Last Updated : 03 Feb, 2021 03:15 AM

Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

நீங்கள் சேட்டைக்காரக் குழந்தை இல்லையா?

இப்போது உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியராக நீங்கள் இருக்கலாம். ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள், என்ன சேட்டை எல்லாம் செய்தீர்கள், என்னென்ன கற்பனை செய்தீர்கள், எப்படி அப்பாவியாக இருந்தீர்கள், எப்படித் துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்தீர்கள், எப்படி அடம் பிடித்தீர்கள் என்றெல்லாம் யோசித் திருக்கிறீர்களா?

உலகில் உள்ள அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டாலும், அவர்களுடைய குழந்தைப் பருவத்தை எளிதில் மறந்து விடுவதில்லை. வளரும் பருவம் என்பது பல்வேறு கதைகள் நிரம்பியதாகவே இருக்கிறது. ஆனால், அந்தக் கதைகளை நாம் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்க்கிறோமா, மகிழ்ச்சியடைகிறோமா?

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற புத்தகம் ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கினின் ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ (When daddy was a little boy). இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பள்ளி ஆசிரியராக இருந்த நா. முகம்மது செரீபு. லேவ் தொக்மகோவின் ஈர்ப்பான ஓவியங்களுடன், பெரிய அளவில் கெட்டி அட்டை கொண்ட அழகான புத்தகம் அது. ரஷ்யாவிலிருந்து தமிழ் நூல்களை வெளியிட்ட ராதுகா பதிப்பகம் 1988-ல்இந்த நூலை வெளியிட்டிருந்தது.

அலெக்சாந்தர் ரஸ்கினின் மகள் சிறுமியாக இருந்தபோது, மிகவும் நோயுற்றிருந்தார். அப்போது, தன் சிறு வயதில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களை மகளிடம் ரஸ்கின் விவரித்த கதைகள் இவை.

புதிய வேலை செய்யும் ஒருவரைப் பார்க்கும்போதும், பிற்காலத்தில் அந்தப் பணியைச் செய்பவராகத் தானும் மாற வேண்டுமென ரஸ்கின் விரும்புகிறார். ஐஸ்கிரீம் விற்பனையாளராக இருப்பதன் மூலம் இடையிடையே தானும் ஒரு ஐஸ்கிரீமை எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம்; வெவ்வேறு ஊர்களுக்குப் போகும் ரயில் பெட்டிகளையே இணைப்பது என்பது எவ்வளவு உற்சாகமான வேலை; இரவுக் காவல் காரராக இருப்பதால், எல்லோரும் தூங்கும்போது தான் மட்டும் விசில் அடிக்க முடியுமே… இப்படி எதிர்காலத்தில் அவர் பார்க்கவிருந்த வேலை மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேநேரம் எந்த வேலையைச் செய்தாலும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறார்.

ஒரு முறை ரொட்டியைச் சாப்பிட மாட்டேன் என ரஸ்கின் அடம்பிடிக்கிறார். சரி என்று யாருமே அவருக்கு உணவு தராமல் இருந்துவிடுறார்கள். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. வேறு வழியில்லாமல் எதை மறுத்தாரோ, அதையே சாப்பிடுகிறார் ரஸ்கின். ஆனால், பசியுடன் சாப்பிடும்போது உணவு சுவை மிகுந்ததாக இருக்கிறது.

மற்றொரு முறை சர்க்கஸில் விலங்குகளைப் பழக்கும் ஒருவரைப் பார்த்து உத்வேகமடைந்து, பூங்காவில் ஒரு நாயைத் தன் கண்களாலேயே கட்டுப் படுத்த ரஸ்கின் முயல்கிறார். ஆனால், சட்டென்று அது அவரைக் கடித்துவிடுகிறது. சர்க்கஸில் விலங்குகளைப் பழக்கும் முறை வேறு என்பதைப் புரிந்துகொள்கிறார்.

இப்படி இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கதையும் நம் வாழ்க்கையில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களை அசைபோட வைக்கின்றன. இந்தக் கதைகளை நீங்கள் வாசித்தால்தான், அவற்றின் சுவாரசியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த நூலின் சமீபத்திய பதிப்புகளை என்.சி.பி.எச்., ஈஸ்வர சந்தானமூர்த்தி மறுவரைவுடன் புக்ஸ் ஃபார் சில்ரன் ஆகியவை வெளியிட்டுள்ளன. ரஷ்ய சிறார் நூல்களை மறுபதிப்பு செய்துவரும் ஆதி பதிப்பகம் ‘தங்கமான எங்கள் ஊர்’ நாவலை அடுத்து, ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ நூலின் மறுபதிப்பை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இந்த நூல் வெளியாகி 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழில் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் இந்த நூல் தரும் சுவாரசிய உணர்வு இன்றுவரை குன்றவில்லை.

அப்பா சிறுவனாக இருந்தபோது,

அலெக்சாந்தர் ரஸ்கின்,

தமிழில்: நா. முகம்மது ஷெரீபு,

ஆதி பதிப்பகம்,

தொடர்புக்கு: 99948 80005


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x