

என் நண்பனுக்குப் படிக்கவே பிடிக்கவில்லையாம். அவனுக்கு நீ கூற விரும்புவது என்ன, டிங்கு? – எஸ்.ஜே. ஹரிஷ், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
படிக்கப் பிடிக்கவில்லை என்பது இயல்பானதுதான். ஆனால், அதற்காகப் படிக்காமல் விட்டுவிடுவது சிறந்த செயலாக இருக்காது. படிப்புதான் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
இந்த வயதில் படிக்காமல் வேறு என்னதான் செய்ய இயலும்? படிப்புதான் நல்ல சிந்தனைகளைக் கொண்டுவரும். படிப்புதான் நல்ல வருமானத்தில் வேலையைத் தேடிக் கொடுக்கும்.
படிப்புதான் இப்போது இருக்கும் வாழ்க்கைத் தரத்தைவிடச் சற்று மேலான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் பிடிக்காவிட்டாலும், படித்துவிடுவது நல்லது.
இப்போது கொஞ்சம் கஷ்டப்பட்டுப் படித்தால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம். இப்போது படிப்பை விட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட நேரலாம். அதனால் படிப்பை விட்டுவிட வேண்டாம்.
முதலில் பாடப்புத்தகங்களைத் தாண்டி பிடித்த விஷயங்களைப் படிக்கத் தொடங்க வேண்டும். பிறகு பாடப் புத்தகங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்கிற எண்ணத்தைவிட்டு விட்டு, புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.
தனியாகப் படிப்பதில் விருப்பம் இல்லை என்றால், நண்பருடன் சேர்ந்து படிக்கலாம். சந்தேகங்களைக் கேட்கலாம். இப்படிப் படிக்கும் விதத்தை மாற்றும்போது உங்கள் நண்பருக்குப் படிப்பின் மீது ஆர்வம் வந்துவிடும் என்று சொல்லுங்கள்.
நண்பர் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையைக் கண்டு மகிழ்ச்சி. நண்பரை இன்னும் அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொள்ளுங்கள், ஹரிஷ்.
சூரியக் குடும்பத்தில் இருந்து புளுட்டோவை, கோள்களின் பட்டியலில் இருந்து ஏன் நீக்கிவிட்டார்கள் டிங்கு? – சு. இமயா, 4 -ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி, கோவை.
நல்ல கேள்வி. கோள்கள் என்றால் அவற்றுக்குச் சில அம்சங்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். கோள் என்றால் சூரியனைச் சுற்றி வர வேண்டும், கோள வடிவமாக இருக்க வேண்டும் ஆகிய விஷயங்களில் புளூட்டோ பொருந்துகிறது.
ஆனால், கோள் என்றால் ஈர்ப்பு விசை அதிகம் இருக்க வேண்டும், தான் செல்லும் பாதையில் உள்ள வான் பொருள்களை ஈர்க்க வேண்டும் அல்லது விலக்க வேண்டும்.
புளூட்டோ சிறிதாக இருப்பதால் அதுக்குப் போதுமான ஈர்ப்பு விசை இல்லை. அதனால் 2006ஆம் ஆண்டு புளூட்டோவை, கோள் என்கிற தகுதியில் இருந்து அறிவியலாளர்கள் நீக்கிவிட்டார்கள், இமயா.