Last Updated : 28 Aug, 2018 06:28 PM

 

Published : 28 Aug 2018 06:28 PM
Last Updated : 28 Aug 2018 06:28 PM

கதை: சிவப்பு அங்கி தேவதை

கிராமத்தில் துறுதுறுவென்று ஒரு சின்னப் பெண் இருந்தாள். பாட்டிக்கு அவளை மிகவும் பிடிக்கும். சிவப்பு வண்ண மென்மையான அங்கி ஒன்று வேண்டும் என்று கேட்டாள். பாட்டியும் வாங்கிக் கொடுத்தார். அந்தச் சிவப்பு அங்கி அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அதனால் எல்லோரும் அவளை, ‘சிவப்பு அங்கி தேவதை’ என்று அழைத்தனர்.

காட்டுக்குள் வசித்த பாட்டி, திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டார். சிவப்பு அங்கி தேவதையை அழைத்தார் அம்மா.

‘‘இந்த கேக் துண்டையும், பழரசத்தையும் பாட்டி சாப்பிட்டால் உடம்பு சரியாகி விடும். வெயில் வருவதற்கு முன்பே கிளம்பி விடு. போகும்போது பாதையை விட்டு விலகாதே. மெதுவாக நடந்து செல். ஓடினால் கையில் இருக்கும் பாட்டில் கீழே விழுந்து உடையலாம். அறைக்குள் நுழையும்போது, ‘காலை வணக்கம்’ என்று சொல்ல மறக்காதே” என்று சொல்லி, சிவப்பு அங்கி தேவதையை அனுப்பி வைத்தார் அம்மா.

முதல் முறை பாட்டியைப் பார்க்கத் தனியாகக் கிளம்பியதால், சிவப்பு அங்கி தேவதைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வண்ணத்துப்பூச்சிகளும் தும்பிகளும் பறந்து திரிந்ததை மிகவும் ரசித்தாள். அவளை அறியாமலே ‘லால லா’ என்று பாட ஆரம்பித்தாள்.

சற்றுத் தூரம் நடந்த பிறகு, ஒரு செடியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பழுத்திருப்பதைக் கண்டாள். ஒன்றைப் பறித்துச் சுவைத்தாள்.

“அடடா! என்ன சுவை! பாட்டிக்கும் கொஞ்சம் எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிக்கொண்டே, ஸ்ட்ராபெர்ரிகளைப் பறித்தாள்.

மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி ஒன்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. வண்ணத்துப்பூச்சியின் பின்னால் ஓடினாள். திடீரென்று வழி தவறினாள்.

“ஐயையோ… அம்மா சொன்னதை மறந்துவிட்டு, வழி தவறி விட்டேனே? இப்போது என்ன செய்வது?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.

ஒரு மரத்துக்குப் பின்னால் இருந்து கவனித்த ஓநாய், மெதுவாக வெளியே வந்தது. “என்ன இந்தப் பக்கம், தனியா வந்திருக்கே?” என்று கேட்டது.

“என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை. அதான் கேக்கும் பழரசமும் எடுத்துச் செல்கிறேன்.”

“அப்படியா! பாட்டி எங்கே வசிக்கிறார்?”

“இந்தக் காட்டில்தான்! அரை கிலோ மீட்டர் உள்ளே போனால் மூன்று பெரிய ஓக் மரங்களும், பாக்கு மரங்களும் இருக்கும். அதற்குக் கீழே உள்ள வீட்டில்தான் பாட்டி இருக்கிறார்.”

’அடடா! இன்னிக்கு எனக்கு நல்ல விருந்து. பாட்டியையும் பேத்தியையும் சுவைத்துவிடலாம்!’ என்று நினைத்தது ஓநாய்.

“இந்தக் காட்டில் நீ தனியாகச் செல்லலாமா? பெரியவர்கள் யாரும் வரவில்லையா?” என்று அக்கறை யோடு கேட்பதுபோல் நடித்தது ஓநாய்.

“அம்மாவுக்கு அவசர வேலை. அதான் என்னை அனுப்பினார். உன்னைப்போல் நல்லவன் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?” என்று கேட்டாள் சிவப்பு அங்கி தேவதை.

“அதானே, நான் இருக்கும்போது இங்கே பயம் ஒன்றும் இல்லை. அங்கே பார் அழகான பூக்கள்!” என்று பேச்சை மாற்றியது ஓநாய்.

பூக்களைச் சேகரித்தாள் சிவப்பு அங்கி தேவதை.

“இது யாருக்கு?”

