Published : 12 Apr 2017 09:53 AM
Last Updated : 12 Apr 2017 09:53 AM

காரணம் ஆயிரம்: காற்று உரமான கதை

எந்த ஒரு பொருளும் மலிவானால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது மதிப்பை இழந்து விடும். ‘கத்தரிக்காய் மலிந்தால் கடைக்கு வரும்’என்பது கிராமத்துப் பழமொழி. அளவுக்கு அதிகமாக ஒரு பொருள் நிரம்பி வழிந்தால் அதற்கு மதிப்பு இருக்காது. எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். ஆனால், ஒரு வேதிப்பொருள் நாம் திரும்பிய பக்கமெல்லாம் நிரம்பியிருக்கிறது. ஆனால், மதிப்பு குறையவில்லை. என்ன காரணம்?

நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில் நைட்ரஜன் பங்குதான் அதிகம். 78 சதவீதம். காற்று சுவாசத்திற்குப் பயன்படுவதில்லை. ஆனாலும், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நைட்ரஜனை தேடித் தேடி அலைகிறோம். ஏன், எதற்கு, எப்படி?

தேவையை வைத்துப் பார்க்கும்போது, தங்கத்தைவிடவும் வைரம், பிளாட்டினத்தைவிடவும் நைட்ரஜன் மதிப்புமிக்கது. அவசியமானது.

நமக்கு புரோட்டீன் சத்து தேவை. இந்த புரோட்டீன் மூலக்கூறுகளில் பெருமளவில் இருப்பது நைட்ரஜன்தான். எனவே நைட்ரஜன் இல்லாமல் புரோட்டீன் இல்லை. புரோட்டீன் இல்லாமல் நாம் இல்லை. இப்போது நைட்ரஜன் மகத்துவம் தெரிந்துவிட்டதா? சரி, விஷயத்துக்கு வருவோம்.

நமக்குத் தேவையான புரோட்டீன் சத்துப் பொருளைத் தாவரங்கள் நமக்குத் தயாரித்துக் கொடுக்கின்றன. புரோட்டீன் மூலக்கூறுகள் உருவாக வேண்டுமானால் அதற்கு நைட்ரஜன் தேவை. அப்படியென்றால் தாவரங்கள் புரோட்டீன் தயாரிப்பதற்குத் தேவையான நைட்ரஜனை எங்கிருந்து எடுத்துக்கொள்கின்றன? விஷயம் இதுதான். காற்றில்தான் எவ்வளவோ நைட்ரஜன் இருக்கிறதே, அந்த நைட்ரஜனை எடுத்துக்கொண்டு புரோட்டீனைத் தயாரிக்க வேண்டியதுதானே! இதில் என்ன கஷ்டம் என்றுதானே கேட்கிறீர்கள்.

அதுதான் முடியாது. ஏனெனில், நைட்ரஜன் மற்ற தனிமங்களோடு வினைபுரியும் சக்தி மிகவும் குறைவு. காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது போல நைட்ரஜனை எடுத்துக்கொண்டு புரோட்டீன் தயாரித்துவிட முடியாது. வெளிக்காற்றில் அளவில்லாமல் இருக்கும் நைட்ரஜனால் தாவரங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், தாவரங்கள் உயிர் வாழ நைட்ரஜன் சேமிக்கப்பட வேண்டுமே, என்ன செய்வது.

தாவரங்கள் வாழ்வது மண்ணை நம்பித்தான். மண்ணிலிருக்கும் நைட்ரஜன் சேமிப்பை நம்பித்தான். மண்ணில் உள்ள நைட்ரஜன் சேமிப்பு என்பதும் போதுமானது இல்லையே. மண்ணில் வளரும் பயிர்களும் தாவரங்களும் நைட்ரஜனை எடுத்துக்கொண்டே இருப்பதால், விரைவில் மண்ணில் உள்ள நைட்ரஜன் சத்து தீர்ந்து போய்விடும். அப்படியென்றால் நைட்ரஜன் வளத்துக்கு என்னதான் செய்வது?

100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கவலை தோன்றிவிட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி சர். வில்லியம் குரூக்ஸ், “நைட்ரஜன் சத்து தீர்ந்துகொண்டே போவதை உலகம் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

நைட்ரஜன் வேட்டை தொடங்கியது. தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ஓர் அழகிய குடியரசு நாடு சிலி. பசிபிக் பெருங்கடலின் 6,000 கிலோ மீட்டர் நீள கடற்கரையைக் கொண்ட நாடு. இந்த நாட்டில்தான் அடகாமா பாலைவனம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த அடகாமா பாலைவனம் தன்னுள் அற்புதமான பொக்கிஷத்தைப் புதைத்து வைத்திருப்பதை அப்போது கண்டுபிடித்திருந்தார்கள். ஆம், சோடியம் நைட்ரேட் படிவுகள் இந்தப் பாலைவனம் முழுவதும் மெல்லிய அடுக்காகப் பரவியிருந்தன.

பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன், உரமாக இந்தப் பாலைவன மணலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பல நாடுகளும் திட்டமிட்டன. கப்பல் கப்பலாக அடகாமா பாலைவன மணலை அள்ளிச் சென்றார்கள். அடகாமா பாலைவனத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுத் தீவிரமாக வேலைகள் நடந்தன.

ஆனால், இந்தப் பாலைவன மணலும் சில வருடங்களில் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பெருங்கவலை எல்லோரையும் வருத்தியது. அதேசமயம் இந்தக் கவலை நீண்ட காலம் நிலைக்கவில்லை. எப்படியென்று கேட்கிறீர்களா? அறிவியல்தான் காரணம்.

எந்தத் தனிமத்துடனும் வினைபுரிய மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த நைட்ரஜனை ஒரு வழிக்குக் கொண்டுவந்தார், ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஃபிரிட்ஸ்ஹாபர்.

நைட்ரஜனுடன் ஹைட்ரஜனையும் சேர்த்து அம்மோனியாவாக்கும் வித்தையைக் கண்டுபிடித்தார் வேதியியல் அறிஞர் ஃபிரிட்ஸ்ஹாபர் (இதற்காக1918-ம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார்). இன்றைக்கு விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் அம்மோனியா உரங்கள் இப்படிக் காற்றைக் கரைத்துக் கண்டு பிடிக்கப்பட்டவைதான்.

ஒரு வேளை அம்மோனியா கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், அடகாமா பாலைவனம் ‘சதுர அடி’கணக்கில் என்றைக்கோ விலை போயிருக்கும்.

(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x