Published : 28 Apr 2018 12:16 PM
Last Updated : 28 Apr 2018 12:16 PM

இதுக்கு சொல்லலாமா ‘சியர்ஸ்?’

இன்றைக்குப் பல ஆட்கொல்லித் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தொற்றாநோய்களான உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்றவற்றால் உயிரிழப்புகளும், வாழ்க்கைத் தரத்தில் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் சத்தமில்லாமல் இடம்பிடித்திருக்கும் இன்னொரு நோய்… மது அடிமைத்தனம்!

மது குடிப்பதை ஒருவரால் நிபந்தனையின்றி நிறுத்தமுடியாத தன்மை, நிச்சயமாக நோய்நிலைதான். ‘கொஞ்சமே கொஞ்சம் மது அருந்தினால் உடலுக்கு நல்லதுதான்’ என்ற போதனைகள், நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், மருத்துவர்கள் வட்டாரத்திலும் சில நேரம் தவறாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

மூளை நரம்புகள், குறிப்பிட்ட அளவு மதுவுக்குப் பழகிவிட்டால், பின்பு அதே அளவு அருந்தும்போது போதை ஏற்படாமல் போய், போதையைப் பெறுவதற்காகவே மேலும் மேலும் மதுவின் தேவை அதிகரிக்கும். இதனால் நாளடைவில் பெரும்பாலோர் மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள். இன்றைக்குக் கொஞ்சமாகக் குடிப்பவர்கள்தான், நாளைக்கு மொடாக்குடிகாரர்களாக மாறுவார்கள்.

திடீரென நிறுத்தலாமா?

‘நீங்கள் ஏன் மதுவை நிறுத்த முன்வரவில்லை?’ என்று ஒருவரிடம் கேட்டால், ‘திடீரென மது அருந்துவதை நிறுத்தினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள்’ என்ற பதில் வரும். இப்படிச் சொல்லிக்கொண்டே தங்கள் ஆயுளைக் குறைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரமாக இறங்குவார்கள். இதுபோன்ற பதில்கள், மது அருந்துவதை நியாயப்படுத்தும் முயற்சிதானே ஒழிய, நிச்சயம் உயிர் மீது உள்ள பயம் கிடையாது.

அடிமைத்தனத்துக்குள் இருக்கும் ஒருவரால் நிச்சயமாக மதுவின் அளவைப் படிப்படியாகக் குறைத்து நிறுத்தமுடியாது. ஏனென்றால் வழக்கமான அளவைக் குறைத்தாலே தூக்கமின்மை, உடல் நடுக்கம், பதற்றம் போன்றவை ஏற்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் அதிகம் அருந்தினால் மட்டுமே மேற்கண்டவை இல்லாமல் ஆகும் என்ற நிலையில், பழைய அளவுக்கே குடியைத் தொடர்வதற்கான சாத்தியமே அதிகம். எனவே, குடியை ஒரே நாளில் முற்றிலுமாக நிறுத்துவதே நல்ல பலன் தரும்.

பிரச்சினையும் தீர்வும்

தினமும் சாக்லேட் சாப்பிட்டுப் பழகிவிட்ட குழந்தையின் கையிலிருந்து சாக்லேட்டைப் பிடுங்கிவிட்டால் அது எப்படி அழுது புரளுமோ, அதுபோலவே தினமும் கிடைத்த ஒரு போதைப் பொருள் திடீரென்று கிடைக்காவிட்டால் மூளை நரம்புகளும் விறைத்துக்கொண்டு நிற்கும். இதனால் பெரும்பாலும் உடல் நடுக்கம், தூக்கமின்மை, எரிச்சல், பதற்ற உணர்வு ஏற்படும். அரிதாகச் சிலருக்கு மனக்குழப்பம், அதீத பயம், காதில் மாயக்குரல்கள் கேட்பது, கண்ணில் மாய உருவங்கள் தெரிவது போன்ற அறிகுறிகளை உடைய ‘டெலிரியம்’ (Delirium) என்ற பிரச்சினை உருவாகலாம். ஒரு சிலருக்கு வலிப்பு அறிகுறிகளும் வரும்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைக்கு வேறு தின்பண்டங்களையோ மிட்டாயையோ கொடுத்தால் அது எப்படி சமாதானம் ஆகிவிடுமோ, அதுபோலவே மதுவின் வேதியியல் தன்மைக்கு ஒத்த மருந்துகளை உட்கொள்வதால் மேற்குறிப்பிட்ட எந்தப் பாதிப்புகளும் ஏற்படாமல் ஒரு நபரால் மதுவின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியும். எனவே, மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நிறுத்துவது சிறந்தது.

