தசரா யானைகள் | வரலாறு முக்கியம் மக்களே! - 36

தசரா யானைகள் | வரலாறு முக்கியம் மக்களே! - 36
Updated on
3 min read

மைசூரு என்றாலே உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் நினைவுக்கு வருவது அந்தப் பிரம்மாண்ட அரண்மனையும், அதன் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் தசரா ஊர்வலமும்தான். ஊர்வலத்தின் மிக முக்கிய அம்சம், கம்பீரமான யானை சுமந்து வரும் தங்கத்தாலான அம்பாரி (ஹௌதா). அந்த அம்பாரியைச் சுமந்து வந்த யானைகள் ஒவ்வொன்றுமே வரலாற்றில் புகழோடு இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், அம்பாரி சுமக்கும் யானையாகத் தேர்வாவது ஒன்றும் எளிதான காரியமல்ல. தசரா கொண்டாட்டம், அதைச் சார்ந்த ஊர்வலம் என்பது விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஆரம்பமானது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு, மைசூர் சமஸ்தானத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்த உடையார் வம்சத்தினர், அந்த வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

கி.பி. 1610இல் முதலாம் ராஜ உடையார், தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில், யானைகளைக் கொண்டு ஊர்வலம் நடத்தும் முறையை உருவாக்கினார். இதற்காகவே யானைகளைப் பிடித்து, மாதக்கணக்கில் பயிற்சிகள் கொடுத்து, தயார் செய்தனர். அப்போது ஆறு யானைகள் சேர்ந்து மிகப்பெரிய சாரட் வண்டி ஒன்றை இழுத்துவர, அதில் மகாராஜாவும் குடும்பத்தினரும் அமர்ந்திருக்கும் வழக்கம் இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மைசூர் மகாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜர் காலத்தில் தலைநகரமானது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது. அப்போது சாரட்டுக்குப் பதிலாக, யானை ஒன்றின் மீது அமைக்கப்பட்ட அம்பாரியில் மகாராஜா அமர்ந்து தசரா ஊர்வலம் வருவதுபோல வழக்கத்தை மாற்றினார்.

இந்திய சுதந்திரத்தின்போது, சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் தசரா ஊர்வலம் தொடர்ந்தது. ஆனால், அம்பாரியில் மகாராஜாவுக்குப் பதிலாக, சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலையை எடுத்து வருவதாக வழக்கம் மாற்றி அமைக்கப்பட்டது. ஜெயமார்த்தாண்டா - அம்பாரியில் மகாராஜாவையும் சுமந்துகொண்டு, கம்பீரமாக மைசூர் தசரா ஊர்வலத்தில் அதிக முறை பங்கேற்ற பெருமை இந்த யானைக்கு உண்டு.

1870 தொடங்கி 1915 வரை சுமார் 45 ஆண்டுகள் தசரா ஊர்வலத்தில் அம்பாரியோடு வலம்வந்த ஒரே யானையாக இது வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே, அதற்குப் பெருமை சேர்க்கும் விதமாக மைசூர் அரண்மனை வளாகத்தின் கிழக்குப் பகுதி முதன்மை வாசலுக்கு ‘ஜெயமார்த்தாண்டா’வின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் பேச்சு வழக்கில் ‘ஆன வாசல்’ என்கிறார்கள். தசரா ஊர்வலத்தில் யானைகள் அந்த வழியாகத்தான் அரண்மனை வளாகத்தில் நுழைகின்றன. அம்பாரி யானையோடு கூடுதலாகச் சுமார் 13 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றன.

காலம் காலமாகக் காட்டு யானைகளைப் பிடித்து, யானைகளுக்கான முகாம்களில் வைத்து, சில பயிற்சி களைக் கொடுக்கிறார்கள். அதில் தகுதிவாய்ந்த சில யானைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ‘ராயல் கேம்ப்’க்குப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். அந்த யானைகள் சொன்ன பேச்சைக் கேட்டு நடப்பவையாக இருக்க வேண்டும் என்பது முதன்மைத் தகுதி. அவை அமைதியானவையாக இருக்க வேண்டும்.

கூட்டத்தைக் கண்டு மிரளக் கூடாது. தசராவில் வாத்தியங்கள் அதிரடியாக முழங்கும். மக்கள் ஆர்ப்பரிப்பர். பட்டாசுகள் வெடிக்கும். தவிர, ஊர்வலத்தில் துப்பாக்கிகள் 21 முறை மரியாதை நிமித்தமாக வெடிக்கும். இதற்கெல்லாம் யானைகள் மிரளாதபடி, பல்வேறு சத்தங்களுக்கு மத்தியில் அவற்றுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். அடுத்து, பாகன் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப, செயல்களைச் செய்யும் பயிற்சிகள். ஊர்வலத்தில் ஒழுங்குடன் நடந்துசெல்லும் பயிற்சிகள்.

