Published : 31 Aug 2016 10:27 AM
Last Updated : 31 Aug 2016 10:27 AM
விநாயகர் சதுர்த்தி அன்று சந்தையில் சாமி குடை விற்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தக் குடையை நீங்களே செய்யலாம். செய்து பார்க்க நீங்கள் தயாரா?
தேவையான பொருள்:
அட்டை, போஸ்டர் வண்ணக் காகிதங்கள் (ஒரு பக்கம் வண்ணமாகவும், மறுபக்கம் வெள்ளையாகவும் இருக்கும்), காம்பஸ், கத்தரிக்கோல், பசை, ஒன்றரை அடி மூங்கில் குச்சி, சார்ட் காகிதம், சிறிய அட்டைப் பெட்டியில் ஈரக் களிமண், வண்ண பிளாஸ்டிக் மணி.
செய்வது எப்படி?
1 அட்டையில் 25 செ.மீ. விட்டம் அளவுக்குக் காம்பஸ் கொண்டு வட்டம் வரையுங்கள். அதை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதன் இரு பக்கமும் அதே அளவு போஸ்டர் வண்ணக் காகிதத்தை ஒட்டி நன்றாகக் காய வையுங்கள்.
2 அட்டை காய்ந்த பிறகு அதில் ஒரு பக்கம் கூர்மையாகச் சீவி வைத்திருக்கும் மூங்கில் குச்சியை நடுவில் செருகுங்கள். படம் 2-ல் காட்டியபடி முக்கால் பாகம் பிடியாகவும் எஞ்சிய மீதி பகுதி மேல் பக்கம் இருக்குமாறும் வைக்க வேண்டும். குச்சி மேலும் கீழும் நகராமல் இருக்க, வெள்ளைத் தாளை நாடா போல் கத்தரித்துக்கொள்ளுங்கள். அதை அட்டையும் குச்சியும் சேர்ந்திருக்கும் இடத்தில் சுருட்டி பசையால் ஒட்டிவிடுங்கள்.
3 அது நன்கு காய்ந்ததும், சார்ட் பேப்பரை ஒன்றரை அங்குலம் அகலத்தில் நாடா போல் வெட்டுங்கள். அதை வட்ட அட்டையின் ஓர விளிம்பில் படம் 3-ல் காட்டியபடி பசையைக் கொண்டு ஒட்டி காய வையுங்கள்.
4 பிறகு போஸ்ட்டர் வண்ணக் காகிதத்தில் 11*11 செ.மீ. அளவில் தேவைக்கு ஏற்ப 10 அல்லது 15 வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
5 அதனைப் படம் 6-ல் காட்டியபடி சுருட்டி ஒட்டி காயவையுங்கள்.
6 படம் 7-ல் காட்டியது போல் ஒவ்வொரு சுருளையும் விளிம்பு பட்டையில் 0.5 செ.மீ. இடைவெளி விட்டு ஒட்டி காயவையுங்கள்.
7 பிறகு போஸ்ட்டர் வண்ணக் காகிதத்தில் 0.5 செ.மீ. அகலத்தில் நீண்ட பட்டைகளாகக் காகிதங்களை நிறைய வெட்டிக்கொள்ளுங்கள். படம் 8-ல் காட்டியது போல இந்தப் பட்டைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு சுருளுக்கும் இடையிடையே ஒட்டி அதன் மறு முனையைக் கூரிய மூங்கில் குச்சியின் முனையில் சுருட்டி ஒட்டுங்கள்.
8 குச்சியின் கீழ்ப் பகுதியில் வேறு வண்ணப் பட்டை காகிதத்தை வெட்டி குச்சியைச் சுற்றிச் சுற்றி ஒட்டுங்கள்.
ஈரக் களிமண் அட்டைப் பெட்டியில் செருகி வண்ண மணியை உச்சியில் ஒட்டுங்கள். இப்போது அழகிய குடை தயார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT