Published : 27 Dec 2016 04:52 PM
Last Updated : 27 Dec 2016 04:52 PM

காரணம் ஆயிரம்: உராய்வால் இயங்கும் உலகம்!

மாணவர்களே! பரீட்சை விடைத் தாள்களை நூல் கொண்டு கட்டிக் கொடுக்கிறீர்கள் அல்லவா? ஒருவேளை நாம் முடிச்சுப்போட்டுக் கட்டிய நூல் அவிழ்ந்துவிட்டால் என்னாவது?

இப்படி ஒரு சந்தேகமும் பயமும் எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா?

“நிச்சயமாக அவிழாது, நான் இறுக்கி முடிச்சு போட்டிருக்கிறேன். அவிழ்வதற்கு வாய்ப்பே இல்லை” என்று சொல்லிச் சந்தோஷப்பட்டிருக்கிறீர்களா!

கேள்வி இதுதான். ஏன் நூலில் போடும் முடிச்சுகள் அவிழ்ந்துவிடுவதில்லை?

“இது என்ன கேள்வி? முடிச்சு போட்டாச்சு, அது அவிழாது”.

இப்படிப் பொதுவாகச் சொல்லக்கூடாது.

‘ஏன் முடிச்சுகள் அவிழ்வதில்லை?’

இன்னொரு கேள்வியும் உண்டு. “இரண்டு இரும்புக் கம்பிகளை வளைத்துக் கட்டினால்கூட அதைத் திரும்பவும் பிரித்துவிட முடிகிறது. ஆனால், அதைவிட மென்மையான நூல் முடிச்சுகளை ஏன் பிரிக்க முடிவதில்லை?

காரணம் என்ன?

ஒரு விளக்கத்தைப் பார்ப்போமா? கிராமங்களில் வயல் வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கட்டிப் போடும்போது நீளமான கயிற்றைக் கொண்டு கட்டுவார்கள். சில சமயம் கம்புகளில் முடிச்சுகள் போட்டுக் கட்டாமல், முளைக்கம்பு மீது நான்கைந்து சுற்றுகள் மட்டுமே சுற்றிவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுவும் அவிழாமல் இருக்கும். முடிச்சுகள்தான் அவிழாமல் இருக்கிறது என்று நினைத்தால், முடிச்சு போடாமலேயே கயிறுகளும் அவிழ்வதில்லை. அது ஏன்?

இதற்குக் காரணம், நூலுக்கும் பொருளுக்கும் உள்ள உராய்வு விசைதான். இதனால்தான் முடிச்சுகள் அவிழ்வதில்லை. சரி, இப்போது விடைத்தாள் முடிச்சுக்கு வருவோம். ஒரே நூலைக் கொண்டுதான் விடைத்தாள்களைக் கட்டுகிறோம். ஆனால், கட்டப்படும் நூலின் இரு முனைப் பகுதிகளும், இருவேறு பொருட்களாகச் செயல்படுகின்றன. இதனால் தங்களுக்குள் அதிக உராய்வு விசையை ஏற்படுத்திக்கொள்கின்றன.

நூலை வளைத்து நெளித்துப் போடும் முடிச்சுகளும் உராய்வு விசையை அதிகப்படுத்துகின்றன. எனவே நீங்கள் என்னதான் வலுவாக முடிச்சு போட்டாலும், அது அவிழ்ந்துவிடுமா? அவிழ்ந்துவிடாதா? என்பதைத் தீர்மானிப்பது உராய்வு விசையும் பொருளின் (சொரசொரப்பு அல்லது வழவழப்பு) தன்மைதான்.

எங்கெங்கும் உராய்வு

நம் அன்றாட வாழ்க்கையில் இந்த உராய்வு விசையின் பங்கு மிகப் பெரியது. ஆனால், நாம் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. உராய்வு விசை இல்லாமல், பூமிக்கும் நமக்கும் தொடுதல் தொடர்பு எளிதாக இருக்காது. ஓர் அடிகூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. நாம் நடப்பதற்கு, உட்காருவதற்கும், வாகனங்கள் ஓட்டுவதற்கும், எழுதுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் உராய்வு தேவை. ஏனென்றால் இரண்டு பொருட்களுக்கான தொடர்பை இந்த உராய்வு விசைதான் ஏற்படுத்தித் தருகிறது.

தாளில் பேனா கொண்டு எழுதும்போது பேனாவுக்கும் தாளுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துவது உராய்வு விசைதான். உராய்வு விசை இல்லையென்றால், தாள் முழுவதும் மை கொட்டிப் பரவுமே தவிர எழுத முடியாது.

பொருட்களின் தன்மைக்கு ஏற்ப உராய்வு மாறுபடும். சொரசொரப்பான தரையில் நம்மால் எளிமையாக நடந்துவிட முடிகிறது. ஏனெனில் நமது பாதத்துக்கும், தரைக்குமான உராய்வு விசை அதிகம். ஆனால், வழவழப்பான மார்பிள் தரைகளில் நடக்கும்போது கவனமாக நடக்க வேண்டியிருக்கிறது. வழவழப்பான தரைகளில் தரைக்கும் பாதத்துக்குமான உராய்வு விசை குறைவு. அதனால் நாம் சில சமயங்களில் வழுக்கி விழவும் நேர்கிறது.

ஒரு வேளை உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் போனால் இந்த உலகம் என்னாகும்?

மலைகள் மீது திரண்டு நிற்கும் பாறைகள் உருண்டு விழும். மலைகள் எல்லாம் சரிந்து மணல் சமவெளியாகிவிடும். நடக்கவோ உட்காரவோ ஓடவோ முடியாது. வார்தா மாதிரிப் புயல் வந்து கொண்டே இருக்கும். ஓயவே, ஓயாது. எங்காவது எழுந்த ஒலியும் குரலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை சமதளமாகிவிடும்.

சுவர்க் கடிகாரங்களை மாட்ட ஆணி அடிக்க முடியாது. மேற்கூரையில் ஃபேன் போட முடியாது. பூட்டைப் பூட்ட முடியாது (பூட்டு செய்யவே முடியாது). வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட எந்த ஒரு பொருளையோ இயந்திரத்தையோ செய்ய முடியாது. நிலத்தில் சுனாமி பொங்கியது போல உலகம் சிதைந்துவிடும்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்தப் பூமி ஒரு வழவழப்பான பந்து போல மாறிவிடும்.

(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x