Last Updated : 14 Dec, 2016 10:35 AM

 

Published : 14 Dec 2016 10:35 AM
Last Updated : 14 Dec 2016 10:35 AM

தினுசு தினுசா விளையாட்டு: தோளைப் பிடி, காலைப் பிடி

குழந்தைகள் விளையாடுவதைச் சற்று நேரம் நின்று பாருங்களேன். நமக்கும் அவர்களின் உற்சாகமும் குதூகலமும் தொற்றிக்கொள்ளும். விளையாடும்போது பூவாய்ப் பூத்திருக்கும் குழந்தைகளின் முகம், பார்க்கும் யாருடைய மனதையும் லேசாக்கிவிடும்.

குழந்தைகள் விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பதற்கெல்லாம் பெரிதாக இடமில்லை. விளையாடும்போது கிடைக்கும் சந்தோஷம் மட்டுமே பிரதானம். நாமும் வாராவாரம் களைப்பே இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு, ‘தோளைப் பிடி, காலைப் பிடி’.

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாடுபவர்கள் அனைவரும் நான்கு நான்கு பேர் கொண்ட சிறு குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் யாரைச் சேர்க்க வேண்டும் என்பதற்குச் சிறு விளையாட்டு உள்ளது. முதலில் அதை விளையாடுவோமா?

முதலில் விளையாடுபவர்கள் அனைவரும் வரிசையாக நில்லுங்கள். மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, 16 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு குழுவுக்கு நான்கு பேர் வீதம், மொத்தம் நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

நிற்கிற வரிசைப்படி முதலில் நிற்பவர் ஒன்று, அடுத்தடுத்து நிற்பவர் இரண்டு, மூன்று, நான்கு எனச் சொல்ல வேண்டும். அடுத்து நிற்பவர் மீண்டும் ஒன்று என்று தொடங்க, இப்படியாக நான்கு முறை சொல்ல வேண்டும். பிறகு, எண் ஒன்று என்று சொன்னவர்கள் முதல் குழுவாகவும், இரண்டு என்றவர்கள் இரண்டாவது குழுவாகவும், இப்படி மூன்று, நான்கு குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது நான்கு குழுக்கள் தயார். விளையாடத் தயாராவோமா?

விளையாட்டு தொடங்கும் இடத்திலிருந்து, சுமார் முப்பது அல்லது நாற்பது அடி தொலைவில் ஒரு இடத்தை இலக்காகக் குறித்துக் கொள்ளுங்கள்.

குழுவிலுள்ள நால்வரில் இருவர் பக்கவாட்டில் நின்றபடி, இடது வலது கைகளைப் பின்னிக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரின் மடக்கிய இடது காலை, இருவரும் பின்னியிருக்கும் கைகளால் பிடித்துக்கொள்ளுங்கள். மூன்றாவது நபர் தன்னுடைய இரு கைகளால் இருவரின் தோள்பட்டைகளையும் பிடித்துக்கொள்ள வேண்டும். வலது காலைப் பின்னே நிற்கும் நான்காவது நபர் பிடித்துக் கொள்வார்.

நான்கு குழுக்களும் இவ்வாறு நின்றுகொண்ட பிறகு, யாராவது ஒருவர் ‘ரெடி’ என்றதும், “வயதான தாத்தா வண்டியிலே வர்றாரு…

வழிவிடு… வழிவிடு…” என்று நான்கு குழுக்களும் பாடிக்கொண்டே ஓடிப் போய், எதிரில் இருக்கும் இலக்கைத் தொட்டுவிட்டு, திரும்பி வாருங்கள்.

இதில், முதலில் வரும் குழுவே வெற்றிபெற்ற குழு.

அப்படி ஓடும்போது, தோள்பட்டையைப் பிடித்திருப்பவர் கைகளை எடுத்துவிடக் கூடாது. அதுபோலவே, பின்னியிருக்கும் கைகள் மேலிருக்கும் காலையும் விட்டுவிடக் கூடாது. பின்னால் நிற்பவரும் பிடித்திருக்கும் காலையும் கீழே விட்டுவிடாமல் கைகளால் பிடித்தபடியே ஓடிவர வேண்டும். இதில், குழுவிலுள்ள யாராவது ஒருவர் பிடியை விட்டாலும், அந்தக் குழுவே ‘அவுட்’.

படிக்கவே விளையாட்டு ஜாலியாக இருக்கிறதல்லவா? வாங்க, விளையாடித்தான் பார்ப்போம்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x