Last Updated : 20 Sep, 2017 11:05 AM

 

Published : 20 Sep 2017 11:05 AM
Last Updated : 20 Sep 2017 11:05 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: தந்தத்தில் வளர்ந்த மான்

நா

ற்காலி ஏன் தேவை? அமர்வதற்கு. ஆடைகள் ஏன் உருவாக்கப்படுகின்றன? அணிந்துகொள்வதற்கு. வீடுகள் ஏன் அவசியம்? வசிப்பதற்கு. ஏன் தினமும் உணவு தயாரிக்கிறோம்? சாப்பிடுவதற்கு. இப்படி ஒவ்வொரு நாளும் நாம் பலவற்றை உருவாக்குகிறோம். ஏன்? அவை நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. அவை நமது அவசியத் தேவைகளாக மாறிவிட்டன.

நமக்கு உறுதியாகப் பலன் கிடைக்கும் என்று தெரிந்தால் நாம் அதற்காக உழைக்கத் தயங்கமாட்டோம். பலன் கிடைக்காது என்று தெரிந்தால் அதற்காக உழைத்து நம் நேரத்தை வீணடிக்கமாட்டோம். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையானது, இல்லையா?

அப்படியானால் நாம் ஏன் மாய்ந்து மாய்ந்து படம் வரைகிறோம்? ஏன் கற்பனை செய்து கதைகள் எழுதுகிறோம்? ஏன் இரவு பகலாக கவிதைகளை உருவாக்குகிறோம்? ஏன் பாட்டுப் பாடுகிறோம்? ஏன் நடனம் ஆடுகிறோம்? ஏன் மேடையில் நாடகம் போடுகிறோம்? ஓர் ஓவியத்தால், ஒரு கதையால், ஒரு பாடலால், ஒரு சிற்பத்தால் நமக்கு என்ன பலன் கிடைத்துவிடும்?

பிரான்ஸில் ஒரு பொருள் கிடைத்திருக்கிறது. அது தந்தம் என்று பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. ஆனால் கையில் எடுத்துப் பார்த்தபோது திகைத்துவிட்டார்கள். அழகான ஒரு மான் அதில் படுத்துக்கொண்டிருந்தது. பிறகு அதேபோல் இன்னொரு தந்தம் கிடைத்தது. அதிலும் ஒரு மான். ரொம்பக் காலம் கழித்து ஒருநாள் திடீரென்று ஏதோ தோன்ற, அந்த இரு தந்தங்களையும் இணைத்துப் பார்த்தார்கள். வியந்து போனார்கள். தனித்தனியே இருந்தாலும் இரண்டும் ஒரே தந்தத்தில் செய்யப்பட்ட இரு மான்கள். ஒரு மானின் வாய்க்கு அருகில் இன்னொரு மானின் வாலைக் சச்சிதமாகப் பொருத்திவிடமுடிந்தது.

இப்படி ஓர் அழகான யோசனை எப்படி ஒரு சிற்பிக்கு வந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆராய்ந்து பார்த்தபோது இந்த மான்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டவை என்பது தெரிந்தது. நீளமான ஒல்லியான தந்தம் என்பதால் இரண்டு மான்களையும் நீந்துவதுபோல் படுக்க வைத்திருக்கிறார்கள். அதனால் நீந்தும் மான் என்றே இந்தச் சிற்பத்துக்குப் பெயர் வைத்துவிட்டார்கள்.

ஆனால் இந்த மான் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒரு தந்தத்தைப் பார்த்தோமா அதைக் கடந்துபோனாமோ என்றில்லாமல் எதற்காக அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஒரு மானைச் செதுக்கியிருக்கிறார்கள்? ஒரே மாதிரி இரு மான்களை ஏன் உருவாக்கினார்கள்? இதைச் செய்தவர் யார்? இப்படி ஒரு மானை உருவாக்கவேண்டும் என்று ஏன் அவருக்குத் தோன்றியது? நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு, படுத்துத் தூங்குவதற்குப் பதில் எதற்காகச் சிரமப்பட்டு, உழைத்து இந்த மானை உருவாக்கவேண்டும்?

