ஹுபெர்டாவின் பயணங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 34
அந்த நீர்யானை ஏன் அங்கிருந்து புறப்பட்டது? இந்தக் கேள்விக்கு மூன்று விதமான பதில்கள் சொல்லப்படுகின்றன. மூன்றுமே ஊகம்தான். ஒன்று, அந்த நீர்யானை தனக்கென்று ஓர் இணையைத் தேடி அங்கிருந்து புறப்பட்டது.
இரண்டாவது, அந்த நீர்யானையின் தாய் இறந்து போனதால், வேறு இடம் நோக்கிப் புறப்பட்டுவிட்டது. மூன்றாவது காரணம், விசேஷமானது. அது தன் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியைத் தேடித் தன் பயணத்தை ஆரம்பித்தது.
அந்த நீர்யானைக்குத் தொடக்கத்தில் மனிதர்கள் வைத்த பெயர் பில்லி. பின்பு பத்திரிகைச் செய்திகளில் ஹுபெர்ட் என்கிற பெயரில் ஆண் நீர்யானையாகக் குறிப்பிடப்பட்டது. அது தென்னாப்ரிக்காவின் செயின்ட் லூசியா கடற்கரை நகரத்தைச் சேர்ந்தது. 1928, நவம்பரில் ஒருநாள் அந்த நீர்யானை தனது பயணத்தை ஆரம்பித்தது.
நிலத்தில் வாழும் பெரிய உருவம் கொண்ட மூன்றாவது விலங்கு நீர்யானை. தாவர உண்ணிகளான நீர்யானைகள், பொதுவாகவே கூட்டமாக வாழும். சுமார் 1,800 கிலோ வரை எடை கொண்ட நீர்யானை, சாதுவாகவே தோன்றும். ஆனால், முதலைக் கடியைவிட, நீர்யானையின் கடி மிக வலிமையானது.
ஆகவே, முதலையோ சிங்கமோ வளர்ந்த நீர்யானையை இரையாகப் பார்ப்பதில்லை. நீர்யானையும் மனிதனை எதிரியாகப் பார்ப்பதில்லை. ஆனால், தன் எல்லைக்குள் மனிதனால் ஆபத்து நிகழும் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான்! பொதுவாக நீர்யானைகள் தாங்கள் பழகிய நீர்நிலைகளில் வாழ்வதையே விரும்பும்.
அங்கே நீரோ உணவோ குறைந்து போனால், இரவு நேரத்தில் பயணம் செய்து அருகிலிருக்கும் வேறு நீர்நிலைகளுக்கு நகரும். கூட்டமாக இடம்பெயரும். ஆனால், ஹுபெர்ட் அப்படிச் செய்யவில்லை. தனியே புறப்பட்டது. நகர்ந்துகொண்டே இருந்தது. இரவில் மட்டுமே பயணம் செய்தது. பெரும்பாலும் மனிதர்களின் கண்களில் படாமல் ஒதுங்கிச் சென்றது.
ஆனால், நடால் மெர்குரி என்கிற தென்னாப்ரிக்கப் பத்திரிகையின் ஒளிப்படக்காரர், புதருக்குள் பதுங்கி நின்றபடி இருந்த ஹுபெர்டைப் படம்பிடித்தார். அந்தச் செய்தி 1928, நவம்பர் 23 அன்று அந்தப் பத்திரிகையில் வெளியானது. தேசம் முழுக்க அந்தச் செய்தி பரவி மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது.
மக்கள் தங்கள் பகுதிகளில் ஹுபெர்ட் தென்படுகிறதா என்று தேடினர். சில பகுதிகளில் அது கடந்து சென்ற காலடித் தடங்கள் மட்டுமே தென்பட்டன. சில நாள்களுக்குப் பின் ஓலங்கா ஆற்றுப் பகுதியில் ஹுபெர்ட் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அங்கே சில நாள்கள் அமைதியாகத் தங்கியது.
பத்திரிகைச் செய்தியால் புகழ்பெற்ற ஹுபெர்டைப் பிடித்துக் கொண்டுபோய், ஜோகன்ஸ்பெர்க் நகர உயிரியல் பூங்காவில் அடைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், ஹுபெர்ட் தப்பித்தது. ஓலங்கா ஆற்றுப் பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த டர்பன் நகரத்துக்குள் புகுந்தது.
