

உயிர்களின் உடல் எதனால் உருவானது? இந்தக் கேள்வி பல நூற்றாண்டுகளாகவே மனிதர் களுக்கு இருந்தது. உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்ட முழுமையான படைப்புகள் என்கிற கருத்து வலுவாக இருந்த காலத்தில், அதை மாற்றிய ஒரு கண்டுபிடிப்பு நுண்ணோக்கி.
இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஹூக் புட்டிகளை மூடுவதற்குப் பயன்படும் மரத்தக்கையை நுண்ணோக்கியின் வழி பார்த்து, அதன் மேற்பரப்பு சிறிய அறைகளால் உருவாகி இருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து ‘சிறிய அறை’ எனும் பொருள்படும் விதமாக செல் (cell) எனப் பெயரிட்டார். ஆனால், ஹூக் பார்த்தது தக்கை என்பதால் இறந்த செல்களைத்தான் அவர் கண்டார்.
இதே நேரத்தில் வாழ்ந்த மற்றோர் அறிவியலாளரான ஆண்டன் வான் லீவன்ஹுக், இன்னும் ஆற்றல் வாய்ந்த நுண்ணோக்கிகளை உருவாக்கி, கண்ணில் பட்ட பொருள்களை எல்லாம் ஆராய்ந்தார்.
அதில் அவர் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள், உயிரணுக்கள், ரத்தச் சிவப்பு அணுக்கள் போன்றவற்றை எல்லாம் கண்டுகொண்டார். இவை எல்லாம் பார்க்கக் குட்டி விலங்குகள்போல் இருந்ததால் அவற்றைக் குறிக்கும் வகையில் ‘அனிமல்க்யூல்ஸ்’ (animalcules) எனப் பெயரிட்டார்.
இத்தகைய ஆய்வுகள் மூலம் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயிர்கள் இருப்பதும், நமது உடலிலேயே அவை காணக் கிடைப்பதும் தெரியவந்தன. ஆனால், இந்த செல்கள்தான் உயிர்களின் அடிப்படை என்பதை அறிய இன்னும் 150 ஆண்டுகள் ஆகின.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாவரவியல் சார்ந்த ஆய்வுகளில் நுண்ணோக்கிகளின் பயன்பாடு அதிகரித்தது. இந்த நேரத்தில் தாவரங்களை ஆய்வு செய்துவந்த ராபர்ட் பிரவுன் எனும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளர், தாவர செல்களின் கட்டமைப்பின் உள்ளே நுண்கரு (Nucleus) இருப்பதாகக் கூறினார்.
இந்த நுண்கருவைக் கண்டறிந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. காரணம், இதன்பின் செல்கள் குறித்த ஆராய்ச்சி எல்லாவற்றிலும் நுண்கருவை அறியும் முயற்சிகள் அதிகரிக்க, செல்களின் கட்டமைப்பு குறித்த புரிதல் ஏற்படத் தொடங்கியது.
இந்த நேரத்தில் உயிர்களின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதில் இரண்டு முக்கியமான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, உயிர்மவாதம் (Vitalism), மற்றொன்று இயந்திரவாதம் (Mechanism).
உயிர்மவாதம் என்பது நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொருள்களைவிட வித்தியாசமான ஆற்றல் ஒன்று இருக்கிறது, அதுதான் உயிர்களுக்கு இயக்கத்தையும், அதன் தனித்துவத்தையும் தருகிறது என்று கூறும் சிந்தனை. ஆனால், வேறு சில அறிவியலாளர்களோ உயிர்களின் இயக்கத்தை இயற்பியல், வேதியியல் இயக்கத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும் என்றனர்.
எப்படி ஓர் இயந்திரம் இயங்கும் விதத்தை அதன் பாகங்களின் ஒட்டுமொத்த இயக்கமாக அறிய முடியுமோ, உயிர்களின் இயக்கத்தையும் அவற்றின் பாகங்களையும் கட்டமைப்புகளையும் வைத்துப் புரிந்துகொள்ள முடியும் என்றனர்.
இது இயந்திரவாதம் என அறியப்பட்டது. இந்த இயந்திரவாதம் உயிர்களை மர்மமான ஒரு விஷயமாகக் கருதாமல் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளின் அடிப்படையில் வரையறுத்தது. இதன் அடிப்படையிலேயே செல்களும் அணுகப்பட்டன.
இந்தச் சூழலில் செல்கள் ஆராய்ச்சியில் பங்குகொண்ட முக்கியமானவர்கள் தியடோர் ஷ்வானும் மத்தியாஸ் ஜேக்கப் ஷ்லைடனும். இருவருமே ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். ஜெர்மனியில் பல்கலைக்கழக ஆராய்ச்சியைமையமாகக் கொண்ட புதிய அறிவியல் பண்பாடு வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது.
