Last Updated : 11 Jul, 2018 10:36 AM

 

Published : 11 Jul 2018 10:36 AM
Last Updated : 11 Jul 2018 10:36 AM

ஜிவான்னி பிரான்சிஸ்கோ ஸ்ட்ராபரோலா கதை: காலணி அணிந்த பூனை!

 

ழகிய ஊரில் மாவு அரைக்கும் கடை வைத்திருந்த ஒருவர். உடல் நலம் குன்றினார். தனது மூன்று மகன்களை அழைத்து, சொத்துகளைப் பிரித்தார். மாவு அரைக்கும் இயந்திரத்தை முதல் மகனுக்கும், கழுதையை இரண்டாவது மகனுக்கும், பூனையை மூன்றாவது மகனுக்கும் கொடுத்தார்.

மாவு அரைத்து, கழுதை மீது ஏற்றி வியாபாரம் செய்யலாம் என்பதால் முதல் இரு மகன்களும் ஒன்றாக இருக்க முடிவெடுத்தனர். ஆனால் கடைசித் தம்பியிடம் பூனை மட்டுமே இருந்ததால், அவரை வீட்டை விட்டு விரட்டினர்.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் களைத்துப் போய், மரத்தடியில் படுத்தார். பூனை மெல்லிய பாதங்களால் அவரை வருடியது.

“எஜமானரே, வருத்தப்படாதீங்க. உங்க வாழ்க்கையை மாற்றுவது என் பொறுப்பு. அதற்காக நீங்கள் எனக்கு வாங்கித் தர வேண்டியது ஒரு ஜோடி காலணிகளும் ஒரு கோணிப் பையும்” என்ற பூனையின் அன்பான வார்த்தைகள் இளைஞருக்கு ஆறுதல் தந்தது. கையில் இருந்த பணத்தில் பூனை கேட்ட காலணிகளையும் பெரிய கோணிப் பையையும் வாங்கித் கொடுத்தார்.

ஊருக்கு வெளியே முயல்களைப் பார்த்தவுடன் இரவு உணவு முயல்தான் என்ற முடிக்கு வந்த பூனை, வேட்டையில் இறங்கியது. பசலை இலைகளைக் கோணிப் பையில் போட்டு முயல்கள் வரும் பாதையில் வைத்தது. இலைகளைச் சாப்பிடும் ஆர்வத்தில் கோணிப் பைக்குள் முயல்கள் நுழைந்தன. உடனே கோணிப் பையின் வாயைக் கயிற்றால் கட்டியது. ஒரு முயலை இளைஞரிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றை தனக்காக வைத்துக் கொண்டது பூனை.

ருசி கண்ட பூனை அடுத்த நாளும் வேட்டைக்குக் கிளம்பியது. மீண்டும் கோணிப் பையில் இரு முயல்கள் சிக்கிக் கொண்டன. ஆனால் இந்த முறை முயல்களை அரண்மனைக்கு எடுத்துச் சென்றது.

“மன்னருக்குப் பரிசு கொண்டு வந்துள்ளேன். அவரைக் காண என்னை அனுமதிக்க வேண்டும்” என்று பணிவாக வேண்டுகோள் விடுத்தது பூனை.

உள்ளே சென்று சிம்மாசனத்தில் வீற்றிருந்த மன்னரை வணங்கி, “எங்கள் இளவரசர் கர்ரபாஸ் இந்த முயலைத் தனது அன்புப் பரிசாக உங்களிடம் கொடுக்கச் சொன்னார்” என்று அவர் பாதங்களில் வைத்து மண்டியிட்டது பூனை.

“இளவரசருக்கு நன்றியைத் தெரிவியுங்கள்” என்ற மன்னர், பூனைக்கு விருந்து அளித்து அனுப்பி வைத்தார்.

ந்த ஊரில் பயங்கரமான பூதம் ஒன்று பெரிய கோட்டையில் வசித்துவந்தது. பூனை ஒரு நாள் பூதத்தைப் பார்க்கச் சென்றது. பூனை சிறிய உருவம் என்பதால் பூதம் அதைச் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

“உன்னால் எந்த உருவமாகவும் மாற முடியும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?” என்று போலியான அக்கறையுடன் கேட்டது பூனை.

