சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழுமா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வசிக்காது என்பது உண்மையா, டிங்கு? – ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

இயற்கையான சூழலில் சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வசிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. சிங்கங்கள் திறந்த புல்வெளிகள், புதர்க்காடுகள், வறண்ட பகுதிகளை விரும்புகின்றன. புலிகள் அடர்ந்த காடுகளையும் ஈரமான புல்வெளிகளையும் நீர்நிலைகளையும் விரும்புகின்றன.

சிங்கங்கள் கூட்டமாக வேட்டையாடக் கூடியவை. புலிகள் தனித்து வேட்டையாடுபவை. சிங்கங்களும் புலிகளும் ஒரே காட்டில் வசிக்கும் சூழல் இருந்தால், உணவுக்காகவும் வசிப்பிடத்துக்காகவும் கடுமையான போட்டி ஏற்படும்.

இதில் பலம் கொண்ட விலங்கு பலம் குறைந்த விலங்கை விரட்டிவிடும். எனவே சிங்கங்களும் புலிகளும் ஒரே காட்டில் வசிப்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் ஆசியாவிலும் சிங்கங்களும் புலிகளும் ஒரே காட்டில் வாழ்ந்திருக்கின்றன.

இன்று ஆப்ரிக்காவின் திறந்த புல்வெளிப் பகுதிகளிலும் இந்தியாவின் கிர் காட்டிலும் சிங்கங்கள் வாழ்கின்றன. புலிகளோ இந்தியாவின் பல பகுதிகளிலும் வசித்து வருகின்றன, இனியா.

சிலந்தி வலை பின்னுவது போல் பிற பூச்சிகளும் வலை பின்னுகின்றனவா, டிங்கு? – மு. சின்னன், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

சிலந்திகளைப் போலவே சில பூச்சிகளும் வலைகளைப் பின்னுகின்றன. ஆனால், சிலந்திகள் உணவை வேட்டையாடுவதற்கு வலைகளைப் பின்னுகின்றன. பிற பூச்சிகள் அதாவது நீரில் வாழும் பூச்சிகள், சில வகைக் கம்பளிப்பூச்சிகள், மரப்பட்டைகளில் வாழும் பூச்சிகள், இலைகளுக்கு அடியில் வசிக்கும் பூச்சிகள் போன்றவை பட்டுநூல்களை உருவாக்கி, கூடுகளைக் கட்டி, தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன, சின்னன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in