

உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமான கால்பந்துப் போட்டிகளிலிருந்து சற்று மாறுபட்டிருக்கும் கால்பந்து ஃப்ரீஸ்டைல் விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்தவர், பிரதீப் ரமேஷ். சென்னையைச் சேர்ந்த அவர் இந்த விளையாட்டு பற்றிப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
கால்பந்து ஃப்ரீஸ்டைல்
கை, முழங்கை பகுதிகளைப் பயன்படுத்தாமல் உடல் முழுவதும் கால்பந்தை ஓடவிட்டு கிரியேட்டிவாக நடனம் ஆடுவதுபோல உடலை இயக்குவதுதான் ஃப்ரீஸ்டைல் கால்பந்து.
உலகம் முழுவதும் இந்த வகை விளையாட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், ஐரோப்பா கண்டத்தில் வரவேற்பு அதிகம். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் கால்பந்து, நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய மூன்றின் கலவைதான் இந்த விளையாட்டு.
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ 2005இல் நடித்த ஒரு விளம்பரத்தில் அவர் செய்த ஃப்ரீஸ்டைல் அசைவு பிரபலமானது. அது ஃப்ரீஸ்டைல் கால்பந்தின்மீது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதுவரை கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருந்த பிரதீப், ஃப்ரீஸ்டைல் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
விளையாட்டில் பேரார்வம்
தமிழ் யூடியூப் களம் பிரபலமாகாத 2010 காலக்கட்டத்திலேயே ஃப்ரீஸ்டைல் காணொளிகளைத் தனது ‘பிஆர் சாக்கர் ஆர்ட்’ என்கிற அலைவரிசையில் பதிவுசெய்யத் தொடங்கிய பிரதீப்பை, ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் யூடியூபில் பின்தொடர்கின்றனர்.