

இந்தியாவுக்குப் புதிய கடல்வழி கண்டறியப் போகிறேன் என்று மேற்கு நோக்கிக் கப்பல்களில் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ், கரீபியத் தீவுகளைத்தான் அடைந்தார். தனது பயணத்துக்கு உதவிய ஸ்பெயின் மன்னர் ஃபெர்டினாண்டையும், அரசி இசபெல்லாவையும் சந்தித்தார். தனது பயண அனுபவங்களை விவரித்தார். இரண்டு கிளிகளை அரசி இசபெல்லாவுக்குக் கொடுத்தார்.
அவை, பச்சை உடலும், சிவப்புக் கழுத்தும், வெள்ளை முகமும் கொண்ட கியூபன் அமேசான் வகைக் கிளிகள். ஆம், அன்றைக்கு ஐரோப்பிய தேசங்களில் கிளிகள் அரண்மனைப் பறவைகளாகக் கருதப்பட்டன. உயரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்குக் கிளிகளை வழங்குவது கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது. அந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
கிளிகளுக்கு ராஜ அடையாளம் தந்தவர் அலெக்சாண்டர். இந்தியாவுக்கு வந்த கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டரைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று கிளிகள். அவற்றின் அழகிய தோற்றம், பேசும் திறன், துருதுரு உடல்மொழி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலிருந்து கிளிகளைப் பிடித்துக்கொண்டு சென்றார் அலெக்சாண்டர் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இவை Alexandrine Parakeet என்றே அழைக்கப்பட்டன.
இவை பச்சைக்கிளிகளைவிடச் சற்றே பெரியவை. யார் வளர்க்கிறார்களோ அவர்கள் மீது அதிகம் அன்பைக் கொட்டும் இந்தப் பாசக்காரப் பெரிய பச்சைக்கிளிகளை ஐரோப்பியர்கள் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, இந்தியாவின் பஞ்சாபிலிருந்து இந்த வகைக் கிளிகள் ஐரோப்பிய ராஜ்ஜியங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டன. இவற்றுக்குப் பேசும் திறன் அதிகம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ஆங்கிலமும் ஸ்பானிஷும் பிரெஞ்சும் இத்தாலியும் பேசி எத்தனையோ இந்தியக் கிளிகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.பண்டைய ரோமானியர்களுக்கும் கிளிப்பாசம் அதிகம். அதாவது வசதிமிக்க ரோமானியர்கள் கிளி வளர்ப்பதைப் பெரும் கௌரவமாகக் கருதினார்கள். கிளிக்கு விதவிதமான கூண்டுகள் செய்து தங்கள் செல்வாக்கைக் காட்டினார்கள்.
தங்கம் தவிர, ஆமை ஓடு, யானைத் தந்தம், சில விலங்குகளின் எலும்புகளாலும் கிளிக்கூண்டுகள் செய்யப்பட்டன. ரோமானியர்களின் வணிகக் கப்பல்களில் கிளிகளும் பெருங்கடல்களில் பயணம் செய்துகொண்டிருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் புனித ரோமப் பேரரசை ஆண்ட இரண்டாம் ஃபிரெட்ரிக் காலத்தைச் சேர்ந்த, பறவைகள் - விலங்குகள் வளர்ப்பு குறித்த நூல் ஒன்று வாடிகன் நூலகத்தில் இருக்கிறது.
அந்தப் பழமையான நூலில், கொண்டையுள்ள வெள்ளைக்கிளியின் படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அந்த வெள்ளைக்கிளியை, இரண்டாம் ஃபிரெட்ரிக்குக்கு, பாபிலோனிய சுல்தான் அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அந்த வகை கொண்டையுள்ள வெள்ளைக்கிளிகள் (White Cockatoo) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை.
பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே ஆஸ்திரேலியாவிலிருந்து சிசிலிக்கு ஒரு வெள்ளைக்கிளியானது பெருங்கடல்களைத் தாண்டி பயணம் செய்து வந்திருக்கிறது, வரலாற்றுக் குறிப்பிலும் நிலைத்திருக்கிறது! கடல் பயணிகள் பலரும் தங்கள் கப்பல்களில் கிளிகளை வளர்த்தனர். கூண்டுகள், டப்பாக்கள், தேநீர் ஜாடிகள்கூட கிளிகளுக்கான உறைவிடமாக இருந்திருக்கின்றன.
