

மனித உடலில் ஆச்சரியம் நிறைந்த பகுதி மூளை. நம் எண்ணங்களையும் உடலின் பிற பாகங்களையும் இயக்கக்கூடிய ஆற்றல் மூளைக்கு உண்டு. மூளையின் செயல்பாடு இன்று வரையுமே முழுதாகப் புரிந்து கொள்ளப்படாத மர்மமாகத்தான் இருக்கிறது.
மூளையில் சில வெற்றிடங்கள் இருப்பதாகவும், அதன் வழியாக ஆன்மா ஒன்று பயணிப்பதாகவும், இதன் வாயிலாகவே உணர்வுகளும் உடல் அசைவுகளும் ஏற்படுகின்றன என்றார் பண்டைய கிரேக்க மருத்துவரான கேலன்.
17ஆம் நூற்றாண்டு வரையுமே இப்படியான சில நம்பிக்கைகள்தான் மூளையைப் பற்றி இருந்தன. 1838இல் த்தியாஸ் ஷ்லைடன், தியடோர் ஷ்வான் எனும் அறிவியலாளர்கள் தாவரங்களும் விலங்குகளும் செல்களால் ஆனவை என்கிற கோட்பாட்டை முன்வைத்தனர்.
இந்தக் கோட்பாடு அதுவரை இருந்த சிந்தனையை மாற்றியது. இதை அடுத்து மூளையும் செல்களால் ஆனதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கான விடை 40, 50 ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றது. அறிவியல் துறை சார்ந்து ஏராளமான ஆய்வகங்கள் உருவாகின. ஜெர்மன் நிறுவனங்கள் சக்திவாய்ந்த நுண்ணோக்கிகளை உருவாக்கி விற்பனை செய்தன.
அறிவியலாளர்கள் இந்த நுண்ணோக்கிகளின் துணையுடன் உயிரினங்களின் திசுக்களை ஆராயத் தொடங்கினர். ஆனாலும் மூளையை ஆராய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம், மூளைத் திசுக்கள் மிகவும் மென்மையானவை.
இந்த நிலையில் 1873இல் இத்தாலியைச் சேர்ந்த காமிலோ கோல்கி எனும் அறிவியலாளர் புது அணுகுமுறை ஒன்றைக் கையாண்டார். முதலில் பொட்டாசியம் பை-க்ரோமேட் எனும் வேதிப் பொருளைத் தடவி மூளையை இறுக வைத்தார்.
பிறகு அதன் திசுவில் சில்வர் நைட்ரேட் திரவத்தைச் செலுத்தினார். அந்தத் திரவம் மூளையின் திசுக்கள் வழி வழிந்தோடியதில் அவை படர்ந்த இடம் மட்டும் கருமை நிறத்தில் தெளிவாகத் தெரிந்தது.
அதை ஆராய்ந்த கோல்கி, மூளைத் திசுக்கள் எல்லாம் ஒன்றிணைந்த சிலந்திவலை போன்று இருப்பதாகக் கூறினார். இது Reticular theory என அறியப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளிலேயே இந்தக் கோட்பாடு தவறு என்று நிறுவினார் ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானி சாண்டியாகோ ரமோன் இ கஹால்.
1852இல் பிறந்தவர் கஹால். ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் தந்தையோ மகனை மருத்துவராக்க ஊக்குவித்தார். வளர்ந்து, மருத்துவராகி உடல் திசுக்களை ஆராய்ந்தார். அப்போதுதான் அவருக்கு மூளையின் திசுக்களை ஆராய ஆர்வம் வந்தது.
சிறு வயதில் கஹாலுக்குச் சரியாகப் பேச வராது. அடிக்கடி ஞாபக மறதி வரும். இதற்கு எல்லாம் காரணமான மூளையை ஆராய வேண்டும் என்று தோன்றியது. கோல்கி காட்டிய வழியில் மூளையை ஆராய்ந்தார். அப்போதுதான் அவருக்கு மூளையின் அமைப்பு பற்றிப் புதிய புரிதல் கிடைத்தது.
கோல்கி சொன்னதுபோல் மூளை என்பது தொடர்ச்சியான இணைப்பு அல்ல, அது தனித்தனி நரம்பணுக்களால் ஆனது என்றார் கஹால். நரம்பணுவில் உள்ள கிளை போன்ற பகுதியான டென்ட்ரைட்ஸ் மூலம் தகவல் பெறப்பட்டு, வால் போன்ற ஆக்ஸான் எனும் பகுதி மூலம் அத்தகவல் அடுத்த நரம்பணுவுக்குக் கடத்தப்படுவதாகக் கூறினார்.