750 கிலோ எடை கொண்ட மர அம்பாரிகளைச் சுமந்தபடி நடக்கும் பயிற்சிகள். இவை எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. 1902இல் அம்பாரியின் அளவு பெரிதாக்கப்பட்டது. மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜர், தன் இருபுறமும் குடும்பத்தினர் அமர்வதுபோல ஆசனத்தைப் பெரிதாக்கினார். அம்பாரி தங்கத் தகடுகளால் செதுக்கப்பட்டு மின்ன ஆரம்பித்தது. அதன் எடையும் அதிகமானது.

சுமார் 750 கிலோ. அதைச் சுமக்கும் யானையே ஊர்வலத்தின் தலைமை யானை. அந்தத் தலைமை யானையானது மற்ற யானைகளைவிட உயரம் கூடுதலாக இருக்க வேண்டும். எடை கூடுதலாகவும் கம்பீரமாகவும் இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய அம்பாரியைச் சுமப்பதற்கேற்ப அதன் தோள்கள் அகலமாக இருக்க வேண்டும்.

அம்பாரியின் எடை, தன் மேல் பூட்டப்படும் அலங்காரங்களின் எடை அனைத்தையும் தாங்கிக் கொண்டு, பாகனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, ஊர்வலத்தின் கம்பீர அடையாளமாக வலம்வர வேண்டும்.

இத்தனை விதிமுறைகளுக்கும் பொருந்தும்படியே ‘ஜம்போ சவாரி’ தலைமை யானையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஜெயராமா, பலராமா, விஜயபகதூர், ராமபிரசாத், சுந்தரராஜ், மோதிலால், நஞ்சுண்டா, ராமபிரசாத்... இவை எல்லாம் அம்பாரியைச் சுமந்து, தசராவில் வலம்வந்து வரலாற்றில் இடம்பெற்ற சில யானைகள். ஐராவதம் யானைக்குக் கூடுதல் சிறப்பு உண்டு.

அது அம்பாரி யானையாக வலம்வந்ததுடன், தி எலிபெண்ட் பாய் திரைப்படத்திலும் நடித்திருக்கிறது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன், ராஜேந்திரா அம்பாரி யானையும் ‘கந்தாதா குடி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறது. 18 முறை அம்பாரியைச் சுமந்த துரோனா யானை, ‘தி ஸ்வார்டு ஆஃப் திப்பு சுல்தான்’ தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறது.

பத்தரை அடி உயரமும் சுமார் 7,000 கிலோ எடையும் கொண்ட மிக கம்பீரமான பிலிகிரி யானைக்குத் தனித்துவமான பெருமை உண்டு. மைசூர் மகாராஜாவைக் கடைசியாக அம்பாரியில் சுமந்தது அதுதான். 2020 முதல் அபிமன்யு யானை அம்பாரியைச் சுமந்து வலம்வருகிறது. அதற்கு முன்பு பொறுப்பில் இருந்த யானை அர்ஜுனா, 1990களில் அம்பாரி யானையாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புடன் இருந்தது.

குளிக்கச் சென்ற இடத்தில், பகதூர் யானையின் பாகன் கீழே விழுந்து விபத்தில் இறந்துவிட, அதுக்கு அர்ஜுனாவே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. கொலைப்பழி கொண்ட அர்ஜுனாவை தசரா ஊர்வலத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

பின்பு பலராமா யானை தேர்ந்தெடுக்கப்பட்டு, அது தொடர்ந்து 13 ஆண்டுகள் அம்பாரியைச் சுமந்தது. 2011இல் பலராமா கண் பார்வைக் குறைபாடு காரணமாக ஓய்வுபெற்றது. அம்பாரியைச் சுமக்க வேறு சரியான யானை இல்லை. அப்போதும் அறுபது வயது அர்ஜுனா கம்பீரத்துடன் பயிற்சிகளில் அசத்தியது. 2012 தசராவில் அர்ஜுனாவின் முதுகில் அம்பாரி ஏற்றப் பட்டது. 2019 வரை அர்ஜுனாவே தலைமை யானையாக வலம்வந்தது.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

தசரா யானைகள் | வரலாறு முக்கியம் மக்களே! - 36
வரலாறு பேசும் கிளிகள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 35

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in