நீண்ட கடல் பயணங்களில் கிளிகளே அவர்களுக்குப் பேச்சுத்துணையாக இருந்திருக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைத்திருக்கின்றன. இப்போதும் பெருங்கடல்களில் அலைந்து திரியும் கப்பல்கள் பலவற்றிலும் கிளிகள் செல்லப்பறவைகளாகப் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. பயணிகளின் கப்பல்களில் மட்டுமல்ல, கடற்கொள்ளையர்களின் கப்பல்களிலும் கிளிகள் தவறாமல் இடம்பிடித்தன.
புதையல் தீவு போன்ற புகழ்பெற்றக் கதைகளில்கூடக் கடற்கொள்ளையர்களோடு வண்ணக்கிளியும் வலம்வரும். ஏன் என்றால், கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் ‘வேட்டைக்காக’ நீண்ட காலம் காத்திருப்பார்கள். அப்போது அவர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள ஏதோ ஒரு செல்ல உயிரினம் தேவைப்பட்டது. நாய், பூனை, குரங்கைவிட, ஒரு கிளியை வளர்ப்பது எளிது.
அதிகம் சாப்பிடாது. துடுக்காகப் பேசும். அன்பாகப் பழகும். மகிழ்ச்சி தரும். அந்தச் சூழலில் தாக்குப்பிடித்து வாழும். அதனாலேயே கடற்கொள்ளையர்களும் கிளிகளை விரும்பி வளர்த்தார்கள். வாடிகனின் போப் மாளிகையிலும் கிளிகள் செல்லப் பறவைகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாகப் பதினைந்தாம் நூற்றாண்டில், ஐரோப்பிய ராஜ்ஜியங்களைச் சேர்ந்தவர்கள், கடற்பயணங்களை மேற்கொண்டு, தாங்கள் செல்லும் புதிய பிரதேசங்களில் இருந்து விலங்குகளையும் பறவைகளையும் பிடித்து வந்தனர். அதில் சிலவற்றை போப்புக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர்.
அதில் கிளிகள் முக்கியமான பறவைகளாக இருந்தன. 1417இல் போப்பாக இருந்த ஐந்தாம் மார்ட்டின் கிளிகளை விரும்பி வளர்த்திருக்கிறார். கிளிகளைப் பராமரிப்பதற்கென்றே தனியே ஒரு பணியாளரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். கிளிகள் பராமரிப்புச் செலவு என்று தனியே தொகையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு பல்வேறு போப்புகள் கிளிகளை வளர்த்திருக்கின்றனர்.
கூண்டுக்கிளிகளோடு உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். 1958இல் போப்பாகப் பதவியேற்ற இருபத்து மூன்றாம் ஜானுக்கு மட்டும் அந்தக் கூண்டுக்கிளிகளின் மனக்குரல் வேறு மாதிரி கேட்டிருக்க வேண்டும். வாடிகன் மாளிகை வளர்ப்புக் கிளிகளை எல்லாம் திறந்துவிடச் சொல்லி உத்தரவிட்டார். கொலம்பஸ், கரிபீயன் தீவுகளுக்குச் சென்று வந்தபிறகு அங்கே காலனியாதிக்கம் நிலைநாட்டப்பட்டது.
அடிமைகள் வணிகம் அங்கே தீவிரமானது. அந்தத் தீவுகளின் பழங்குடி மக்கள், ஐரோப்பியர்களிடமிருந்து தப்பிப்பதற்கு ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தனர். தூரத்தில் ஐரோப்பியக் கப்பல்கள் வருவதைப் பார்த்து, கரிபீயத் தீவுகளின் கிளிகள் மிகவும் சத்தமாகக் குரல் எழுப்பின.
அந்த எச்சரிக்கை ஒலியை உணர்ந்து கொண்ட பழங்குடி மக்கள், அடர்ந்த காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதை ஸ்பானியர்கள் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆம், அந்தக் கிளிகளால் சில மனிதர்கள் அடிமை ஆக்கப்படுவதிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கின்றனர்.
அந்தக் கிளிகளுக்கு நன்றி!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com