

பூமியில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் அவற்றுக்கே உரிய தனித்த பண்புகளைப் பெற்றுள்ளன. இந்தப் பண்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற தகவல் டி.என்.ஏவில்தான் இடம்பெறுகிறது.
எடுத்துக்காட்டாக, யானைக்குத் தும்பிக்கை இருக்க வேண்டும் என்பதும், மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்க வேண்டும் என்பதும் டி.என்.ஏவில்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பண்புகள் எப்படிப் புதிதாகப் பிறக்கும் அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன? இதற்கான விடையைப் பல நூறு ஆண்டுகளாகவே மனிதர்கள் தேடிவந்தனர்.
1800களுக்கு முன்பு வரை, தந்தையின் பண்புகளும் தாயின் பண்புகளும் கலந்துதான் குழந்தையின் பண்புகள் உருவாகின்றன என அறிவியலாளர்கள் கருதினர். ஆனால், இதை மறுத்து வேறு சில கோட்பாடுகளும் உருவாகின.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிரிகோர் மெண்டல், உண்மையில் இந்தப் பண்புகள் எப்படித் தலைமுறையைக் கடந்து செல்கின்றன என்கிற விடையைக் கண்டடைந்தார். 1822இல் பிறந்த மெண்டல் வளர்ந்தவுடன் பாதிரியார் ஆகி, இன்றைய செக் குடியரசில் உள்ள பிர்னோ பகுதி மடாலயத்தில் பணியாற்றி வந்தார்.
அன்றைக்கு மடாலயங்கள்தான் கல்விக்கூடங்களாகவும் திகழ்ந்தன. நூலகங்கள், ஆய்வகங்கள் எல்லாம் அங்கேயே இருந்தன. இதனால் மெண்டலுக்கு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அமைந்தது.
மேலும் அப்போது ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு நகரமயமாக்கல் வேகம் எடுத்திருந்தது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் விவசாயம் தொடர்பான ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டன.
மெண்டல் இருந்த பிர்னோ பகுதி விவசாயத்துக்குப் பெயர்பெற்றது என்பதால், அவரும் தாவர ஆய்வுகளில் பங்கெடுத்தார். குறிப்பாக, தெரிவு இனப்பெருக்கம் (Selective Breeding) குறித்த ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தினார்.
தெரிவு இனப்பெருக்கம் என்பது, தாவரங்களிலும் விலங்குகளிலும் தங்களுக்கு வேண்டிய பண்புகளை விவசாயிகள் செயற்கையாக உருவாக்கும் வழி. எடுத்துக்காட்டாக, விவசாயிகளுக்கு இனிப்பான கிழங்கு வேண்டும் என்றால், சாதாரண உருளைக் கிழங்கைப் பயிரிடும்போது அதில் இருந்து கிடைக்கும் பல்வேறு கிழங்குகளில் எது கொஞ்சம் தித்திப்பாக இருக்குமோ அதை மீண்டும் மீண்டும் பயிரிடுவர்.
இதன் மூலம் அந்த இனிப்புச் சுவை தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு முழுதாகவே இனிப்பான கிழங்காக உருவாகும். இதுவே தெரிவு இனப்பெருக்கம்.
இந்த முறையை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கல்வித் துறையில் முறைப்படுத்தி உணவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இதில் ஒருவராகத்தான் மெண்டலும் இருந்தார்.
ஆனால், மெண்டலுக்குத் தெரிவு இனப் பெருக்கத்தில் எப்படி ஒரு பண்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்று அறியும் ஆர்வம் தோன்றவே, அவர் பட்டாணிச் செடிகளை வைத்து ஆராயத் தொடங்கினார்.
மெண்டல் வெவ்வேறு வகைச் செடிகளை எடுத்து, அவற்றை மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தினார். எடுத்துக்காட்டாக, குட்டைச் செடியுடன் நெட்டைச் செடிகள், மஞ்சள் விதைகளைக் கொண்ட செடிகளுடன் பச்சை விதைகள் கொண்ட செடிகள், நீலப் பூக்களைக் கொண்ட செடிகளுடன் வெள்ளைப் பூக்களைக் கொண்ட செடிகள் எனப் பல்வேறு கலப்புகளை உருவாக்கினார்.
இவ்வாறு செய்யும்போது சில விஷயங்கள் அவருக்குப் பிடிபடத் தொடங்கின. முதலாவதாக, பெற்றோரிடம் இருந்து பண்புகள் அடுத்த தலைமுறைக்குச் செல்வது உண்மைதான் என அவர் கண்டுகொண்டார். ஆனால், அது தந்தையுடைய பண்புகளும் தாயுடைய பண்புகளும் கலப்பதால் இல்லாமல், தனித்தனி மரபுப்பொருள்களாகச் செல்கின்றன என்றார்.
மேலும், இவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்போது குறிப்பிட்ட வடிவ மாதிரியைப் (Pattern) பின்பற்றுகின்றன என்றார். எடுத்துக்காட்டாக, குட்டையான செடியுடன் உயரமான செடியை மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும்போது அடுத்து உருவாகும் தலைமுறை இரண்டும் கலந்து நடு உயரத்திலான செடியாக வளர்வதில்லை. மாறாக, அவை உயரமான செடிகளாகவே இருக்கின்றன.
ஆனால், அதற்கடுத்த தலைமுறையில் திடீரெனக் குட்டைப் பண்பு வெளிப்படுகிறது. இவ்வாறு பண்புகள், பெற்றோரின் கலவையாக இல்லாமல் தனித்த கூறுகளாகச் சென்று, பல தலைமுறை கடந்தும் வெளிப்படும் என்றார். மேலும், இதே போன்ற பண்புகளில் சில மட்டும் அதிகம் வெளிப்பட்டு ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும் கூறினார்.
மெண்டல் குறிப்பிட்ட அந்தத் தனித்த கூறு என்பதைத்தான் மரபணு (Gene) எனப் பின்னால் வந்த அறிவியலாளர்கள் உறுதிசெய்தனர். 1866இல் Experiments on Plant Hybridization எனும் நூலில் தனது கண்டறிதல்களை மெண்டல் வெளியிட்டார். ஆனால், அது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.
ஆனால், 1990இல் மெண்டலின் ஆய்வுகள் மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது கண்டறிதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மரபணுக்கள், குரோமோசோம்கள், டி.என்.ஏக்கள் குறித்த புரிதல்கள் உண்டாகி மரபியல் எனும் துறை உருவானது.
இன்றைக்கு மரபியல் பெரிய அளவில் மனிதக் குலத்தை காக்கும் துறையாக இருந்துவருகிறது. தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் நிலவும் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும், உயிரினங்களின் பரிணாம மாற்றத்தைப் புரிந்து கொள்ளவும் மரபியல் உதவுகிறது. அதேநேரம், அன்றைக்கு மெண்டல் விதைத்த பட்டாணி விதையில் இருந்துதான் இந்த வளர்ச்சி தொடங்குகிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)