Last Updated : 29 Mar, 2017 10:00 AM

 

Published : 29 Mar 2017 10:00 AM
Last Updated : 29 Mar 2017 10:00 AM

தினுசு தினுசா விளையாட்டு: கும்மாங்குத்து ஓட்டம்!

குழந்தைகள் விளையாடும் போது என்றைக்காவது சற்று நேரம் ஒதுக்கி உட்கார்ந்து, அவர்கள் விளையாடுவதைக் கவனித்திருக்கிறோமா? ‘இல்லை’என்பதே பலரின் பதிலாக இருக்கும். வெளியிடங்களிலும், ஏன் வீட்டிலும்கூட அமைதியாய் இருக்கும் சில குழந்தைகள், விளையாடும் நேரங்களில் மட்டும் அதிக உற்சாகத்தோடு சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கலாம்.

குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாலே நமக்கும் அந்த உற்சாகம் சட்டெனத் தொற்றிக்கொள்ளும். குழந்தைகளின் விளையாட்டுகள் சுவாரசியமானவை என்றால், அவர்களின் விளையாட்டில் இடம்பெறும் சிறுசிறு பாடல்களும் ரசனைக்குரியவை. அப்படிப் பாடல்களாலான ஒரு விளையாட்டைத்தான் நாம் இந்த வாரம் விளையாடப் போகிறோம்.

அந்த விளையாட்டின் பெயர் ‘கும்மாங்குத்து ஓட்டம்’.

பொதுவாக விளையாடுவதற்கு வீட்டிலிருந்து குழந்தைகள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சிலர் வரக் கொஞ்சம் தாமதமாகும். அப்படி அனைவரும் வருவதற்காகக் காத்திருக்கும் கொஞ்சம் நேரத்துக்குள் விளையாடப்படும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

இப்போது விளையாட்டைத் தொடங்குவோமா?

# இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். ஆண், பெண் குழந்தைகள் சேர்ந்தும் விளையாடுவார்கள். விளையாடுவதற்கான முதல் போட்டியாளரை, ‘சாட் பூட் திரி’அல்லது ‘பூவா தலையா’மூலமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

# பிறகு, விளையாடும் இடத்திலிருந்து 70 அல்லது 80 அடி தொலைவில் ஓர் இடத்தை எல்லைக்கோடாக அமைத்துக்கொள்ளுங்கள். அந்த இடத்திலிருக்கும் மரம் அல்லது ஒரு பெரிய கல்லைத் தொடுவதற்கான இலக்காகக் குறித்துக் கொள்ளுங்கள்.

# விளையாடும் எல்லாக் குழந்தைகளும் முதல் போட்டியாளர் முன்னே சென்று நின்றுகொள்ளுங்கள். இப்போது விளையாட்டு, இப்படியானதொரு பாட்டாகத் தொடங்கும்.

முதல் போட்டியாளர் : பிஸ்கட் பிஸ்கட்..!

அனைவரும் : என்ன பிஸ்கட்..?

முதல் போட்டியாளர் : ரவை பிஸ்கட்..!

என்ன ரவை..?

துப்பாக்கி ரவை..!

என்ன துப்பாக்கி..?

நாட்டுத் துப்பாக்கி.!

என்ன நாடு..?

இந்திய நாடு..!

என்ன இந்தியா..?

வட இந்தியா..!

என்ன வடை..?

ஆமை வடை..!

என்ன ஆமை..?

குளத்து ஆமை..!

என்ன குளம்..?

திரி குளம்..!

என்ன திரி..?

விளக்கு திரி..!

என்ன விளக்கு..?

குத்து விளக்கு..!

என்ன குத்து..?

கும்மாங்குத்து..!

இப்படிச் சொன்னதும், அனைத்துக் குழந்தைகளும் எல்லைக்கோட்டு இலக்கைத் தொட ஓடுவார்கள். முதல் போட்டியாளர் அவர்களைத் துரத்திச் சென்று, யார் முதுகிலாவது ஒரு குத்துவிட வேண்டும். யார் முதுகில் ‘கும்மாங்குத்து’ விழுகிறதோ, அவர் அடுத்த போட்டியாளராக மாறிவிடுவார்.

என்ன குழந்தைகளே, விளையாடலாமா?!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x