குகைக்குச் சென்றால் அங்கே பல ஓவியங்கள். விலங்குகள், இயற்கைக் காட்சிகள், மனிதர்கள் என்று வரைந்து தள்ளியிருக்கிறார்கள். கல்லை எடுத்துப் பார்த்தால் அதிலும் நுணுக்கமாக ஏதோ செதுக்கியிருக்கிறார்கள். பாறையை எடுத்து உடைத்து அதில் சிற்பம் வடித்திருக்கிறார்கள். வேட்டையாடும் மனிதர்களின் படங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அணிந்துகொள்ள ஆடை தேவை, உண்மை. ஆனால் எதற்காக எலும்புகளை வைத்து மணிகளை உருவாக்கி அணிந்துகொள்ளவேண்டும்? வேட்டையாடுவதற்கு ஆயுதம் தேவை, உண்மை. எதற்காக அதில் பூ, மரம் எல்லாம் வரைந்து அழகுபடுத்தவேண்டும்? மீண்டும் மானைப் பார்த்தார்கள். தந்தத்தைப் பார்த்தவுடன், அதன் அழகான வளைவைப் பார்த்ததும் ஒரு சிற்பிக்கு மானின் நினைவு ஏன் வந்தது? எப்படி வந்தது?

குளங்களில் மான் நீந்திச் செல்வதை மனிதர்கள் பார்த்திருக்கவேண்டும். அந்தக் காட்சி அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோயிருக்கவேண்டும். அந்த மான் எத்தனை அழகாக நீந்துகிறது பார் என்று தங்களுக்குள் அவர்கள் வியந்துகொண்டிருக்கவேண்டும். நானும் மானைப் போல் நீந்தட்டுமா என்று சொல்லி குளத்தில் குதித்திருக்கவும் கூடும். ராத்திரி கனவில் அந்த மான் வந்திருக்கலாம். மான் அழகாக இருக்கிறது, அழகாக நீந்துகிறது. நாள் முழுக்க அது நீந்திக்கொண்டே இருந்தாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். இரவில்கூட மானைப் பார்ப்பது அழகாகத்தான் இருக்கும்.

ஆனால் மான் எப்போதுமே நீந்திக்கொண்டேவா இருக்கும்? எனவே தனக்குப் பிடித்த, தனக்கு மிகவும் நெருக்கமான மானை மனிதர்கள் ஓவியமாக வரைந்து வைத்துக்கொண்டார்கள். சிலர் அந்த மான் போலவே துள்ளித் துள்ளி நடனமாடி மகிழ்ந்தார்கள். சிலர் மான்போல் ஒலி எழுப்பிச் சிரித்தார்கள். யாரோ ஒருவருக்குத் தந்தம் கிடைத்திருக்கிறது. அதில் மானை அவர் உருவாக்கிவிட்டார். ஓவியத்திலும் சிற்பத்திலும் உள்ள மான் எப்போதும் நீந்திக்கொண்டிருக்கும். அதைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பக்கத்திலேயே ஆசையாக வைத்துக்கொள்ளலாம்.

ஒரு மானால், மனிதனால் என்றென்றும் வாழமுடியாது. ஆனால் மனிதன் உருவாக்கிய மானால் காலத்தைக் கடந்து வாழமுடியும். எனவே அந்த மான் ஒரு கலைப்பொருள். நாற்காலி, ஆடை, உணவு, வீடு போல் கலையும் நமக்குத் தேவை. ரசிப்பதற்கும் மகிழ்வதற்கும். கலை இல்லாவிட்டால் கற்பனை இல்லை. கற்பனை இல்லாவிட்டால் கண்டுபிடிப்புகள் இல்லை. கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.

அதெல்லாம் சரிதான், நான் 13,000 ஆண்டுகளாக நீந்திக்கொண்டிருந்தாலும் ஒருமுறைகூட தும்மல் வந்ததில்லை, அதை யாராவது கவனித்தீர்களா என்கிறது மான்!

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x