Published : 28 Aug 2019 10:31 AM
Last Updated : 28 Aug 2019 10:31 AM

இந்தப் பாடம் இனிக்கும் 09: இசைபட வாழ்தல்

ஆதி

இசை – பிறந்தது முதல் இறப்பது வரை நம் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களில் ஒன்று. இசை நம் காதை வந்தடையும்போது கேட்காமலோ, பாடல் வரிகளை முணுமுணுக்காமலோ, தாளம் போடாமலோ, ரசிக்காமலோ நம்மால் இருக்க முடிவதில்லை. பழங்குடி மரபிலும் பண்டைய இந்தியச் சிற்பங்கள்-ஓவியங்களில் இருந்தும் நமது பண்பாட்டில் இருந்த இசைக்கருவிகள் பலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.

* இசைக்கருவிகளில் தந்தி அல்லது நரம்புக் கருவிகள், காற்றுக் கருவிகள், தோல் கருவிகள், உலோக மற்றும் திடப்பொருள் கருவிகள் என நான்கு வகைகள் உள்ளன.

*இந்தியாவில் ஐநூறு வகையான இசைக்கருவிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. பழங்குடிகளின் எளிமையான இசைக்கருவிகள் முதல் பெரிதும் வளர்ச்சி அடைந்த நவீன இசைக்கருவிகள்வரை இவற்றில் அடங்கும்.

* தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டறிந்ததிலேயே பழமையான இசைக்கருவி புல்லாங்குழல். மாமத யானைகள் (Mammoth), அன்னப்பறவைகளின் எலும்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்தக் குழல்கள் 30,000 ஆண்டுகள் பழமையானவை.

* சிந்து சமவெளி நாகரிகத்தில் பறவை வடிவிலான களிமண் ஊதல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி இசைக்கும் சத்தத்தை அந்தக் கால மக்கள் எழுப்பியிருக்கலாம்.

* உலகப் புகழ்பெற்ற நவீன நாகரிகங்களில் தந்திக் கருவிகள் இருந்துள்ளன. Harp எனப்படும் தந்திக் கருவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழ் மரபில் மிகவும் தொன்மையான கருவி யாழ். இதன் நவீன வடிவமே வீணை.

* ஆதி இயற்கை இசைக்கருவிகளில் ஒன்று சங்கு. தமிழ்நாட்டில் சில சமூகங்களிலும் வங்காளிகளிடமும் அமங்கல நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், மங்கல நிகழ்ச்சிகளிலும் சங்கு ஊதுவது வழக்கமாக இருக்கிறது. கோயில் சடங்குகளின் ஒரு பகுதியாகவும் போர் தொடங்கியதன் அறிகுறியாகவும் சங்கு ஊதும் வழக்கம் இருந்திருக்கிறது.

* தமிழர்களின் இசைக்கருவிகளில் முதன்மையானது நாகஸ்வரம். இதில் ‘பாரி நாகஸ்வரம்’ என்பது நீளமாக இருக்கும். அதேநேரம் தெருக்கூத்து, நாட்டுப்புறக் கலை வடிவங்களில் இசைக்கப்படுவது முகவீணை.

* கேரளக் கோயில் சடங்குகள், விழாக்களில் ஐந்து இசைக்கருவிகளைச் சேர்ந்திசைப்பது பஞ்சவாத்திய முறை எனப்படுகிறது. இதில் திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு ஆகிய கருவிகள் வாசிக்கப்படுகின்றன. இந்த இசையின் தொடக்கமாக சங்கு ஊதப்படுவது உண்டு.

* பண்டைக் காலத்தில் தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் செய்திகளைத் தெரிவிக்க முரசு போன்ற இசைக்கருவிகளை ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கூறப்படும் செய்தியைப் பொறுத்து முரசு அடிக்கப்படும் தாள-அளவுகள் ஏற்ற, இறக்கத்தோடு அமையும்.

* கைகளால் இயக்கப்படும் ஹார்மோனியத்தைப் பார்த்திருப்போம். இருக்கையில் உட்கார்ந்து கால்களால் இயக்கப்படும் ஹார்மோனியங்களும் உண்டு. கையில் இயக்கப்படும் ஹார்மோனியம் எடுத்துச் செல்ல வசதியாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பதால், கால்களால் இயக்கப்படுபவை இந்தியாவில் பிரபலமடையவில்லை.

* ‘டேப்’ எனப்படும் அகலமான தோல் இசைக்கருவியின் தோல் பகுதி செம்மறியாடு, வெள்ளாடு, எருது, எருமையின் தோலால் ஆனாது. ‘கஞ்சிரா’வின் தோல் பகுதி உடும்புத் தோலால் ஆனது.

* வட இந்திய அரசவைகளில் நௌபாத் அல்லது நக்கர் கானா (முரசறையும் இடம்) என்ற பகுதிகள் இருந்தன. அதில் இடம்பெற்றிருந்த ஒன்பது இசைக்கருவிகளில் ஷெனாயும் ஒன்று. இதை வடஇந்தியாவின் நாகஸ்வரம் எனலாம்.

* சிதார் இசைக்கருவியின் தந்திகள் எஃகு, நைலான் இழைகளால் தற்போது செய்யப்படுகின்றன. முந்தைய காலத்தில் செம்மறியாட்டுக் குடல் இழையாலும் இது செய்யப்பட்டது உண்டு.

* மாண்டலின் என்ற இசைக்கருவியின் பெயர் இத்தாலியச் சொல்லான மண்டோரியா என்ற சொல்லில் இருந்து வந்தது. இதற்குப் பாதாம் என்று அர்த்தம். இந்த இசைக்கருவி பாதாம் கொட்டையைப் போன்ற வடிவத்தில் இருந்ததே இந்தப் பெயருக்குக் காரணம்.

* தமிழகம், ஆந்திரத்தில் பம்பை என்று ஓர் இசைக்கருவி உண்டு. இரண்டு உருளைவடிவ தோல் கருவிகள் இவற்றில் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். கழுத்தில் தொங்கவிட்டபடி குச்சிகளால் அடித்து ஓசை எழுப்பப்படும். ஆந்திரத்தில் பம்பாளர்கள் என்று ஓர் இனக் குழுவினர் இந்த இசைக்கருவியை வாசிப்பதில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த வாரம்:

எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘குழலினிது யாழினிது’ என்ற இயலின்கீழ் ‘தமிழர் இசைக்கருவிகள்’ என்ற விரிவானம் பகுதி.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x