“ஆமாம். பிரம்மாண்ட யானை போலவும் உரு மாற முடியும். சின்னஞ்சிறிய சுண்டெலிபோலவும் வடிவம் எடுக்க முடியும்” என்று வர இருக்கும் ஆபத்தை உணராமல் தற்பெருமை பேசியது பூதம்.

திடீரென்று சிங்கத்தைப்போல் வடிவெடுத்து கர்ஜித்தது. அடுத்த நொடியே யானையின் உருவத்தை எடுத்துப் பிளிறியது. பூனை பயப்படுவதுபோல் நடித்தது.

”சரி சரி... பெரிய உருவத்தைக் காட்டி என்னை அச்சுறுத்தியது போதும். என்னை விடச் சிறிய வடிவத்தை எடுக்க முடியுமா? பார்க்க ஆசையாக இருக்கிறது.”

”இதென்ன பிரமாதம்? இதோ பார்” என்று சொல்லிக் கொண்டே தனது பிரம்மாண்ட உருவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கிச் சுண்டெலியாக மாறியது. அவ்வளவுதான். விருந்து கிடைத்த சந்தோஷத்தில் பூனை ஆக்ரோஷமாக அதன் மீது பாய்ந்தது. தந்திரத்தாலும் பேச்சு சாதுரியத்தாலும் பூதத்தை வீழ்த்தியது பூனை.

வீட்டுக்கு ஓடிவந்த பூனை, இளைஞரை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொன்னது. அவர் குளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது துணிகளை எடுத்து ஒளித்து வைத்தது.

வீதி உலா வந்துகொண்டிருந்த மன்னரிடம் சென்ற பூனை, “எங்கள் இளவரசர் கர்ரபாஸ் குளித்துக் கொண்டிருக்கும்போது யாரோ அவரது துணிகளைத் திருடிச் சென்றுவிட்டனர்” என்று கண்ணீர் விட்டது.

’தனக்குப் பரிசு அளித்த இளவரசருக்கு உடுக்க உடை கூடக் கொடுக்காவிட்டால் எப்படி?’ என்று யோசித்த மன்னர், கைவசம் கொண்டு வந்த உடைகளைக் கொடுத்து உதவினார்.

இளைஞருக்கு அரசரின் உடை கம்பீரத்தையும் அழகான தோற்றத்தையும் தந்தது. மன்னர் அவரை இளவரசன் என்றே நம்பியதால் தனது தேரில் உட்காரச் சொன்னார். புத்திசாலி பூனை தேருக்கு முன்னால் ஓடியது. அங்கிருந்த வயல், வரப்பு, செடி, கொடி, மரங்களிடம் இங்குள்ளவை அனைத்தும் இளவரசர் கர்ரபாஸுக்குச் சொந்தம் என்று சொல்லுமாறு மிரட்டியது. அவையும் ராஜாவிடம் அவ்வாறே சொல்ல, அவரும் மகிழ்ந்தார்.

பூதத்தின் கோட்டை வாசலில் தேரை நிறுத்தச் சொல்லி, ”மன்னா, எங்கள் இளவரசர் கர்ரபாஸுக்குச் சொத்தமான கோட்டை இது. உள்ளே வந்து இளைப்பாறுங்கள்” என்ற பூனையின் பொய்யை ராஜாவும் நம்பினார்.

தங்கம், வைரம், முத்து, பவளம் என்று கோட்டை முழுவதும் நவரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. தனது மகளுக்கு ஏற்ற ஜோடி இந்த இளவரசர்தான் என்ற முடிவுக்கு வந்தார்.

சகல மரியாதையுடன் இளைஞரை அரண்மனைக்கு வரவழைத்து, தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வார்த்தைக்கு வார்த்தை இளவரசர் கார்ரபாஸ் என்று ஏன் தன்னை அழைக்கிறார் என்றும் மன்னர் மகளைத் தனக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தார் என்றும் அந்த இளைஞருக்குக் கடைசிவரை புரியவே இல்லை. எல்லாம் பூனை செய்த மாயமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக நம்பினார்.

பூனைக்கு வெளியே சென்று வேட்டையாட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. வாய்க்கு ருசியான உணவைக் கேட்கும்போது கொடுக்கச் சுற்றிலும் ஆட்கள் இருக்கும்போது அதுக்கு என்ன கவலை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x