ஆகாயத் தோட்டம்! | கதை

ஆகாயத் தோட்டம்! | கதை
Updated on
2 min read

செண்பகக் காடுகளின் எல்லையில் இருந்தது வேலன் தாத்தாவின் வீடு. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, பனையோலைக் கூடைகளைப் பின்னிக்கொண்டிருந்தார். முற்றத்தில் நீலியும் கோதையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நீலி, இந்த மலையில் வளர்ந்திருக்கும் மரங்களையும் செடிகளையும் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. இப்போ நகரத்தில் மண் இல்லாமலே செடி வளர்க்கிறாங்க. தாவரம் வளரணும்னா மண்ணும் தண்ணீரும் அவசியம்தானே?” என்றாள் கோதை. நீலி சிரித்தாள். “கோதை அக்கா, நீ இன்னும் நம்ம காட்டோட அதிசயத்தை முழுசாப் பார்க்கல. மண்ணைத் தொடாமலேயே வளரும் தாவரங்களும் இங்கே இருக்கு.”

“மண்ணைத் தொடாமலா?” “ஆமாம். மரங்களின் மேலேயே வளரும். அதைப் பார்த்தால் மரத்தின் உச்சியில் இன்னொரு காடு இருப்பதுபோல இருக்கும்!” நீலி சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. மரங்களின் இலைகள் சலசலத்தன. உலர்ந்த சருகுகள் காற்றில் பறந்தன. காற்றோடு சேர்ந்து சில விசித்திரமான பொருள்கள் முற்றத்தில் விழுந்தன.

“நீலி, அங்கே பாரு” என்று கத்தினாள் கோதை. இருவரும் ஓடிச் சென்றனர். விதைகள் சுழற்காற்றாடி போலச் சுற்றிச் சுற்றிக் கீழே இறங்கின. நீலி ஒரு விதையை எடுத்தாள். இருவரும் வேலன் தாத்தாவிடம் ஓடினார்கள். “தாத்தா, இதை நான் இதுவரை பார்த்ததே இல்லை.”

தாத்தா அந்த விதையைக் கவனமாகப் பார்த்தார். பிறகு, “இது ஆகாயத் தோட்டத்திலிருந்து விழுந்திருக்கும்” என்றார். “ஆகாயத் தோட்டமா? வானத்தில் இருக்கிறதா தாத்தா?” என்று கேட்டாள் கோதை. தாத்தா சிரித்தபடி, “வானத்தில் இல்லைம்மா... வனத்துக்குள் இருக்கும் அதிசயம் இது. வாங்க, உங்களுக்குக் காட்டுறேன்” என்றவர் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நீலியும் கோதையும் உற்சாகத்துடன் பின்தொடர்ந்தார்கள். உயரமான மரங்கள் வானத்தை மறைத்திருந்தன. வழியெங்கும் அதே விதைகள் காற்றில் மிதந்துவந்தன. சிறிது தூரம் சென்றபோது, காக்கி உடையில் ஒருவர் எதிரே வந்தார். “இவர், வன அதிகாரி மதிவாணன்” என்று தாத்தா அறிமுகப்படுத்தினார்.

“மாமா, நீங்களும் எங்களோட வாங்களேன்” என்று நீலி கூறினாள். நால்வரும் சேர்ந்து உள்காட்டுக்குள் நடந்தார்கள். அரைமணி நேரத்தில் ஒரு பெரிய மரத்துக்கு அருகில் வந்து நின்றார்கள். அது மற்ற மரங்களைவிட உயரமாக இருந்தது. அதன் கிளைகள் நான்கு திசைகளிலும் பரந்து விரிந்திருந்தன.

“இதுதான் அந்த இடம்” என்றார் மதிவாணன். கையில் இருந்த தொலைநோக்கியை கோதையிடம் கொடுத்தார். “மேலே இருக்கும் கிளையைப் பாரு.”

பார்த்தவுடன், கோதை வியப்பில் ஆழ்ந்தாள். அவள் நீலியிடம், “மரத்துக்கு மேலே இன்னொரு சின்ன காடு இருக்கே” என்றாள்.