குறிப்பாகக் கோட்பாட்டுரீதியான ஆய்வுகளைத் தாண்டி பரிசோதனைக்கூட ஆய்வுகள் அதிகரித்தன. ஷ்லைடன் தொழில்ரீதியான தாவரவியலாளர் கிடையாது. உண்மையில் வழக்கறிஞராக இருந்தவர், பிறகு ஆர்வத்தால் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
நுண்ணோக்கிகளின் மூலம் தாவரங்களை ஆராய்ந்தவர், 1838ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றில் செல்கள்தான் தாவரங்களின் அடிப்படை அமைப்பு என்று வாதிட்டார் இது உண்மையிலேயே புரட்சிகரப் பார்வையாக இருந்தது. காரணம், அப்போது தாவரங்கள் என்பவை தொடர்ச்சியான திசுக்கள் என்றே கருதப்பட்டு வந்தன.
ஆனால், கண்ணுக்குத் தெரியாத செல்களால் தாவரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என ஷ்லைடன் நிறுவினார். ஆனால், செல்கள் எப்படி உருவாகின்றன என்கிற கேள்விக்குப் படிகமாக்கல் (Crystallisation) எனும் செயல்பாட்டின் மூலம் உருவாகின்றன என்றார். இது தவறு என்பது பின்னால் நிரூபணமானது.
இதே நேரத்தில் ஷ்வான் என்பவர் விலங்குகளின் உடலை ஆய்வு செய்துகொண்டிருந்தார். இவர் விலங்குகளின் திசுக்களை ஆராய்ந்தபோது அவையும் தாவரங்களைப் போலவே செல் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டார்.
ஷ்வான், ஷ்லைடன் இருவரும் தாங்கள் கண்டுகொண்ட விஷயத்தைப் பகிர்ந்துகொண்டனர், விவாதித்தனர். இதன் அடிப்படையில், தாவரங்களும் விலங்குகளும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் பொதுவான செல்களைக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளன என்கிற முடிவுக்கு வந்தனர்.
ஆனால், இந்த செல்கள் எப்படி உருவாகின்றன எனும் கேள்வி இன்னும் தொடர்ந்துகொண்டிருந்தது. அதற்கான ஆதாரங்களைக் கண்டடைந்தவர் மற்றொரு ஜெர்மன் அறிவியலாளரான ராபர்ட் ரிமாக்.
ரிமாக், கோழியின் கருவை ஆராய்ந்தபோது அதன் ரத்தச் சிவப்பு அணுக்கள் இரண்டாகப் பிரிந்து பெருகுவதை அறிந்தார். இது உயிர்களில் பொதுவாக நிகழக்கூடியதா என அறிய, தவளை முட்டையையும் இன்னும் சில உயிர்களின் கருக்களையும் ஆராய்ந்தார்.
அவற்றிலும் செல்கள் பிரிந்து வளர்வது தெரிந்தது. இதையடுத்து உயிர்களில் உள்ள புதிய செல்கள் பழைய செல்களில் இருந்தே உருவாகின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டடைந்தார் ரிமாக். செல் பிரிதல் மூலம் இந்த உருவாக்கம் நிகழ்கிறது என்று உறுதிப்படுத்தினார்.
ரிமாக் கண்டறிந்த இந்தக் கருத்தைப் பின்னர் ருடால்ஃப் விர்கோவ் மேலும் வலுவூட்டினார். ஏற்கெனவே இருக்கும் செல்லிலிருந்தே புதிய செல் உருவாகிறது என்கிற கருத்தை முன்வைத்த அவர், நோய்களையும் செல்களில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும் என்று வாதிட்டார். இதன் மூலம் செல் கோட்பாடு நோய்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையாகவும் மாறியது.
இவ்வாறு செல்கள்தான் உயிரின் அடிப்படை அலகு, எல்லா உயிர்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களால் ஆனவை, பழைய செல்கள் பிரிவதன் மூலம் புதிய செல்கள் உருவாகின்றன ஆகிய மூன்று கருத்துகளும் இணைந்து செல் கோட்பாடாக உருவெடுத்தன.
செல் கோட்பாட்டின் வருகைக்குப் பின் உயிரினங்களின் இயக்கம் பற்றிய புரிதல் மேலும் வலுவடைந்தது. உடலில் ஏற்படும் நோய்கள் செல்களின் இயக்கத்தில் ஏற்படும் கோளாறுகளாக அறியப்பட்டன, அதேபோல் செல்கள் பிரிவதன் மூலம் கரு உருவாகும் விதம் புரிந்துகொள்ளப்பட்டது. உயிர்களின் தோற்றம் குறித்த கேள்வியும் செல்களின் வளர்ச்சி அடிப்படையில் பார்க்கப்பட்டது. இவ்வாறு, நவீன உயிரியல் உருவாக செல் கோட்பாடு முக்கியப் பங்காற்றியது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com