

‘ரீவைண்ட்’ என்பது 80’ஸ், 90’ஸ் தலைமுறைக்கு மிகவும் பழக்கமான வார்த்தை. ஆனால், இன்றைய 2கே கிட்ஸுக்கு அதைப் பற்றிய ஐடியாவே இருக்காது. “அப்படியெல்லாம் இருந்துச்சா?” என்று ஏதோ டைனசோர் காலத்துக் கதையைக் கேட்பதுபோல நம்மைப் பார்ப்பார்கள்! ஆமாம், அது ஒரு கனாக்காலம்தான்.
இன்றைக்குப் புதுப் படத்தின் பாடல்கள் வெளியானால் யூடியூப், ஸ்பாட்டிஃபையில் உடனே கேட்டுவிடலாம். அன்றைக்கு அப்படியல்ல. கேசட் கடைக்குப் படையெடுத்த காலம் அது.
“அண்ணே... ‘ரோஜா’ கேசட் கொடுங்க...”, “எனக்கு ‘முதல்வன்’ இருக்கா?” என்று கூட்டத்துக்குள் நின்று வாங்கிய நினைவுகள் பலருக்கு இருக்கலாம். கேசட்டை டேப்ரெக்கார்டரில் போட்டு ஒரு பாடலைக் கேட்போம். மறுபடியும் அதே பாடலைக் கேட்க வேண்டும் என்றால், இன்றுபோல திரையைத் தொட்டு ஒரு நொடியில் பின்னால் போய்விட முடியாது. கேசட்டை வெளியே எடுக்க வேண்டும். ஒரு பேனா வேண்டும். கேசட்டின் சின்னத் துவாரத்துக்குள் பேனாவை நுழைத்துச் சுற்றி... சுற்றி... சுற்றி... கை வலிக்கச் சுற்றினால்தான் பிடித்த பாடலை மறுபடியும் கேட்க முடியும்!
இன்றைக்கு விரல் வலிக்க ‘Reels scroll’ செய்கிறோம். அன்றைக்கு கை வலிக்க ‘cassette rewind’ செய்தோம்! சரி, அதுபோல் அந்தக் காலத்தைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.