Last Updated : 06 Sep, 2017 10:23 AM

 

Published : 06 Sep 2017 10:23 AM
Last Updated : 06 Sep 2017 10:23 AM

கதை: இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!

கா

ட்டில் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் பூந்தேனைச் சுவைப்பதில் தீவிரமாக இருந்தன. இந்தக் காட்சிகளை ரசித்துக்கொண்டே வந்தது ஒரு குரங்கு.

திடீரென்று மஞ்சள் வண்ண இறக்கைகளோடு ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி குரங்கு அருகில் இருந்த செடியில் அமர்ந்தது.

‘அடடா! இவ்வளவு அழகான வண்ணத்துப்பூச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை!’ என்று நினைத்த குரங்கு, அடுத்த நொடி வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தது.

பயந்துபோன வண்ணத்துப்பூச்சி, வேகமாக இறக்கைகளை அடித்துப் பறக்க முயன்றது. அப்போது அதன் இறக்கையில் ஒன்று, இரண்டாகக் கிழிந்துவிட்டது.

வலியால் துடித்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டு குரங்குக்கு வருத்தமாகிவிட்டது.

’’நான் உன்னைத் துன்புறுத்தும் நோக்கத்தில் பிடிக்கவில்லை. உன்னை அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காக யோசிக்காமல் பிடித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று கெஞ்சியது.

”உன்னை மன்னித்தால் கிழிந்த என் இறக்கை மீண்டும் ஒட்டிவிடுமா? இனி நான் வாழ்நாள் முழுவதும் பறக்க முடியாதா? அப்படியென்றால் உணவு சேகரிக்கவும் முடியாது. இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்” என்று கோபத்தில் படபடத்தது வண்ணத்துப்பூச்சி.

”மன்னிக்க முடியாத செயலை நான் செய்துவிட்டேன். உன்னை மீண்டும் பறக்க வைக்க ஏதாவது செய்கிறேன். அதுவரை இந்தச் செடியிலேயே அமர்ந்திரு. எங்கேயும் போய்விடாதே” என்றது குரங்கு.

“என்னால் எங்கே போக முடியும்? இங்கேதான் இருப்பேன்” என்றது வண்ணத்துப்பூச்சி.

ரீங்காரக் குரல் எழுப்பியபடி வந்துகொண்டிருந்த ஒரு தேனீயைப் பார்த்தது குரங்கு.

“தேனீ, எனக்கு ஒரு உதவி வேண்டும். சிறிது நேரத்துக்கு உன்னுடைய தேன் உறிஞ்சும் ஊசியை எனக்குக் கொடுக்க முடியுமா?’’

“உன் கிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்வது? என்னால் ஒரு நொடி கூட வேலை செய்யாமல் இருக்க முடியாது.”

“வண்ணத்துப்பூச்சியின் இறக்கையைத் தைத்த உடனே திருப்பிக் கொடுத்துவிடுவேன்.”

”நீ தையல் சிட்டுவிடம் கேள். அதுதான் அழகாகத் தைக்கும்” என்று பறந்தது தேனீ.

வழியில் சிலந்தியைக் கண்டவுடன், நூல் வாங்கிவிட முடிவெடுத்த குரங்கு, தன்னுடைய தேவையைச் சொன்னது.

சிறிது நூலைக் கொடுத்த சிலந்தி, “ஊசிக்கு என்ன செய்வாய்?” என்று கேட்டது.

“தையல் சிட்டுவிடம் நூலைக் கொடுத்தால் கிழிந்த இறக்கையைத் தைத்துவிடும்” என்று சொன்ன குரங்கு, தீவிரமாகத் தைப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தையல் சிட்டுவிடம் வந்தது. தனக்கு உதவும்படிக் கேட்டது.

“நான் இலைகளைத்தான் தைப்பேன். வண்ணத்துப்பூச்சியின் இறக்கையோ மிகவும் மென்மையானது. நான் தைத்தால் இன்னும் மோசமாகக் கிழிந்துவிடலாம். ஒரு செயலைச் செய்துவிட்டு வருந்துவதற்குப் பதில், அந்தச் செயலைச் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று அறிவுரையும் வழங்கிவிட்டு, தைக்க ஆரம்பித்தது தையல் சிட்டு.

குரங்குக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வருத்தத்துடன் அப்படியே உட்கார்ந்துவிட்டது. வீடு கட்டுவதற்காக மரத்தைக் கொத்திக்கொண்டிருந்த ஒரு மரங்கொத்தி, திரும்பிப் பார்த்தது. விஷயம் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டது.

”வடக்கு பக்கம் இருக்கும் ஒரு கருவேல மரத்தில் பிசின் வடிந்துகொண்டிருக்கிறது. நீ அந்தப் பிசினை எடுத்து கிழிந்த இறக்கையை ஒட்டிவிடு. தைக்கும் யோசனையை விட ஒட்டும் யோசனை நல்ல பலனை அளிக்கும். வண்ணத்துப்பூச்சியும் பழையபடி பறக்க ஆரம்பிக்கும்” என்றது மரங்கொத்தி.

“நன்றி மரங்கொத்தி. ஆனால் இந்த இருளில் நான் எப்படிக் கருவேல மரத்தைக் கண்டுபிடிப்பேன்?”

“மின்மினிகளே இந்தக் குரங்கண்ணாவுக்கு உங்கள் உதவி தேவை. கொஞ்சம் வெளிச்சம் கொடுத்துவிட்டு வாருங்கள்” என்றதும் மின்மினிகள் மகிழ்ச்சியோடு கிளம்பின.

பிசினை எடுத்துக்கொண்டு, வண்ணத்துப்பூச்சி இருந்த செடிக்கு வந்தது குரங்கு. கிழிந்த இறகுகளைச் சேர்த்துப் பசையால் தடவியது. சிறிது நேரத்தில் பசை காய்ந்து, இறகு பழையபடி ஒட்டிக்கொண்டது.

வண்ணத்துப்பூச்சி மெதுவாக இறக்கையை அசைத்துப் பார்த்தது. பிறகு வேகமாக அடித்துப் பார்த்தது. சட்டென்று ஒரு சுற்றுச் சுற்றி வந்து உட்கார்ந்தது. குரங்குக்கு நிம்மதியாக இருந்தது.

“வெளிச்சம் கொடுத்த மின்மினிகளுக்கும், இந்த யோசனை வழங்கிய மரங்கொத்திக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வலியில் உன்னைத் திட்டிவிட்டேன். என்னைத் துன்புறுத்தும் நோக்கம் இன்றி, விபத்தாக நடந்த இந்த நிகழ்வை நினைத்து நீ வருந்தவேண்டாம். உன்னுடைய அன்புக்கும் உதவி செய்யும் எண்ணத்துக்கும் நன்றி. என்னைத் தேடுவார்கள். நான் வருகிறேன்” என்று வேகமாகப் பறந்து சென்றது வண்ணத்துப்பூச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x