Published : 03 Feb 2018 10:32 AM
Last Updated : 03 Feb 2018 10:32 AM

டிஜிட்டல் போதை 20: வீடியோ கேம் - இன்னும் சில நன்மைகள்

 

ல்வி தொடர்பான வீடியோ கேம்களை விளையாடினால் அல்லது விளையாடிக்கொண்டே இருந்தால் நேராக நம் வாரிசு ஐ.ஐ.டி. சென்றுவிடுவார்கள் என்று கனவு காண வேண்டாம். நடைமுறையில் கல்வி தொடர்பான வீடியோ கேம்களை உருவாக்குவதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை, எந்த குழந்தைக்கும் அது உடனே பிடித்து விடுவதில்லை. உண்மையைச் சொன்னால் ‘அது சுத்த போர்’ என சொல்லிவிட்டு குழந்தைகள் நடையைக் கட்டி விடுவார்கள்.

கவலைப்பட வேண்டாம். இதற்கும் மார்க் கைவசம் ஒரு தீர்வு வைத்துள்ளார். அவர் முன்வைக்கும் தீர்வு, தயவுசெய்து ஏனோ தானோவென வீடியோ கேம்களை உருவாக்காதீர்கள் என்பதுதான். கல்வி தொடர்பான வீடியோ கேம்களை வடிவமைக்கும்போது, அதை மிகவும் சுவரசியமானதாக வடிவமையுங்கள் என்கிறார் மார்க். அதற்காக ஆய்வு நடத்துங்கள், வீடியோ கேம்களை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே குழந்தைகளிடம் கொடுத்து விளையாடசெய்து அவர்களின் கருத்துகளைக் கேளுங்கள். குழந்தைகள் சொல்லும் ஆலோசனைகளை ஆராய்ந்து மிகவும் சுவாரசியமான கேமாக உருவாகும்வரை, அதை வெளியிடாமல் இருங்கள் என்கிறார். நீங்கள் எந்த ஒரு கோட்பட்டைக் கொண்டு வந்தாலும், அதற்கு சுவாரசியமாக நான் வீடியோ கேம் தயாரித்து தருகிறேன் என்று நம்பிக்கை அளிக்கிறார் மார்க் பெர்கின்ஸி.

வலி நிவாரணி

நாம் முன்பே பார்த்ததுபோல் இன்று வலி மேலாண்மைத் துறையில் மெய்நிகர்- வீடியோ கேம்கள், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி பயன்படுத்துவது உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. அதற்கான ஆய்வுகளும் வேகமாக நடைபெற்றுவருகின்றன. வீடியோ கேம்களை வலி நிவாரணியாகப் பயன்படுத்துவதால் போதை பொருளுக்கு அடிமையாவது குறைந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவர்கள் உலகம் முழுவதும் தங்கள் மெய்நிகர்-வீடியோ கேமை பரப்பி வருகிறார்கள். தீக்காயங்கள், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுத்தும் அதீத வலிக்கு அருமருந்தாக இந்த வீடியோ கேம்கள் இன்று பயன்படுகின்றன.

ராணுவப் பயிற்சி

ராணுவப் பயிற்சியில் விமானப் பயிற்சி, வாகனம் ஓட்டும் பயிற்சி, இக்கட்டான சூழ்நிலையை கையாளுவது என பல பயிற்சிகளுக்கு மெய்நிகர் வீடியோ கேம்கள் இன்றைக்குப் பயன்பட்டு வருகின்றன. இதனால் உயிர்ச் சேதமும் காயங்களும் தவிர்க்கப்படுகின்றன. வீடியோ கேம் விளையாடுவதால் முன்கூட்டியே திட்டமிடும் திறன் வளருவதால், சில மணி நேரம் வீடியோ கேம் விளையாடி பயிற்சி பெறுவது தகுதித் தேர்வுக்கு கட்டாயமாகி உள்ளது.

வீடியோ கேம்கள் ‘கற்றல் குறைபாடு உள்ள’ குழந்தைகளுக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும், வளர்ச்சிக் கோளாறு உள்ளவர்களுக்கும் உண்மையில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

தலைமைப் பண்புகள்

வீடியோ கேம்கள் குழுவாக இயங்கவும் தலைமைப் பண்புகளை வளர்க்கவும் பெரிதாக உதவுகின்றன. மிகக் குறைந்த நேரத்தில் தொடர்புகொள்வதையும், முடிவெடுப்பதையும், இதர மேலான்மை திறன்களையும் இவை மேம்படுத்துகின்றன. கட்டுப்பாடாகவும், ஒழுங்கமைப்புடன், சிறிது நேரம் வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு தலைமைப் பண்பு மேம்படுகிறது என பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஊக்கம் பெற

பல நேரம் நீங்கள் சோர்வாக உணர்ந்தால் கொஞ்ச நேரம் நல்ல வீடியோ கேம் விளையாடுங்கள். உங்கள் டோபமைனை அது பெருக்குவதால், உடலிலும் மனதிலும் பாசிடிவ் எனர்ஜி பெருகும். அதேநேரம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் அளவாக விளையாடுங்கள். நல்ல வீடியோ கேமா என்பதைத் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். மோசமான வன்முறையைத் துண்டும் வீடியோ கேமைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

எச்சரிக்கை

நாம் மேலே பார்த்த நன்மைகள் எல்லாம், மிகக் குறைந்த அளவும், திட்டமிட்டும் வீடியோ கேம் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள். கொஞ்சம் அசந்தாலும் அது நம்மை அடிமைப்படுத்தி வாழ்க்கையை அழித்துவிடும். அதனால் கல்வி தொடர்பான வீடியோ கேம் அல்லது அதன் நன்மைகளைப் பெற திட்டமிட்டு நேரக் கட்டுப்பாட்டுடன், அளவாக விளையாட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x