Last Updated : 20 Jun, 2018 10:55 AM

 

Published : 20 Jun 2018 10:55 AM
Last Updated : 20 Jun 2018 10:55 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: உங்களுடைய இறக்கைகள் எங்கே?

 

சா

ராவுக்கு எதையும் தன் கைகளால் தானே செய்யவேண்டும். வீட்டில் உபயோகப்படுத்த ஏதாவது பொருள் தேவையா? குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மை வேண்டுமா? வீட்டில் தண்ணீர் வரவில்லையா? ஏதாவது உடைந்துவிட்டதா? எதுவாக இருந்தாலும் சாரா கவலைப்பட மாட்டார். கடைக்கு ஓடிச் சென்று வேறு பொருள் வாங்க மாட்டார். அல்லது, இதைக் கொஞ்சம் சரி செய்து தர முடியுமா என்று யாரிடமும் கேட்க மாட்டார். அவருக்கு இயந்திரங்களைப் பழுது பார்க்கத் தெரியும். உடைந்ததை ஒட்ட வைக்கத் தெரியும். புதிதாக ஒன்றை உருவாக்கத் தெரியும். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று சிரிப்பார்.

அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம் இது. சாராவின் அப்பா குதிரை வண்டிகளை வடிவமைப்பவர். எளிய மரக் கட்டைகளிலிருந்து அழகிய வண்டிகளை அவர் உருவாக்குவதைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறார் சாரா. அப்பா நானும் உங்களுக்கு உதவட்டுமா என்று அடம் பிடித்துச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து மகிழ்ந்திருக்கிறார். வளர்ந்து பெரியவரானதும் தனக்குத் தேவைப்பட்ட எல்லாக் கருவிகளையும் வாங்கிவைத்துக்கொண்டு பலவிதமான பொருட்களை வீட்டிலேயே அவர் உருவாக்கத் தொடங்கினார்.

சாராவிடமிருந்து அவர் குழந்தைகளுக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆர்வில், வில்பர் இருவரும் அம்மாவின் பின்னாலேயே எப்போதும் ஓடிக்கொண்டு, அவர் என்ன செய்கிறாரோ அதையே கவனித்துக்கொண்டிருப்பார்கள். பிறகு அவர் செய்ததைத் தாங்களும் செய்து பார்ப்பார்கள். ஏதாவது சந்தேகம் அல்லது எங்காவது தடங்கல் என்றால் எடுத்துக்கொண்டு அம்மாவிடம்தான் ஓடுவார்கள்.

ஒருமுறை “இந்தா, இதை வைத்துக்கொண்டு சண்டை போடாமல் விளையாடுங்கள்” என்று அப்பா மில்டன் ரைட் ஒரு பொம்மை ஹெலிகாப்டரை வாங்கிவந்து கொடுத்தார். காகிதம், மூங்கில், கார்க் ஆகியவற்றைக் கொண்டு அந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ரப்பர் பேண்ட் இருக்கும். அதைப் பிடித்து இழுத்தால் விர்ரென்று ஒரு குட்டி மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். கீழே விட்டால் சிறிது தூரம் நகர்ந்து செல்லும். பிறகு நின்றுவிடும். சுமார் ஓர் அடி நீளமுள்ள அந்தப் பொம்மை ஆர்வில், வில்பர் இருவரையும் கவர்ந்துவிட்டது.

கருவிகளை அக்கு அக்காகப் பிரிப்பது, சேர்ப்பது, உடைப்பது, நொறுக்குவது, உருவாக்குவது என்று என்னென்னவோ செய்துகொண்டிருந்தாலும் இறுதிவரை ரைட் சகோதரர்களால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு வருத்தமும் இல்லை.

