Last Updated : 15 Jul, 2015 12:07 PM

 

Published : 15 Jul 2015 12:07 PM
Last Updated : 15 Jul 2015 12:07 PM

சித்திரக்கதை: யாழினி தந்த பரிசு

யாழினி படிக்கும் பள்ளியில் இன்று புத்தகக் கண்காட்சி. பள்ளியின் நுழைவாயிலில் வண்ணத் தோரணங்களும், புத்தகங்கள் பற்றி எழுதப்பட்டிருந்த சிறப்புகளுடன் கூடிய தட்டிகளும் கட்டப்பட்டிருந்தன.

யாழினிக்குப் புத்தம் என்றால் ரொம்பரொம்பப் பிடிக்கும். எப்போதும் புத்தகங்களை விரும்பிப் படிப்பாள். புத்தகம் என்றதும் பாடப் புத்தகம் என்று நினைத்துவிடாதீர்கள். பாடப் புத்தகத்தைத் தாண்டி, கதை, கட்டுரை நூல்களையும் விரும்பி படிப்பாள் யாழினி. அதிலும், படக் கதைகள் என்றால் அவளுக்கு ரொம்பவும் உயிர். தினமும் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொஞ்சம் பக்கங்களாவது படிக்காமல் தூங்க மாட்டாள்.

அம்மாவிடம் கெஞ்சி, அவளது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அரசுக் கிளை நூலகத்தில்கூட யாழினி உறுப்பினராகச் சேர்ந்துவிட்டாள். அவள் படிக்கும் பள்ளியிலேயே புத்தகக் கண்காட்சி என்றதும், அவள் மனம் அளவில்லாமல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

காலையிலேயே உள்ளூர் பிரமுகரால் புத்தகக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. விழாவுக்குக் குழந்தைகளின் பெற்றோர்களும் ஏராளமாக வந்திருந்தார்கள்.

யாழினியின் அம்மா சாயங்காலம் வருவதாகக் கூறியிருந்தார். வகுப்பில் இருப்பு கொள்ளாமல் அம்மா வருகிறாரா என்று வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி.

“ரெண்டு வீடுகளுக்குப் போயி வேலை செஞ்சிட்டுத்தானே அம்மா வரணும்!’ யாழினி மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

அவளின் தோழிகள் அவரவர் அம்மா அப்பாவோடு வந்து புத்தகங்கள் வாங்கிவருவதை ஆசைஆசையாக வேடிக்கை பார்த்தாள்.

பள்ளிக்கூட மணி அடித்தது.

“மணி மூணு ஆச்சு. அம்மாவை இன்னும் காணலியே…!’

வாசலில் அம்மாவின் முகம் தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.

“அய்...எங்கம்மா வந்துட்டாங்க...!” என்று அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு குதித்தாள்.

இருவரும் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தார்கள். புதிய புத்தகங்களின் வாசம் வீசியது. யாழினிக்கு ரொம்ப பிடித்த வாசம். ஒரு நிமிடம் கண்ணை மூடி ஆழமாய்ச் சுவாசித்தாள்.

அழகழகான வண்ணங்களில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு புத்தகமாய் ஆர்வத்தோடு புரட்டிப் பார்த்தாள்.

நல்ல பளபளப்பான தாளில் புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அப்படியே விரல்களால் புத்தகப் பக்கங்களைத் தடவிக் கொடுத்தாள். ஆசையாகப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தைப் புரட்டினாள். அதன் விலையைப் பார்த்தாள்.

அம்மா நேற்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“ செல்லம், அம்மாகிட்டே அம்பது ரூபாதான் இருக்கு. அதுக்கு ஏதாவது புத்தகம் வாங்கிக்க. கூட வேற புத்தகம் வாங்கச் சொல்லி, அம்மாவ தொல்லைப்படுத்தக் கூடாது...!”

‘சரி’ என்பதாய்த் தலையாட்டி இருந்தாள் யாழினி.

அம்மா சொன்னதுபோல், ஐம்பது ரூபாய்க்கு அவளுக்குப் பிடித்த புத்தகமொன்றை வாங்கிக் கொண்டாள். இன்னும் வேறு சில புத்தகங்களையும் ஆசையாக எடுத்துப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள்.

“போதும்…வா போகலாம்…!” என்று அம்மா சொன்னதை அவள் கேட்கவில்லை.

அம்மாவுக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது. படங்களுடன் கூடிய அழகான சிறு புத்தகமொன்றை யாழினி கையில் எடுத்தாள்.

“அம்மா, இந்தப் புத்தகம் நல்லாயிருக்கில்லே…!” என்றாள், கண்களில் ஆர்வம் மின்ன. என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மாவுக்கு.

யாழினி கையிலிருந்த ஜாமெண்ட்ரி டப்பாவில் சேர்த்து வைத்திருந்த இரு அழுக்கு பத்து ரூபாய்களை எடுத்தாள். அந்தக் கதைப் புத்தகத்தை வாங்கினாள்.

“இது எங்கம்மாவுக்கு, என்னோட பரிசு...!” என்று நீட்டினாள்.

“எனக்குத்தான் படிக்கத் தெரியாதேம்மா...” என்றாள் அம்மா கண்களில் நீர்க்கோர்க்க.

உடனே, யாழினி “ அதனாலென்ன...எங்கம்மாவுக்கு எல்லாக் கதையையும் நான் படிச்சிச் சொல்வேனே..!” என்றாள்.

“சரிடா, என் அறிவுச் செல்லமே...!” என்று யாழினியின் கன்னத்தைப் பிடித்துச் செல்லமாய் முத்தமிட்டாள் அம்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x