

இரவு வானத்தைத் தோட்டத்துடன் ஒப்பிட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த வானியலாளர் வில்லியம் ஹெர்ஷல். அதிலுள்ள நட்சத்திரங்கள் செடிகளைப்போல் பிறந்து, வளர்ந்து மடிகின்றன என்றார். இதை அவர் தத்துவரீதியில் சொன்னாலும், விண்மீன்களுக்கு என்று வாழ்க்கைச் சுழற்சி உண்டு என்பதைத்தான் அறிவியல் கூறுகிறது.
இதனைக் கண்டறிய உதவுவது ஹெச் - ஆர் வரைபடம் (H-R Diagram). பண்டைய வானியலாளர்கள் நட்சத்திரத்தை ஒரு மின்னும் புள்ளி என்று கருதி வந்தனர். அதற்குப் பிறகு வந்த நூற்றாண்டுகளில் நட்சத்திரங்களின் இருப்பிடம், அவற்றின் ஒளிரும் தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு திசை அறியப் பயன்படுத்தினர்.
ஆனாலும் நட்சத்திரங்கள் என்றால் என்ன? அவை எதனால் ஆனவை? அவை எப்படி ஒளிர்கின்றன என்பதற்கான பதிலை 19ஆம் நூற்றாண்டில் இருந்துதான் அறியத் தொடங்கினோம். 19ஆம் நூற்றாண்டில் வானியல் ஆராய்ச்சிகள் அதிக அளவில் கல்வி நிறுவனங்களாலும் தனியார் அமைப்புகளாலும் முடுக்கிவிடப்பட்டன.
ஸ்பெக்ட்ரோகிராபி எனப்படும் நட்சத்திரங்களின் ஒளியை ஆராயும் பணிகள் நடைபெறத் தொடங்கின. அப்போது வானியல் ஆய்வு என்பது கூட்டு ஆய்வாக மாறிவந்தது. அதற்கு முன்பு யாராவது ஒருவர் தொலைநோக்கியை வைத்துக்கொண்டு மாதக் கணக்கில் வானை நோட்டமிடுவார். ஆனால், அப்போது ஒருவருக்குப் பதில் பலர் இணைந்து கூட்டாகப் பணியில் ஈடுபட்டனர்.
வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் ஒளிப்படம் எடுக்கப் பட்டு, வகைப்படுத்தப்பட்டு, அளவிடப்பட்டு, ஒன்றுக்கு மற்றொன்று ஒப்பிடப்பட்டு, கணிதரீதியில் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு ஏராளமான ஆள்கள் தேவைப்பட்டனர்.
வானியல் ஆய்வுகளில் வேலைப்பிரிவினைகள் உருவாகின. இந்த நேரத்தில் ஹார்வர்டு கல்லூரி வானியல் ஆய்வகத்தின் தலைவராக இருந்த எட்வர்டு சார்லஸ் பிக்கரிங், வானியல் ஒளிப்படங்களை எடுக்க ஏராளமான பெண்களைப் பணிக்கு அமர்த்தினார். அவர்கள் கணினிகள் (Computers) என அறியப்பட்டனர்.
அவர்கள் வேலை வானியல் ஒளிப்படங்களை ஆய்வு செய்து, நட்சத்திரங்களின் பண்புகள் குறித்த தரவுகளை வகைப்படுத்துவதுதான். அந்தக் காலச்சூழலில் பெண்கள் கல்விநிலையங்களில் கணிதமும் அறிவியலும் பயிலத் தொடங்கி இருந்தனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் பல்கலைக்கழகங்களிலோ அறிவியல் நிறுவனங்களிலோ முழுநேர அறிவியலாளராகப் பணியாற்ற முடியாத நிலை இருந்தது.
இதனாலேயே இதுபோன்ற கண்காணிப்பு ஆய்வகங்களில் பணிக்குச் சேர்க்கப்பட்டனர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஆண்களுக்கு அதிகச் சம்பளம் தர வேண்டும். பெண்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் என்கிற நிலையே அப்போது நீடித்தது. மேலும், சிரமமான பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால், இதிலிருந்து வந்த சில பெண்கள்தான் நட்சத்திரங்களின் பரிணாம வரலாற்றை அறிவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஹார்வர்டில் பணியாற்றிய கணினிப் பெண்களில் வில்லியமினா ஃபிளமிங், ஆன்டோனியா மெளரி போன்றோர் வெறும் தரவுகளைச் சேகரிப்பதோடு நில்லாமல் அவற்றை ஆய்வு செய்து, நட்சத்திரங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரித்தனர்.
இதன்பின் வந்த ஆனி கேனன், முந்தைய வகைப்பாடுகளைச் சீரமைத்து O-B-A-F-G-K-M என்கிற வரிசையை உருவாக்கினார். இந்த வரிசை நட்சத்திரங்களை அதன் வெப்பநிலையில் வரிசைப்படுத்தும் முறை. O என்பது மிகவும் வெப்பம் வாய்ந்த நட்சத்திரம், M என்பது மிகவும் குளிர்ந்த நட்சத்திரம். இடையிலுள்ளவை, படிப்படியாக வெப்பத்திலிருந்து குளுமையாக்கிச் செல்லும் நட்சத்திரங்கள்.
