Last Updated : 02 Mar, 2016 11:43 AM

 

Published : 02 Mar 2016 11:43 AM
Last Updated : 02 Mar 2016 11:43 AM

மேஜிக்... மேஜிக்... - காகித கப்பில் கலக்கலான வித்தை

போன வாரத்துக்கு முந்தைய வாரம் பலூன் மேஜிக்கைச் செய்து பார்த்தீர்களா? இந்த வாரம் காகித கப்பைக் கொண்டு ஒரு மேஜிக் வித்தையைச் செய்வோமா?

என்னென்ன தேவை?

மூன்று காகிதக் கோப்பைகள் (காகித கப்).

மேஜிக் செய்வது எப்படி?

# ஒரு மேஜை மீது மூன்று காகிதக் கோப்பைகளை வரிசையாக வையுங்கள்.

# நடுவில் உள்ள கோப்பை மட்டும் மேல் நோக்கி இருக்க வேண்டும். அதற்குப் பக்கத்தில் உள்ள இரண்டு கோப்பைகளும் (வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் கோப்பைகள்) கீழே கவிழ்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

# இப்போது உங்கள் நண்பரை அழைத்து, அவருக்கு ஒரு சவால் விடுங்கள்.

# கீழே கவிழ்க்கப்பட்டிருக்கும் இரண்டு கோப்பைகளையும் மேல் நோக்கி மாற்ற வேண்டும், ஆனால் கண்டிப்பாக ஒரே நேரத்தில் இரண்டு கோப்பைகளைத் தொட்டு மாற்ற வேண்டும், அதுவும் இரண்டு முறை நகர்த்தி மாற்ற வேண்டும். இதுதான் நிபந்தனை.

# உங்கள் நண்பர் பொதுவாக வலது கோப்பையையும் இடது கோப்பையையும் தனித்தனியாக மாற்ற முயற்சிப்பார், ஆனால் அது செல்லாது. நீங்கள் சொல்லும் நிபந்தனையைக் கொண்டு அவரால் கண்டிப்பாகக் கோப்பைகளை மாற்ற முடியாது.

# உங்கள் நண்பர் முயற்சி செய்து தோற்ற பின், நீங்கள் இந்த சவாலை செய்து காட்டுங்கள்.

# வலது பக்கக் கோப்பையையும், நடுவில் இருக்கும் கோப்பையையும் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் கொண்டு திருப்பி வையுங்கள். இப்போது, வலது பக்க கோப்பை மேல் நோக்கியும், நடுவில் இருக்கும் கோப்பை கீழ் நோக்கி இருக்கும்.

# அடுத்து, நடுவில் இருக்கும் கோப்பையையும் இடது பக்கக் கோப்பையையும் இரே நேரத்தில் திருப்புங்கள். இப்போது மூன்று கோப்பைகளுமே மேல் நோக்கி இருக்கும்.

# மறுபடியும் கோப்பைகளை வைத்து வித்தை செய்து காட்டுவதற்கு முன், முன்பு இருந்தபடி வரிசையாக அடுக்கி, கண்களை மூடி மந்திரம் சொல்லி, உங்கள் நண்பரை முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

# ஆனால், இந்த முறையும் உங்கள் நண்பரால் இதைச் செய்ய முடியாது.

மேஜிக் ரகசியம்

# நீங்கள் வித்தையை உங்கள் நண்பர் முன் செய்துகாட்டிய பிறகும் அவரால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? நீங்கள் அவரிடம் வித்தையை செய்து காட்டிய பின், கோப்பைகளை வரிசையாக அடுக்கும்போது, தந்திரமாக அதை மாற்றி அடுக்கி வைத்துவிட வேண்டும்.

# முதலில் நடுவில் இருக்கும் கோப்பை மட்டுமே மேல் நோக்கி இருக்கும். ஆனால், இந்த முறை நடுவில் இருக்கும் கோப்பையைத் தவிர பக்கத்தில் இருக்கும் இரண்டு கோப்பைகளும் மேல் நோக்கி இருக்க வேண்டும். நடுக் கோப்பை கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

# இது முன்பு அடுக்கி வைத்த வரிசை முறை போலவே இருப்பதால் உங்கள் நண்பர் நீங்கள் செய்த மாற்றத்தை கவனிக்க மாட்டார். நீங்களும் அவர் அதை கவனித்துவிடாதபடி அவருடன் பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

# இந்த வரிசை முறைக்கு மாற்றிவிட்டால், முன்பு செய்த வித்தையை எத்தனை முறை செய்தாலும் சரியாக வராது. இதுதான் ரகசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x