“பாட்டிக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.”

“ஓ… அப்படியா! அதோ அங்கே பூக்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றையும் பறித்துவிட்டு, பாட்டியைப் பார்க்கச் செல். நான் வருகிறேன்” என்ரு கிளம்பியது ஓநாய்.

kadhai 2jpg

ஒவ்வொரு பூவைப் பறிக்கும் போதும் தூரத்தில் மற்றொரு பூ அழகாகத் தெரிந்தது. ஒவ்வொன்றையும் பறிக்க ஓடினாள் … ஓடினாள்… ஓடிக் கொண்டே இருந்தாள். காட்டின் மையப் பகுதிக்கே சென்று விட்டாள்.

ஓநாய் பாட்டியின் வீட்டுக்குச் சென்று மெதுவாகக் கதவைத் தட்டியது.

“யாரது?” என்று கேட்டார் பாட்டி.

“ உங்கள் பேத்தி சிவப்பு அங்கி தேவதை வந்திருக்கிறேன்.  கேக்கும் பழரசமும் கொண்டு வந்திருக்கிறேன். கதவைத் திறங்கள்” என்றது ஓநாய்.

“என்னால் அசையக் கூட முடியாது. தாழ்ப்பாளை மேலே தூக்கிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா” என்றார் பாட்டி.

கதவைத் தள்ளிக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது ஓநாய். உடல் நிலை சரியில்லாத பாட்டியைக் கட்டிப் போட்டு, கட்டிலின் கீழே தள்ளிவிட்டது. பிறகு பாட்டி அணிந்திருந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தொப்பியால் முகத்தை மூடியபடி, கட்டிலில் படுத்துக் கொண்டது ஓநாய்.

திடீரென்று சிவப்பு அங்கி தேவதைக்குப் பாட்டியின் நினைவு வந்துவிட்டது. வீட்டைத் தேடி ஓடினாள்.

வீடு திறந்து கிடந்தது. இன்று ஏதோ சரியில்லாதது மாதிரி இருக்கே என்று யோசித்தவள், “பாட்டி, காலை வணக்கம். உங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கேன் என்று பாருங்கள்?” என்று கத்தினாள் .

பதில் இல்லை. படுக்கைக்கு அருகே சென்று, போர்வையை விலக்கினாள். தொப்பியைத் தூக்கிக் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“எப்படி இவ்வளவு பெரிய காதுகள்? கண்களும் வேற மாதிரி இருக்கே? கைகள் ஏன் இவ்வளவு நீளமாக இருக்கின்றன? அப்புறம் அந்த வாய் ஏன் இப்படி அண்டா மாதிரி அகலமாக இருக்கிறது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சிவப்பு அங்கி தேவதை.

“நீ சொல்வதைக் கேட்பதற்குப் பெரிய காதுகள். உன் அழகைப் பார்த்து ரசிக்கப் பெரிய கண்கள். உன்னை வாரி அணைக்க நீளமான கைகள்” என்று சொல்லிக் கொண்டே, சிவப்பு அங்கி தேவதை மீது பாய்ந்தது ஓநாய். அவளையும் கட்டிப் போட்டு கட்டிலுக்குக் கீழே படுக்க வைத்தது. பிறகு தானும் கட்டிலில் படுத்து தூங்கிவிட்டது.

அந்த வழியே வந்தார் ஒரு வேட்டைக்காரர். “என்ன இது, பாட்டி யின் குறட்டை கர்ண கொடூரமாக இருக்கே?” என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார். ஓநாய் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

‘ஆஹா! சரியான வேட்டை. உன்னைதான் தேடிக் கொண்டிருந்தேன்’ என்று நினைத்துக்கொண்டே அருகில் வந்த வேட்டைக்காரருக்குத் திடீரென்று பாட்டி ஞாபகம் வந்தது. கட்டிலில் ஓநாய், அப்படியானால் பாட்டி எங்கே என்று சுற்றுமுற்றும் தேடினார். கட்டிலுக்கு அடியே பாட்டியும் சிவப்பு அங்கி தேவதையும் இருப்பதைப் பார்த்தார். உடனே இருவரின் கட்டு களையும் அவிழ்த்து விடுவித்தார். ஓநாயை அழைத்துச் சென்றார். பாட்டியும் சிவப்பு அங்கி தேவதையும் நிம்மதியாகப் பழரசம் சாப்பிட்டனர்.

(சார்ல்ஸ் பெரால்ட் எழுதிய Little Red Riding Hood கதை)
ஓவியங்கள்: கிரிஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x