இவற்றின் மூலம் நட்சத்திரங்களை வெப்பத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் முறையை வகுத்தார் ஆனி. இதற்குப் பிறகு நட்சத்திரங்களை அவற்றின் தொலைவுடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒளிரும் தன்மையைப் பதிவிடும் முறை உருவானது. இதில் முக்கியப் பங்களிப்பு செய்தது டச்சு வானியலாளரான எய்னர் ஹெர்ட்ஸ்ப்ரங். இவர் ஒரே ஒரு கேள்வியை முன்வைத்தார்.
ஒரே நிறத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே பிரகாசத்துடன்தான் இருக்குமா? இல்லை என்பதே பதிலாக இருந்தது. சில நட்சத்திரங்கள் அதிக ஒளிர்வுத்தன்மையுடன் இருந்தன. சில மங்கியதாகக் காட்சி அளித்தன.
இதன் மூலம் ஒரே அளவிலான மேற்பரப்பு வெப்பத்தைக் (Surface Temperature) கொண்டுள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு பிரகாசத்தில் ஒளிரலாம் என்பதைக் கண்டறிந்தார். இவற்றை மேலும் நோக்கியபோது அந்த நட்சத்திரங்கள் எல்லாம் வானில் ஏனோ தானோ என அமைந்திருக்கவில்லை. அவை ஒரு குறிப்பிட்ட வடிவில் குழுவாக அமைந்திருக்கின்றன என அறிந்துகொண்டார்.
இன்னொரு பக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல் நட்சத்திரங்களுக்கு இடையேயான தொலைவுகளை ஆய்வு செய்துவந்தார். ஒரு நட்சத்திரம் மங்கலாக இருக்கிறது என்றால், அது உண்மையில் மங்குகிறதா அல்லது தொலைவில் இருக்கிறதா என்பதே அவரது கேள்வி. இதற்கான விடையை அவர் தேடிப்போகும்போதும் ஹெர்ட்ஸ்ப்ரங்குக்குக் கிடைத்த அதே போன்ற பதில்தான் கிடைத்தது.
நட்சத்திரங்கள் ஏனோ தானோ என வானில் அமைந்திருக்கவில்லை. பெரும்பாலான நட்சத்திரங்கள் மேல் இடதுபக்கத்தில் இருந்து கீழ் வலது நோக்கி (Diagonal) ஒரு பட்டையில் திரண்டு காணப்படுகின்றன என அறிந்தார். பின்னர் இந்தப் பட்டை முதன்மை நட்சத்திரத் தொடர் (Main Sequence) என அறியப்பட்டது.
இந்த இரண்டு கண்டறிதலையும் இணைத்து ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டது. இதுவே ஹெச் - ஆர் வரைபடம். இந்த வரைபடத்தின் மூலம் நட்சத்திரங்களின் வெப்பநிலைக்கும் அவற்றின் ஒளிர்வுத் தன்மைக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இதை ஒட்டி பின்னர் வந்த கோட்பாடுகள் நட்சத்திரங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவை பிறந்து, வளர்ந்து, அழிகின்றன. அந்த வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள் அமைந்துள்ளன என்பதைக் காட்டின.
பொதுவாக ஒரு நட்சத்திரம் பிறந்து, வளர்ந்து, மடியக் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும். எந்த ஒரு மனிதராலும் ஒரு நட்சத்திரத்தின் பிறப்பிலிருந்து அழிவுவரை முழுமையாகப் பார்க்க முடியாது. இந்த நிலையில் ஹெச்-ஆர் வரைபடம் லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் பல்வேறு வாழ்க்கை நிலைகளை அறிய உதவுகிறது.
இதன்பின் வந்த ஆய்வுகள் நட்சத்திரங்கள் எப்படி ஒளிர்கின்றன, அவற்றின் ஒளிர்வுக்கும் நிறைக்கும் (Mass) இருக்கும் தொடர்பு என்ன, நட்சத்திரங்களின் இயக்கத்திற்குப் பின்னால் நடைபெறும் இயற்பியல் வினை என்ன என்பதை எல்லாம் துல்லியமாகக் கண்டறிந்தன. ஏன் இந்த நட்சத்திரங்களின் வாழ்க்கையை நாம் அறிவது அவசியமாக இருக்கிறது? நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை வைத்தே நாம் அண்டத்தின் தோற்றத்தையும் அதன் வரலாற்றையும் அறிந்துவருகிறோம்.
பூமியைத் தவிர பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கும் நட்சத்திரங்களை நாம் அறிய வேண்டியிருக்கிறது. இதை எல்லாம்விட நம் பூமி உருவானதும், அந்தப் பூமியில் கிடைக்கும் பல கனமான தனிமங்கள் அனைத்தும் நட்சத்திரங்களின் மிச்சங்களே! இவ்வளவு ஏன் நம்மையே எடுத்துக்கொள்வோம்.
நம் உடலில் உள்ள கார்பன், ஆக்சிஜன், கால்சியம், இரும்பு போன்ற பல தனிமங்கள் என்றோ வாழ்ந்து மறைந்த நட்சத்திரங்களின் உள்ளேயோ, அவற்றின் இறுதி வெடிப்புகளிலோ உருவானவை. இதன்படி பார்க்கும்போது அறிவியலாளர்கள் சொல்வதுபோல் நாம் அனைவரும் நட்சத்திரங்களின் தூசுகளில் இருந்தே உருவாகி வந்துள்ளோம் என்கிற பேருண்மை விளங்குகிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com