Last Updated : 03 Aug, 2016 12:03 PM

 

Published : 03 Aug 2016 12:03 PM
Last Updated : 03 Aug 2016 12:03 PM

பொம்மைகளைக் கொண்டாடுவோம்

பொம்மைகளைப் பிடிக்காத குழந்தைகள் யாரும் உண்டா? தூங்கும்போதுகூட தங்களது பொம்மைகளை விட்டுப் பிரிய மனமில்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். இதை வாசிக்கும்போது உங்களுக்குப் பிடித்த பொம்மைகள் ஞாபகம் வருகிறதா?

பழங்காலத்தில் மரம், களிமண், தோல், துணி மற்றும் காகிதத்தாலான பொம்மைகள் பிரபலமாக இருந்தன. நம்மூர் தஞ்சாவூர் பொம்மைகள் இதற்கு சிறந்த உதாரணம். இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக்கால் ஆன எலக்ட்ரானிக் பொம்மைகளே அதிகம் கிடைக்கின்றன. இந்தப் பொம்மைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை.

உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியெல்லாம் மரப்பாச்சிகள், களிமண் பொம்மைகள், தோல் பாவைகள் என விதவிதமாகப் பொம்மைகளை வைத்து விளையாண்டிருப்பார்கள். சிலசமயம் களிமண்ணைப் பிசைந்து பொம்மைகளை அவர்களே உருவாக்கியதும் உண்டு. அந்தப் பொம்மைகள் இடத்தைத் தற்போது பார்பி போன்ற பொம்மைகள் பிடித்துவிட்டன.

பொம்மை தினங்கள்

உலகம் முழுக்க குழந்தைப் பருவத்தில் முக்கிய இடம் வகிக்கும் பொம்மைகளைக் கொண்டாட பிரத்யேக தினங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை பொம்மைகள் தினமாக அமெரிக்கா போன்ற சில நாடுகளில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) பொம்மைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதைப்போல, ‘உலக பொம்மை தினம்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2-வது சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பார்பி பொம்மைகள், கரடி பொம்மைகள், கார்ட்டூன் பாத்திர பொம்மைகள், சாதனை மனிதர்கள் உள்ளிட்ட பிரபலமான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும். பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளுக்கும் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள். குழந்தைகளும் தங்களது பொம்மைகள் சேகரிப்பில் ஒரு சிலவற்றைப் பொம்மைகள் இல்லாத குழந்தைகளுக்குப் பரிசளித்து மகிழ்வார்கள். இந்த உலக பொம்மை தினம் 1986-ம் ஆண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜப்பான் பொம்மைத் திருவிழா

ஜப்பான் நாடு பொம்மைகளைக் கொண்டாடும் விதமாக, மார்ச் 3 அன்று பொம்மைகள் திருவிழாவைக் கடைப்பிடிக்கிறது. ஜப்பானில் பாரம்பரியமாக இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் காலத்தில் குடும்ப வளர்ச்சிக்காக உழைத்த சிறுமிகளின் உடல் ஆரோக்கியத்துக்காகவும், அவர்களுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கடைப்பிடித்தார்கள். நாளடைவில் அந்தத் தினம் பொம்மைத் திருவிழாவாக மாறிப் போனது. ‘ஹினா-மட்சுரி’ (Hina-matsuri) என்ற பெயரில் நடந்து வந்த இந்த விழாவைத் தற்போது ‘சிறுமிகள் தினம்’ என்று ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.

உலக பொம்மலாட்ட தினம்

ஜப்பானின் ஹினா-மட்சுரி தினத்தைப் போல இந்தியாவில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு, விதவிதமான பொம்மைகளை அடுக்கி கொண்டாடுவதைப் பார்த்திருப்பீர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட இந்தப் பொம்மைகள் அடுக்கப்பட்ட காட்சி கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

பொம்மைகளை நூலில் கட்டி கதை சொல்லும் பாரம்பரிய கலை நம் நாட்டில் வழக்கில் உள்ளது. இலங்கை, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பிரபலமான இந்தக் கலையை, பொம்மலாட்டக்கலை எனச் சொல்கிறார்கள். மரம், தோல், துணி இவற்றாலான பொம்மைகளை நூலில் கட்டி, திரைக்கு மறைவில் இயக்குவதன் மூலம் கதை சொல்லப்படுகிறது.

கதைகள், பாட்டு, இதிகாசங்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் கலையாகவும் இந்தப் பொம்மலாட்டக்கலை இருந்திருக்கிறது. தற்போது அழிந்து வரும் இக்கலையின் பெருமையை உணர ‘உலக பொம்மலாட்ட தினம்’ மார்ச் 21 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x