Published : 16 Dec 2017 10:23 AM
Last Updated : 16 Dec 2017 10:23 AM

டிஜிட்டல் போதை 13: மூளைக்கும் குப்பை உணவு!

 

டல் பருமன் என்பது இப்போது ஒவ்வொரு நாட்டுக்கும் பெரும் பிரச்சினையாகி வருகிறது. வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள் மத்தியில் இந்த உடல் பருமன் அதிகமாகிவருவதாகக் கூறுகிறார்கள்.

தொடர்ந்து வீடியோ கேம் விளையாடுவது உடலுக்கு எந்த உழைப்பையும் தருவதில்லை. ஒருவர் வீடியோ கேமில் அதிக நேரம் செலவிடச் செலவிட, அவர் உடலில் கொழுப்பு சேர்வதும் அதிகமாகிறது.

உண்மையில், வீடியோ கேம் விளையாடும்போது நம் உடலில் நிறைய ஆற்றலை எரிக்கும். அதன் காரணமாக, வீடியோ கேம் விளையாடும் சிறார் அளவுக்கு அதிகமாக சர்க்கரை நிறைந்த உணவை உட்கொள்கிறார்கள். அவர்கள் செலவழிக்கும் ஆற்றலைவிட இரண்டு மடங்கு ஆற்றலை சர்க்கரை நிறைந்த உணவு அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறது.

‘இன்றைய தலைமுறை நாளைய எதிர்காலம்’ என்கிறோம். ஆனால் நாளைய எதிர்காலத்துக்கு வயிற்றுக்கும் குப்பை உணவு, மூளைக்கும் குப்பை உணவைத்தான் கொடுக்கிறோம் என்பதே தற்போதைய நிதர்சனம்.

அதிகரிக்கும் மூர்க்கம்

அண்மைக் காலமாக, ஆராய்ச்சியாளர்கள் கவனித்துவரும் இன்னொரு விஷயம், சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மூர்க்கத்தனம். பல வீடியோ கேம்களில் வன்முறை அதிகமாக இருப்பதைப் பற்றிப் பல புகார்கள் எழுந்துள்ளன. இதை அறிவியல்பூர்வமாக அணுகிவிடலாம் என முடிவெடுத்தார் வாங். இவர், வன்முறை அதிகமாக உள்ள வீடியோ கேம் விளையாடும் சிறார்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

அவருடைய ஆய்வில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. மூர்க்கத்தனத்தை எப்படி அளவிடுவது என்ற பிரச்சினை வரும்போது, சூடான காரக்குழம்புப் பரிசோதனை ஒன்றை அவர் மேற்கொண்டார். இந்தப் பரிசோதனையில் பங்கேற்கும் சிறுவர்கள், முதலில் காலை முதல் மதியம்வரை தொடர்ந்து வன்முறை அதிகமான வீடியோ கேம் விளையாட வேண்டும். பிறகு, மதிய உணவை அவர்கள் ஆர்டர் செய்ய வேண்டும். அதில் உணவுடன் வழங்கப்படும் ‘சாஸ்’ குழம்பைக் கொஞ்சம் தங்களுக்கு வேண்டியதுபோல மாற்றிக்கொள்ளலாம். அதாவது குழம்பின் சூட்டை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அதிகரித்துக்கொள்ளலாம். அதேபோல குழம்பின் கார அளவையும் அதிகரித்துக்கொள்ளலாம். ஒருவர் மூர்க்கமாக இருந்தால் அதற்கேற்றார் போல் அவர் சூட்டை மட்டுமல்லாது, காரத்தையும் அதிகப்படுத்துவார்.

செலவிடும் நேரமே பிரச்சினை

பரிசோதனையின் முடிவில், வன்முறையான வீடியோ கேமை விளையாடிய பல சிறுவர்கள் பெரும்பாலும் அதிகக் காரம், அதிக சூடான குழம்பையே தேர்வு செய்திருந்தார்கள்.

அதேபோல, மூர்க்கமான கேம் விளையாடுபவர்களின் மூளை நரம்பியல், வரைவுப் படம் மூலம் ஆராயப்பட்டது. சொல்லி வைத்தாற்போல், தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையை அவர்கள் அனைவருமே இழந்திருந்தார்கள். அதிகமான டோபமைனும், அட்ரீனலினும், முன்முனைப் புறணிப் பகுதியைத் தாக்கி இருந்தன. இது மது, போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மூளைத் தாக்குதலுடன் ஒத்துப்போனது.

ஆனால், இதன்பின் பல ஆய்வுகள் வேறு மாதிரியான புரிதலை ஏற்படுத்தின. எல்லா நேரத்திலும் மூர்க்கமான வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் மூர்க்கமாகி விடுவதில்லை. மாறாக அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையை பாதித்து, அவர்களின் மூர்க்ககுணத்தை அதிகமாக்குகிறது என்கிறார்கள். இங்கு பிரச்சினை, என்ன வீடியோ கேம் விளையாடுகிறீர்கள் என்பதல்ல. எவ்வளவு நேரம் விளையாடுகிறீர்கள் என்பதுதான்.

(அடுத்த வாரம்: தனியே… தன்னந்தனியே..!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x