மாத்திரை, ஒவ்வாமை தருமா?

மேற்கண்ட சிகிச்சை முறையானது திடீரென நிறுத்தும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான ‘மதுவின் நச்சு நீக்கும்’ முறைதான். பலர் ‘மாத்திரை சாப்பிட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கேள்விப்பட்டேன்’ என்று சொல்லி சிகிச்சையே எடுப்பதில்லை. அவர்கள் நினைப்பதுபோல இந்த சிகிச்சை முறை எல்லோருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை.

கைசூப்பும் குழந்தைகளுக்கு தூங்கும்போது விரலில் வேப்ப எண்ணெய் தடவிவைக்கும் பழக்கம் முன்பு இருந்தது. வேப்ப எண்ணெயின் கசப்பை அனுபவித்த குழந்தைகள், நாளடைவில் வாயில் விரல் வைப்பதைத் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதைப் போன்ற சிசிச்சை முறைதான் ‘டைசல்ஃபிரம் சிகிச்சை’ (Disulfiram). குடியை நிறுத்தி சில நாட்களுக்குப் பின் அவர்கள் மீண்டும் குடிக்காமல் இருக்க, மதுவின் மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தவே இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

இதில் தரப்படும் மருந்துகளால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. ஆனால், மருந்தையும் எடுத்துக்கொண்டு குடியையும் தொடர்ந்தால் வாந்தி, தலைசுற்றல், மரண பயம், மது வாடையால் குமட்டல் ஆகிய ‘ஒவ்வாமை’கள் ஏற்பட்டு, குடியின் மீது வெறுப்பு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், மனக் கட்டுப்பாட்டை உருவாக்குவதே இந்த சிகிச்சையின் நோக்கம்.

மனக் கட்டுப்பாடு மட்டும் போதுமா?

குடிக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு அழைத்தால் ‘என் மனக் கட்டுப்பாட்டால் என்னால் குடியை நிறுத்திக்கொள்ள முடியும்’ என்று பலர் சவால் விடுவார்கள். ஆனால், அதை ஒருபோதும் முயற்சித்துப் பார்க்க மாட்டார்கள். மனக் கட்டுப்பாடு, மருத்துவம், மனநல ஆலோசனை, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, சூழ்நிலை மாற்றம் ஆகிய எல்லாமே சேர்ந்து கிடைத்தால் மட்டுமே மது அடிமைத்தனத்திலிருந்து மீள முடியும்.

தவறான தகவல்களாலும் மூடநம்பிக்கைகளாலும் திசை திருப்பப்பட்டு சாக்குப்போக்குகள் சொல்லி, காலம் தாழ்த்தாமல், அறிவியல்பூர்வமான விளக்கங்களுக்குக் காது கொடுத்து நம்மையும் வாரிசுகளையும் காப்பாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.

ஆம்… குடி, நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டுமல்ல உயிருக்கும் சேர்த்தே கேடு!

 

குடிப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

ஒரு தவறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கிவிடும் தந்திரம் அரசியலில் மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருந்தும். ‘குடிச்சா கிட்னி பாதிச்சிரும்’ என்ற வசனத்தை பல சினிமாக்களில் கேட்கலாம். ஆனால், குடிப் பழக்கத்துக்கும் சிறுநீரகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதே மருத்துவ உண்மை.

இரைப்பை, குடல் ஆகியவற்றால் உறிஞ்சப்படும் மதுவானது, நேராக கல்லீரலுக்குத்தான் செல்கிறது. 99 சதவீத மதுவானது கல்லீரலில் செரிமானம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்து மூளை நரம்புகளுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் செல்கிறது. இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கி, நாளடைவில் மஞ்சள் காமாலை, புற்றுநோய், கல்லீரல் செயலிழப்புவரை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் சிறுநீர் வழியாகக் கழிவுநீக்கம் செய்யப்பட்டாலும், இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சிறுநீரகங்களை மாற்றுவது நடந்துவரும் இக்காலக்கட்டத்தில், கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது சாமானியருக்குச் சாத்தியப்படும் விஷயமல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x