Published : 07 Apr 2018 10:55 AM
Last Updated : 07 Apr 2018 10:55 AM

நலம் தரும் நான்கெழுத்து 29: மரபணு தீர்மானித்ததை மாற்ற முடியாதா?

 

மரபணுக்கள் துப்பாக்கியைத் தோட்டாவால் நிரப்புகின்றன. ஆனால், சூழ்நிலைதான் அதன் விசையை இழுக்கின்றன.

- ப்ரூஸ் லிப்டன்

எதிர்மறையான வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயான சமநிலையில், நமது மனநிலையும் செயல்பாடுகளும் இருப்பதைக் கடந்த வாரங்களில் பார்த்துவந்தோம். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே மனிதர்களது மனநிலை, செயல்பாடுகளுக்குக் காரணம் பிறப்பா வளரும் சூழலா - இரண்டில் எது முக்கியமானது என்னும் கேள்வி இருந்து வருகிறது. ஒருவரது சிந்தனை, செயல்பாடுகள் போன்றவையெல்லாம் அவரது இயற்கையான மரபணுக்களிலேயே புதைந்து உள்ளதா அல்லது எல்லாமே அவர் வளரும் சூழ்நிலை சார்ந்ததுதானா?

மருத்துவ வட்டாரங்களில் குறிப்பாக மரபணு ஆராய்ச்சியாளர்களுக்குப் பரிச்சயமானவர்கள் ஜிம் இரட்டையர்கள். அவர்கள் இரட்டையர்களாக 1940-ம் ஆண்டு பிறந்த சில வாரங்களிலேயே வெவ்வேறு தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்கள். 39 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்தபோது ‘மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் ஒன்று சேர்ந்தபோது பேச முடியவில்லையே’ என்பதற்கேற்ப, ஆச்சர்யத்தில் பேச மறந்தனர். காரணம் இருவரும் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தனர். இருவருக்கும் ஒரு முறை விவாகரத்தாகிவிட்டது. இருவரின் முதல் மனைவிகளின் பேரும் லிண்டா. இரண்டாவது மனைவிகளின் பெயர் பெட்டி. இருவரின் மகன்கள் பெயரும் ஆலன். இருவர் குடிக்கும் சிகரெட், பீர், ஓட்டும் கார் எல்லாமே ஒரே பிராண்ட்தான்.

இதிலிருந்து ஒருவரின் விருப்பு, வெறுப்பு, செயல்கள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதில் மரபணுக்களுக்கு எவ்வளவு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது புரியும். நம் ஊரிலும் இரட்டையர்கள் பொதுத்தேர்வில் ஒரே மாதிரி மதிப்பெண்கள் எடுத்தனர் எனக் கேள்விப்படுகிறோம் அல்லவா? ஒரே மாதிரி மரபணுக்களைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு சூழல்களிலும் ஒரே மாதிரியே இருப்பார்கள். இதையே மாற்றியும் சொல்லலாம். என்னதான் ஒரே சூழ்நிலை அமைந்தாலும் (உதாரணமாக ஒரே பள்ளி) வெவ்வேறு விதமான மரபணுக்களை உடையவர்களது குணமும் செயலும் பெரிதும் வேறுபட்டும் அமைகின்றன. ஒன்றுபோல் மற்றொன்றில்லை. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம்.

தனித்தன்மையை அறிவோம்

இப்படிச் செய்வது ஒவ்வொருவரின் தனித்தன்மையை உணர்ந்து அவரது ஆளுமை உருவாக அனுமதிக்க உதவும். இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரை உயர்வாகவோ தாழ்வாகவோ நடத்தாமல் இருக்க உதவும். குழந்தைகளில் சிலர் கணிதத்தில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் மொழிப் பாடங்களில். இன்னும் சிலர் விளையாட்டில். இந்த வேறுபாடுகளை உணர்ந்து, அவர்களது தனித்தன்மையை வளர்ப்பது அவசியம்.

அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை, குணம் எனப் பெரிதும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்; சிலர் கல்லுளி மங்கனாக இருப்பார்கள். நினைவுத்திறன், கவனம், உடல்வலிமை போன்றவையும் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆலோசனைகள் மட்டும் போதுமா?

மனநோய்களில் சில மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பால் வருகின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பொதுமைப்படுத்திப் பேசுவதும் இது போன்ற அறியாமையே. ‘நீ நினைத்தால் மட்டும் போதும். உன்னை மாற்றிக்கொள்ளலாம்’ என அவர்களிடம் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர்களுக்குச் சூழ்நிலை மாற்றமோ மனநல ஆலோசனைகள் மட்டுமோ போதாது. மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருந்துகளும் தேவைப்படுகின்றன.

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே’ என்பது பாதிதான் உண்மை. அதேநேரம் எல்லாமே இயற்கையிலேயே முடிவானது . நம்மால் எதையும் மாற்ற முடியாது என ஒதுங்கிவிடுவதும் கூடாது. ‘கடலுக்குள் சேரும் தண்ணீர் உப்பானது, சிப்பிக்குள் சேரும் தண்ணீர் முத்தானது’ என்பதுபோல் முயற்சி, சூழ்நிலைகளால் எப்பேர்பட்ட தடங்கலையும் தாண்டி சாதித்துள்ள பலரையும் நாம் பார்த்திருக்கிறோம்.

நான் இப்படித்தான், என்னால் இதெல்லாம் முடியாது என ஒதுங்கிவிடுவதும், இவர்கள் இப்படித்தான் மாற்ற முடியாது என முயலாமலேயே விடுவதும் இதுபோன்ற முன்முடிவுகளால்தான். இது ஒருவிதப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அணுகுமுறையே.

மரபணு பாதி… சூழ்நிலை மீதி…

மன நோய்களை எடுத்துக்கொண்டால்கூட அவை மரபணு, மூளையிலே ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படுபவை என்பது முக்கியம் என்றாலும், அவை மட்டுமேதான் அனைத்துக்கும் காரணம் என முடிவெடுப்பது மனிதர்களை வெறும் பொருளாகப் பார்ப்பதற்குச் சமம். மருந்துகளின் விற்பனைக்கு மட்டுமே இந்த அணுகுமுறை உதவும்.

மாங்கொட்டையை விதைத்துவிட்டுத் தென்னை மரம் விளையும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அது இயற்கை, மாற்ற முடியாது. ஆனால், நட்ட மாமரம் எவ்வளவு உயரமாக வரும், எவ்வளவு கனிகள் தரும் என்பதெல்லாம் அதை வளர்ப்பவர்களின் கையில்தான் உள்ளது.

பிறப்பு, வளர்ப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டுக்கு மட்டுமல்ல, மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை என வாழ்க்கையின் எல்லா விஷயங்களுக்கும் இந்தச் சமநிலையே நமக்கு நலம் தரும்.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x