

முட்டைக்காரரிடம் ஆறு முட்டைகளை வாங்கி, மதியம் ஆம்லெட் செய்து தருவதாகச் சொன்னார் பாட்டி. குறும்புக்கார என் அண்ணன் மூன்று முட்டைகளை எடுத்து, ஊசியால் சிறு துளை போட்டு, எனக்கும் தம்பிக்கும் ஆளுக்கொரு முட்டையைக் கொடுத்துவிட்டு, அவன் ஒரு முட்டையைக் குடித்துவிட்டான்! பிறகு முட்டை ஓடுக்குள் தண்ணீரை நிரப்பி, ஏற்கெனவே இருந்த இடத்தில் வைத்துவிட்டான். பாட்டி ஆம்லெட் செய்ய முட்டையை எடுத்து உடைத்தார்.
முட்டைக்குள் தண்ணீர் மட்டும் இருந்ததைக் கண்டு பயந்துவிட்டார். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்குச் சிரிப்பு வந்தது. அடுத்த முட்டையை உடைக்கும்போது, மீண்டும் தண்ணீர்.
உடனே எங்களிடம் வந்த பாட்டி, யார் செய்த வேலை என்று கேட்டார். நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “யார் முட்டையைக் குடிச்சாங்களோ பாவம், கோழி முட்டைகளோடு மூணு ஆமை முட்டைகள் கலந்துருச்சுன்னு இப்பதான் சொல்லிட்டுப் போனார் முருகன்” என்றாரே பார்க்கலாம்! ”ஐயோ நாங்கதான் குடிச்சோம்” என்று தம்பி சொல்ல, மாட்டிக்கொண்டோம்!
- கே. காயத்ரி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.