அங்கே ஒரு கிளப்பின் வளாகத்தில் நுழைந்து மனிதர்களைப் பீதியடையச் செய்து வெளியேறியது. டர்பன் கடற்கரையில் காலாற நடந்து சென்றது. அந்த நகரத் தெருக்களில் புகுந்து ஒரு கலக்குக் கலக்கியது. சிலருக்கு வயிற்றைக் கலக்கியது. கோல்ஃப் மைதானம் ஒன்றில் புகுந்து, புல் மேய்ந்து பசியாறிக்கொண்டது. தண்டவாளம் ஒன்றின் நடுவில் ஹுபெர்ட் நின்று இளைப்பாறிக் கொண்டிருக்க, ரயில் பதறி நின்றது.
தென்னாப்ரிக்காவின் செய்திகளில் ஹுபெர்டும் இடம்பெறத் தொடங்கியது. 1929, 1930 முழுக்கத் தென்னா ப்ரிக்காவின் பல நதிகளையும், நீர்நிலைகளையும் வலம்வந்த ஹுபெர்ட், வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் இடம்பிடித்தது. உலகப் புகழ்பெற்றது. வேட்டைக் காரர்கள் துப்பாக்கிகளோடு புறப்பட்டார்கள்.
இன்னொரு பக்கம், மக்கள் ஹுபெர்டை வேறுவிதமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ‘எங்கள் அரசர் ஸாகாவின் ஆன்மா, இந்த நீர்யானையின் உடலுக்குள் புகுந்துவிட்டது. ஆகவே, அது இந்த மண்ணில் கம்பீரமாக வலம் வருகிறது’ என்று ஸூலு பழங்குடி மக்கள் நம்பினார்கள். ‘எளியவர்களைக் காக்கும் சக்தியின் அடையாளமே ஹுபெர்ட்!’ என்று கோஸா இன மக்கள் புகழ்ந்தார்கள்.
தென்னாப்ரிக்கக் குழந்தைகள் அந்த நீர்யானையை அன்புடன் கொண்டாடினார்கள். இப்படி மக்கள் ஹுபெர்ட் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டியதால், அது அந்தத் தேசத்தின் ‘செல்லம்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது. ஆகவே, வேட்டைக்காரர்கள் துப்பாக்கிகளைக் கீழே வைக்க வேண்டிய நிலை உண்டானது.
1931, மார்ச். தென்னாப்ரிக்காவின் ஈஸ்ட் லண்டன் பகுதியில் ஹுபெர்ட் தென்பட்டது. ‘யாரும் அந்த நீர்யானையை வேட்டையாடக் கூடாது’ என்று அரசு அறிவித்தது. அந்த ஏப்ரலில் கெய்ஸ்கம்மா ஆற்றுப் பகுதியில் ஒரு நீர்யானையின் உடல் கிடந்தது. நெருங்கிச் சென்று பார்த்தவர்கள், அது ஹுபெர்ட்தான் என்று உறுதி செய்தார்கள். அதன் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன.
இரண்டரை ஆண்டுகளில் சுமார் ஆயிரம் மைல்களுக்கும் மேல் பயணம் செய்துவந்த அந்த நீர்யானையை யாரோ வேட்டையாடியிருந்தார்கள். வேட்டையாடியவர்களைப் பிடித்து விசாரித்தபோது, ‘அது ஹுபெர்ட் என்று தெரியாமல் சுட்டு விட்டோம்’ என்று சொன்னார்கள். வேட்டைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், தென்னாப்ரிக்க தேசத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்கப் பலரும் அந்த நீர்யானைக்காகக் கண்ணீர் சிந்தினர். அஞ்சலி செலுத்தினர். கவிதைகள் எழுதினர். அதற்காகச் சிறப்பு நினைவு அட்டைகளை உருவாக்கினர். அதன் பெயரில் நிதி திரட்டி நற்காரியங்களைச் செய்தனர்.
லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த நீர்யானையின் உடல், ‘பாடம்’ செய்யப்பட்டு மீண்டும் தென்னாப்ரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் 20,000 பேர் கூடிய விழா ஒன்றில், அமாதோல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தொடக்கத்திலிருந்தே யாராலும் ஹுபெர்டை நெருங்க இயலாததால், அதை ஆண் நீர்யானை என்றே நினைக்கப்பட்டது. அதன் மரணத்துக்குப் பிறகே அது பெண் நீர்யானை என்பது கண்டறியப்பட்டது. ஹுபெர்ட் என்கிற பெயர், ஹுபெர்டா என்று திருத்தப்பட்டது.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
