

நமது கிராமங்களின் சமகாலப் பிரச்சினைகள் குறித்து நகரத்துக் குழந்தைகளுக்குக் கதைகள் வழியாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக ஐந்து நூல்களை பாரி (PARI) நிறுவனத்துடன் இணைந்து கரடி டேல்ஸ் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றில் ஒரு நூல் ‘அம்மிணியின் மனமாற்றம்'. கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்தவர் விவசாயி வல்சன் குரியன்.
தன் வயலில் நெல் பயிரிடுகிறார். பெரும் உழைப்பை அளித்தாலும் அவருடைய உணவுப் பயிர்களுக்குப் போதிய விலை கிடைக்காததால், வணிலா, ரப்பர் போன்ற பணப் பயிர்களுக்கு அவர் மாறிவிடுகிறார்.
இது போதாது என்று காலநிலை மாற்றம் காரணமாகப் பெருமழை, வெள்ளம் போன்றவை கணிக்க முடியாத வகையில் அழிவை ஏற்படுத்துகின்றன. இதனால் விவசாயத்தில் பெருத்த நஷ்டமும் அப்பகுதி வாழ் மக்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.
இயற்கைச் சீற்றங்களின்போது முதியவர்கள், குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்கள் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்துகிறது. வல்சனின் மகள் அம்மிணிக்கும் ஓர் இழப்பு ஏற்படுகிறது.
அவளும் அவளது குடும்பத்தினரும் இதுபோல் இயற்கைச் சீற்றங்கள், போதிய வருமானம் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் கஷ்டப்படுவதற்கு மாறாக நகரத்துக்குச் சென்று வேறு வேலை தேடிக்கொண்டு பாதுகாப்பாக இருந்துவிட முடியும்.
ஆனால், அப்படிச் செய்யாமல் அவர்கள் மாற்றிச் சிந்திக்கிறார்கள். இந்த ஐந்து நூல்களை இயல்பாகத் தமிழில் வாசிப்பது போன்ற எளிய நடையில் மொழிபெயர்ப்பாளர் ச.சுப்பாராவ் மொழிபெயர்த்துள்ளார். இளையோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் இவை.
அம்மிணியின் மனமாற்றம்,
விஷாகா ஜார்ஜ்;
கிக் இட் ருக்கு,
சஞ்சனா கணேஷ்,
வெர்சோவாவிற்கு ஆபத்து,
சுபுஹி ஜிவானி; மொழிகளால் தொலைந்தவன்,
ஜ்யோதி ஷினோலி;
ஜமுனாவின் சாதனை,
ப்ரீத்தி டேவிட் -
5 நூல்களும் தமிழில்: ச.சுப்பாராவ், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 - 2433 2924