒரு ‘சம்பவம்’ அல்லது ‘நிகழ்வு’தான் வலிப்பு (Seizures/Fits/Convulsions).

வலிப்பு எதனால் ஏற்படுகிறது?

நரம்பு மண்டலம் என்பது ‘நியூரான்’ எனப்படும் சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை என்று சொல்லலாம்; மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை.

நியூரான்களின் மின்அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன. வலிப்பின்போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாகி, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் மின் புயல் உருவாகிறது. அதுவே வலிப்புக்குக் காரணமாகிறது.

காரணங்கள்

இரண்டு வகை வலிப்புகள் உள்ளன. ஒன்று, மேற்கூறியபடி மூளையிலேயே உருவாவது. இன்னொன்று, மூளைக்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால், மூளை பாதிக்கப்பட்டு அதனால் வருவது தலைக் காயங்கள் (சாலை விபத்துகள், உயரத்திலிருந்து விழுதல்), மூளைக் கட்டிகள், ரத்தஓட்ட பாதிப்புகள், நோய்த் தொற்றுகள் (மூளை காய்ச்சல், மெனிஞ்ஜைடிஸ்), பொதுவான சில மருத்துவ நோய்கள் (நீரிழிவு வியாதி, ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள்) போன்றவை வலிப்புகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

பொதுவாக எந்தக் காரணமும் கண்டறிய முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். இவையே எபிலெப்சி அல்லது காக்காய் வலிப்பு எனப்படும். மேற்கூறிய காரணங்களால் ஏதாவது ஒன்று இருந்தால், அது ‘காரண வலிப்பு’ (Secondary seizures) என்றழைக்கப்படும்.

வலிப்பு நோய் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம்?

# வலிப்பு நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதல்ல. பல நேரம் காரணமே இல்லாமல் வலிப்பு வருவதும் போவதுமாக இருக்கும்!

# முன்னெச்சரிக்கையாக ‘ஆரா’ (aura) மட்டுமோ, அல்லது முழுவீச்சுடன் கை கால் வெட்டி இழுத்தலுடன் நினைவிழத்தலோ வரக்கூடும். வந்தது வலிப்புதானா என்ற குழப்பத்தை நோயாளிக்கே ஏற்படுத்தும்.

# எப்போது வரும், என்ன செய்தால் வரும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை ஏதுமின்றி வரும் என்பதால், எப்போதும் மனதில் ஒரு விதப் பய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். யாருக்கு வரும் என்பதும் எப்படி வரும் என்பதையும் முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதுதான் குழப்பத்துக்கு முக்கியக் காரணம்.

# வலிப்பு தனியாகவோ அல்லது மூளை சம்பந்தமான வேறு பல நோய்களுடனோ சேர்ந்து வரக்கூடும்.

# தனக்கு வலிப்பு நோய் இருப்பதை ஏற்க மறுக்கும் மனித மனம் குழப்பத்துக்கு மற்றுமொரு முக்கியக் காரணம்.

- டாக்டர் பாஸ்கரன், பொது நல மருத்துவர்

தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x