அப்பா வீடு முழுக்கப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்ததால் தேவைப்படும் புத்தகங்களை அவ்வப்போது எடுத்துப் படித்துக்கொள்வார்கள். எங்காவது வேலைக்குப் போகலாமே என்று தெரிந்தவர்கள் சொன்னபோது, இருவருமே மறுத்துவிட்டார்கள். எங்களுக்குத் தேவையானதை நாங்களே கற்றுக்கொள்வோம். எங்களுக்கான வேலைகளையும் நாங்களே உருவாக்கிக்கொள்வோம் என்று ஒரே குரலில் சொல்லிவிட்டார்கள்.

முதலில் அவர்கள் தொடங்கியது செய்தித்தாள் அச்சடிக்கும் ஓர் அச்சகத்தை. பிறகு, அமெரிக்காவில் சைக்கிளுக்கு வரவேற்பு பெருகியதைக் கண்டதும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையைத் தொடங்கினார்கள். எதிர்பார்த்ததைவிடவும் விரைவாகவே வரவேற்பு கிடைத்தது. மளமளவென்று இருவரும் உயர்ந்தார்கள். பணம், பெயர், புகழ் எதற்கும் குறைவில்லை.

எங்கள் கரங்களைக் கொண்டு, நாங்களே உருவாக்கிக் காட்டிய தொழில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சிதான். ஆனால் மீண்டும் மீண்டும் வாழ்க்கை முழுவதும் சைக்கிள்களைப் பழுது பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமா? அதான் பணம் கொட்டுகிறதே என்பீர்கள். ஆனால் பணம் மட்டும் போதுமா? என் தாத்தாவுக்குப் பணம் நிறையவே கிடைத்தது.

ஆனால், என்னைப் போல் இந்த உலகில் ஒருவராலும் குதிரை வண்டிகளை உருவாக்க முடியாது என்னும் பெருமிதம்தான் அவருக்கு நிஜமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. நானே எனக்கானதை உருவாக்கிக்கொள்வேன் என்று மட்டும் அம்மா சொல்லவில்லை. புதிது புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிப்பேன், புதிது புதிதாகப் பலவற்றைக் கற்றுக்கொள்வேன் என்றுதான் அவர் சொல்வார். அதுவே அவருக்கு மகிழ்ச்சி.

எங்கள் தாத்தா குதிரை வண்டியில் தொடங்கினார். நாங்கள் சைக்கிளுக்கு மாறினோம். ஆனால் அது போதாது. தாத்தா காலத்தில் இருந்ததைவிட இப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறி இருக்கிறது. இன்னமும் முன்னேறும், முன்னேற வேண்டும். குதிரை வண்டியின் வேகம் தாத்தாவுக்குப் போதுமானதாக இருந்தது. என் அம்மா காலத்துக்கு சைக்கிள். எங்கள் காலத்தில் வேகம் கூடியிருக்கிறது.

அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் இன்னும் வேகமாகப் பாய்ந்து செல்ல வேண்டும். என் தாத்தா தவழ்ந்து சென்றார் என்றால், அம்மா நடந்து போனார் என்றால் நாங்களும் எங்களுக்கு அடுத்த தலைமுறையினரும் பறந்து சென்றாக வேண்டும். அவர்களுக்குக் கைகள் போதுமானவையாக இருந்தன. எங்களுக்கு இறக்கைகள் வேண்டும். சாலைகள் போதும் என்றார்கள் அவர்கள். எங்களுக்கு வானம் வேண்டும். நாங்கள் பறக்கவேண்டும், என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.

17 டிசம்பர் 1903 அன்று ஆர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் தங்களுடைய புதிய விமானத்தை வானத்தில் பறக்கவிட்டனர். இப்போதாவது திருப்தியா என்று சிலர் கேட்டபோது இருவரும் புன்னகை செய்தனர். ‘‘இப்போதைக்குத் திருப்தி. ஆனால் கண்டுபிடிப்புகளுக்கு முடிவு கிடையாது. எங்கள் குழந்தைகள் எங்களைவிடப் புத்திசாலிகளாக இருப்பார்கள். எங்களைவிட பிரமாதமான சாதனைகளைச் செய்வார்கள். நிச்சயம், எங்களைவிட அதிக உயரத்துக்குச் செல்வார்கள்!’’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x