

கடவுளைக் கண்டுபிடித்தது யார், டிங்கு? - வி. ஞானமணி, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஆதனூர், திருவண்ணாமலை.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியிலும் வரலாற்றிலும் கடவுள் குறித்த நம்பிக்கைகளும் கருத்துகளும் உருவாகின. ஆதி மனிதர்கள் இடி, மின்னல், புயல், மழை, விலங்குகள், நோய், மரணம் போன்ற ஆபத்துகளைக் கண்டு அச்சமடைந்தனர்.
அதனால் சூரியன், நிலவு, நெருப்பு போன்ற இயற்கையான ஆற்றல்களை வழிபட்டு, இந்த ஆபத்துகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டனர். காலம் செல்லச் செல்ல மழையை வேண்டியும் போரில் வெற்றியைத் தரும்படியும் தங்கள் கற்பனைக்கும் சூழலுக்கும் ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டனர்.
பின்னர் மனிதர்கள் நாகரிகத்தில் முன்னேறி பேரரசுகள் உருவானபோது, உலகத்தை ஒட்டுமொத்தமாக இயக்கும் சக்தி ஒன்று இருக்க வேண்டும் என்கிற சிந்தனை உருவானது. மதங்கள் இந்தச் சிந்தனையை வலுப்படுத்தின.
சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் ஓர் உளவியல் கருவியாகவே கடவுள் நம்பிக்கை பார்க்கப்படுகிறது. எனவே, இது ஒரு மனிதனால் உருவாக்கவோ கண்டுபிடிக்கவோ பட்டதல்ல; மனித நாகரிகத்தின் ஆன்மிக, சமூகப் பரிணாம வளர்ச்சியியால் உருவானது, ஞானமணி.