மரத்தின் பெரிய கிளைகளுக்கு இடையில் பாசிகளும் சிறிய செடிகளும் சேர்ந்து பசுமையான சிறிய காடே உருவாகியிருந்தது. “மாமா, இவ்வளவு உயரத்துல மண் எப்படி வந்தது?” என்று கேட்டாள் கோதை. மதிவாணன் சிரித்தபடி, “பல ஆண்டுகளாக விழுந்த இலைகள், காய்ந்த பாசிகள், சிறு தாவரங்களின் எச்சங்கள் எல்லாம் கிளைகளின் இடுக்குகளில் சேர்ந்து ஒரு அடுக்கை உருவாக்கும். அதில் சில தாவரங்கள் வளர ஆரம்பிக்கும்” என்றார்.

“அப்படின்னா... மரத்துக்கு மேலேயும் ஒரு தோட்டம் இருக்கா!” என்று நீலி ஆச்சரியப்பட்டாள். “ஆமாம். ஆனால், இது மனிதர்கள் உருவாக்கிய தோட்டம் இல்லை. இயற்கை உருவாக்கிய ஆகாயத் தோட்டம்.” அந்த நேரத்தில் மேலிருந்து மெல்லிய சத்தம் கேட்டது. “சரக்... சரக்...” எல்லாரும் மேலே பார்த்தார்கள். இலைகளுக்குள் இருந்து ஒரு சிறிய மரத்தவளை வெளியே எட்டிப் பார்த்தது.

“அடடா! இங்கே ஒரு குட்டி உலகமே இருக்கே” என்றாள் கோதை. வேலன் தாத்தா சிரித்தார். “இந்த ஆகாயத் தோட்டம் வெறும் செடிகளின் கூட்டம் இல்லை. இங்கே பூச்சிகள், சிறிய உயிரினங்கள், பறவைகள் என்று பல உயிர்கள் வாழ்கின்றன” என்றார்.

மதிவாணன், “இந்தத் தாவரங்கள் மரத்துக்கு எந்தத் தீங்கும் செய்யாது. மரத்திலிருந்து உணவை எடுத்துக் கொள்வதில்லை. கிளையைத் தங்குமிடமாக மட்டும் பயன்படுத்துகின்றன” என்றார். “அப்போ.. தண்ணீர் எப்படிக் கிடைக்கும் மாமா?” என்றாள் நீலி.

“மழைத்துளிகள், மூடுபனி, காற்றில் இருக்கும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன. சில தாவரங்களின் வேர்கள் காற்றிலிருந்தே ஈரத்தை உறிஞ்சும்.” கோதை கையில் இருந்த விதையை எடுத்துக் காண்பித்ததும் மதிவாணன், “இது மரத்தின் விதை இல்லை.

ஆகாயத் தோட்டத்தில் வளரும் சிறிய தாவரத்தின் விதை. இதோட இறக்கை போன்ற அமைப்பு காற்றில் பறக்க உதவுது. புதிய இடம் கிடைத்தால், இன்னொரு மரத்தின் கிளையில் முளைத்து புதிய ஆகாயத் தோட்டத்தை உருவாக்கும்” என்றார்.

அப்போது பலத்த காற்று வீசியது. ஆகாயத் தோட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான விதைகள் ஒரே நேரத்தில் பறந்தன. அவை சிறிய பறவைகள்போல வானத்தில் சுழன்று வட்டமிட்டன. சில விதைகள் தொலைவில் இருந்த மரக்கிளைகளில் மறைந்தன.

“நீலி, அங்கே பாரு. இன்னொரு ஆகாயத் தோட்டம் பிறக்கப் போகிறது” என்றாள் கோதை. நீலியும் கோதையும் சிரித்தார்கள். அடுத்த கணமே, தாத்தாவைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் மலையடிவாரத்தை நோக்கி நடந்தார்கள்.

ஆகாயத் தோட்டம்! | கதை
உயிர்களின் பிணைப்பை ஆராயும் அறிவியல் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 44

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in