Last Updated : 31 Dec, 2014 01:06 PM

 

Published : 31 Dec 2014 01:06 PM
Last Updated : 31 Dec 2014 01:06 PM

சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு!

குப்புசாமி ஏழை விவசாயி. தனக்கு சொந்தமாயிருந்த சிறு நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். வீட்டில் ஆடு ஒன்றையும் வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் பெயர் அலமேலு. இது நல்ல துடிப்பான ஆடு. அலமேலு இரண்டுக் குட்டிகளை ஈன்றது. தினமும் குப்புசாமி வயலுக்குப் போகும்போது, ஆட்டையும் ஓட்டிச் செல்வார். தனது குட்டிகளோடு சேர்ந்து அலமேலுவும் துள்ளிக் குதித்தபடி கூடவே வரும்.

பக்கத்தில் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய விடுவார். அலமேலு குட்டிகளை நல்ல முறையில் கவனித்துக்கொண்டது. அந்த ஊரின் எல்லை முடிவில் காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்குள் சிங்கங்கள் இருப்பதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஒருநாள், குட்டி ஆடு இரண்டும் பேசிக் கொண்டன.

“சிங்கத்தைப் பார்க்கணும்போல எனக்கு ஆசையா இருக்கு…” என்றது ஒரு குட்டி.

“எனக்குந்தான், சிங்கத்தையும் அதோட குகையையும் பாக்கணும்போல இருக்கு…!” என்று மற்றொரு குட்டியும் சொன்னது.

இரண்டும் தங்களது ஆசையை அம்மாவிடம் சொல்லின.

“இது நல்ல கதையாயிருக்கே. சிங்கம் நம்மளப் பாத்தாலே அடிச்சுத் தின்னுடும். அதோட சண்டை போடுற சக்தி நமக்கு இல்லை. பேசாமப் போங்க…!”என்று அம்மா அதட்டியது.

குட்டிகள் இரண்டுக்கும் ஒரே வருத்தம். ‘இந்த அம்மாவே இப்படித்தான்…’என்று அலுத்துக் கொண்டன.

திடீரென்று ஒருநாள் இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் காணவில்லை. பதறிப்போனார் குப்புசாமி. இரண்டு குட்டிகளும் எங்கே போயிருக்கும் என்பதை அலமேலுவால் யூகிக்க முடிந்தது.

“இரண்டு பேரும் எங்கே போயிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். நான் போய் கூட்டி வருகிறேன்…” என்று குப்புசாமியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டது அலமேலு. தினமும் குட்டிகள் விளையாடும் இடத்துக்கு வந்தது. அங்கிருந்த காலடித் தடங்களைப் பார்த்தது. அலமேலு நினைத்தது சரியாய் இருந்தது. இரண்டு குட்டிகளின் காலடித் தடங்களும் காட்டுப் பக்கமாய் சென்றன.

‘‘ஆகா…நாம் சொன்னதையும் கேட்காமல், சிங்கத்தைப் பார்க்க போய்டுச்சுங்களே. குட்டிகள் சிங்கத்திடம் மாட்டிக் கொள்வதற்குள் காப்பாற்ற வேண்டுமே…” என்று வேகமாய் காட்டை நோக்கி ஓடியது அலமேலு.

அங்குமிங்கும் தேடித்தேடி பார்த்தது. கடைசியாய் சிங்கத்தின் குகைக்குள் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

நல்லவேளை, சிங்கம் வேட்டைக்கு போயிருந்தது.

“இங்கே என்ன பண்றீங்க… சீக்கிரம் வாங்க போகலாம்…?” என்று குகைக்குள் சென்று, குட்டிகளை அழைத்தது.

அம்மாவைப் பார்த்ததும், குட்டிகளுக்கு ஏக கொண்டாட்டமாகி விட்டது.

“இன்னும் கொஞ்ச நேரம் இரும்மா. வேட்டைக்குப் போன சிங்கம் வந்ததும், பாத்துட்டுப் போயிடலாம்…” என்றன ஆட்டுக்குட்டிகள்.

“சிங்கம் வந்தா நாம உயிரோட போக முடியாது. சொன்னாக் கேளுங்க…”என்று அலமேலு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் கர்ஜிக்கும் குரல் கேட்டது.

“அடடா, சிங்கம் வாசலுக்கு வந்துவிட்டதே. இனி, ஓடி தப்பிப்பது கஷ்டம். வேறெதாவது செய்துதான் தப்பிக்க வேண்டும்…” என்று அலமேலு யோசித்த அடுத்த கணமே, பலமாக குரலைச் செருமியது.

தன் குகைக்குள் ஏதோ புதிய குரல் கேட்டதும், சிங்கம் வாசலிலேயே தயங்கி நின்றது.

“ஏ…வீரக்குட்டிகளே. சிங்கக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னும் சற்று நேரம் பொறுங்கள். எப்படியும் குகைக்கு சிங்கம் வரும். நான் ஒரு போடு போட்டால், சிங்கம் காலி. நீங்கள் ஆளுக்கு பங்கு போட்டு சாப்பிடலாம்…” என்று கட்டையான குரலில் காடே அதிரும்படிச் சொன்னது.

இதைக் கேட்டதும் சிங்கத்திற்கு உடல் வெலவெலத்துப் போனது. “நம் குகைக்கே தைரியமாக வந்து, நம்மை அடித்துத் தின்ன ஏதோ ஒரு புதுவிலங்கு வந்திருக்கிறது போலும்…’ என்றெண்ணி, மெதுவாய் பின்வாங்கி நடந்தது.

நடப்பதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நரியொன்று சிரித்தபடியே சிங்கத்தின் அருகே வந்தது.

“ஏன் பயந்து ஓடுறே… உள்ளே இருப்பது புதுவிலங்கு இல்ல. ஆடுகள்தான். தைரியமாக போ…!” என்றது நரி.

சிங்கம் நம்பவில்லை. உடனே நரி, கயிறொன்றை எடுத்து சிங்கத்தின் வாலில் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.

“இப்போதாவது நம்புகிறாயா…? தைரியமாக வா. நானும் உன்னோடு வருகிறேன்…” என்றபடி, சிங்கத்தை குகை நோக்கி அழைத்து வந்தது நரி.

இதைப் பார்த்த அலமேலுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இதென்னடா… பயந்துபோன சிங்கத்தை இப்படி நரி கூட்டி வருதே…!”

சட்டென யோசித்த அலமேலு, இன்னும் குரலை பலமாய் உயர்த்தி, “வீரக்குட்டிகளா…நான் உங்களிடம் அப்பவே சொன்னேனே. நம்ம நரி மாமா எப்படியாவது ஒரு சிங்கத்தை, கயிறைக் கட்டியாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவாரென்று. நாம் அடிக்கிற சிங்கத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கணும்…சரியா…?” என்றது.

சிங்கம் நடுநடுங்கிப் போய் விட்டது.

“அடப்பாவி… நயவஞ்சக நரியே. உன்னோட ஒரு பங்குக்காக என்னைப் பலியிடப் பார்த்தாயே…அப்பாடி, நான் பிழைத்தேன்…” என்று தலைதெறிக்க சிங்கம் ஓட்டமெடுத்தது. கூடவே வாலைக் கயிற்றால் கட்டியிருந்த நரியையும் சேர்த்திழுத்துக்கொண்டு ஓடியது. சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், நரி தரையில் விழுந்து இழுபட்டு, “அய்யோ… வலிக்கிதே…!” என்று அலறியது.

அலமேலு தன் குட்டிகளைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு ஊருக்குள் திரும்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x