இந்தக் கண்டறிதல்தான் நரம்பியல் கோட்பாடு (Neuron Doctrine) என அறியப்படுகிறது. இப்படியாக மின் சமிக்ஞைகள் மூலமும், வேதி சமிக்ஞைகள் மூலமும் நரம்பணுக்கள் ஒன்றை மற்றொன்று தொடர்புகொள்வதன் மூலமாகத்தான் எண்ணங்கள் உருவாகின்றன என்பது பின்னாளில் தெரியவந்தது.
கஹாலின் கண்டறிதல் ஒருபக்கம் அறிவியலை மாற்றியது என்றால், இன்னொரு பக்கம் ஸ்பெயினின் வரலாற்றையே மாற்றியது.
15ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பயணித்து, பல நாடுகளைப் பிடித்து பேரரசாகத் திகழ்ந்தது ஸ்பெயின். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் அதன் ஆதிக்கம் வீழ்ச்சி கண்டது.
ஸ்பெயின் பிடித்த நாடுகள் ஒவ்வொன்றாக அதன் கையைவிட்டுப் போயின. குறிப்பாக, தென் அமெரிக்க நாடான கியூபாவை அமெரிக்கா அபகரிக்கத் திட்டம்போட்டது. 1492இல் கொலம்பஸ் கியூபாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து 400 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்பெயினின் காலனியாக இருந்தது கியூபா.
அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் இடையில் கியூபா இருப்பதால், அதைப் பிடித்தால் அங்கிருந்தபடி தென் அமெரிக்க நாடுகளைக் கைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தது அமெரிக்கா.
மேலும், கியூபாவின் சர்க்கரை உற்பத்தியையும் கைப்பற்ற ஆசை கொண்டது. ஸ்பெயினுக்கு எதிராகப் போரை அறிவித்து, அதைத் தோற்கடித்தது. பொருளாதாரமும் அதள பாதாளத்தில் விழுந்தது.
ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ராஜ்ஜியம் கீழே விழுந்ததை ஸ்பெயின் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உள்நாட்டில் ஸ்பெயின் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
அப்போது உருவான ஓர் அமைப்புதான் ‘புத்துருவாக்க இயக்கம்’. இந்த இயக்கம் ஸ்பெயினின் தோல்விக்கு அந்நாட்டு அரசு அறிவியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தாததே காரணம் எனக் குற்றம்சாட்டியது.
ஸ்பெயின் அரசு பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல், அறிவியல், ஆய்வு, கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தது. அறிவியலாளர்களைக் கொண்டாட வலியுறுத்தியது. விளைவு, அங்கிருந்த செய்தித்தாள்கள் அறிவியலாளர்களுக்கும் அறிவியல் ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின.
கஹால் அப்போது ஏற்கெனவே நரம்பியல் கோட்பாட்டைக் கண்டறிந்து உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருந்தார். இதனால் புத்துருவாக்க இயக்கத்தினரால் அவர் ஸ்பெயினின் நாயகனாகப் போற்றப்பட்டார். ஸ்பெயினை நவீன தேசமாக, மரியாதைக்குரிய தேசமாக மாற்றுவதற்கு இளைஞர்களை வழிநடத்தப்போகும் நாயகனாகக் கொண்டாடப்பட்டார்.
கஹாலும் அறிவியலைத் தாண்டி பொது விவாதங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அரசியல் கட்டுரைகளை எழுதினார். சமூகத்தை வாழும் உயிரினமாக கஹால் பார்த்தார். உயிரினத்துக்கு நோய் வந்தால், அதைக் கண்டறிந்து எப்படிச் சிகிச்சை அளிக்க வேண்டுமோ, அதேபோல் அரசியல், சமூக பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும் என்றார்.
அறிவியல் சிந்தனையைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தார். இவரது குரலைப் புத்துருவாக்க இயக்கம் அரசியல் கொள்கையாக மாற்ற, அதன்பிறகுதான் ஸ்பெயினில் நிறைய ஆய்வகங்கள் உருவாகத் தொடங்கின.
உயிரியலுக்கான ஆய்வகம் உருவாக்கப்பட்டு, பின்னர் கஹால் நிறுவனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்படியாக அறிவியல் கண்டுபிடிப்பு ஒரு தேசத்தின் வரலாற்றையே மாற்ற உதவவும் என்பதை கஹாலின் கதை கூறுகிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com