நவராத்திரி ‘டிரெண்ட்’ இதுதான்!

நவராத்திரி ‘டிரெண்ட்’ இதுதான்!
Updated on: 
2 min read

நவராத்திரி பண்டிகைக் காலத்தில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்’ என்றாலே வெற்றிலை, பாக்குடன் சிறிய பாத்திரங்கள் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், இப்போது அழகான பைகள், ‘கஸ்டமைஸ்டு டிசை’னில் தட்டுகள் எனப் பரிசுப் பொருள்களும் மாறிவிட்டன.

கொலுவையும் சுண்டலையும் தாண்டி, இத்தகைய பிரத்யேகப் பரிசுப் பொருள்களை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நவராத்திரி சிறப்புப் பரிசுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார், சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி.

படிப்பும் வேலையும்

எம்.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ள ஜெயலெட்சுமிக்குச் சிறு வயது முதலே தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. இவரின் அப்பா கேட்டரிங் தொழில் செய்பவர். எனவே, தன் தம்பியுடன் சேர்ந்து அப்பாவின் தொழிலுக்குப் பக்கபலமாக இருந்துள்ளார்.

கரோனா காலத்துக்குப் பிறகுதான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் செய்யும் யோசனை அவருக்கு உதித்திருக்கிறது. “கரோனா காலத்தில் படிப்பை முடித்தேன். அப்போது சந்தை நிலவரம் சரியில்லை. அதனால், வேலை கிடைக்கவில்லை. அப்பாவின் கேட்டரிங் தொழிலும் மந்தமாக இருந்தது.

அப்போதுதான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தேன். 2022இல் சிறிய அளவில் தொடங்கிய இத்தொழிலுக்கு இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கோவையை மையமாகக் கொண்டு பிஸினஸ் தொடங்கினாலும் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும்கூடப் பொருள்களை அனுப்பிவருகிறோம்” என்கிறார் ஜெயலெட்சுமி.

என்ன ‘டிரெண்டு’?

ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் விற்பனையில் புதுமையான வடிவமைப்புகள் கவனம் ஈர்க்கின்றன. அந்த வகையில் மெட்ராஸ் செக்கர்ஸ் (Madras Checkers) வடிவமைப்பிலான பரிசுப் பொருள்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் ஜெயலெட்சுமி.

“அக்ரிலிக் தட்டுகள், மெட்ராஸ் செக்கர்ஸ் டிசைன் தட்டுகள், ஓவியங்களுடன் கூடிய பித்தளைத் தட்டுகள், தஞ்சாவூர் ஓவிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தட்டுகள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தாம்பூலப் பைகளிலும் புதுமைகளைப் புகுத்தலாம். நவதுர்கா, அஷ்டலட்சுமி, தசாவதாரம் உள்ளிட்ட கருப்பொருள்களிலும் பரிசுப் பொருள்களைத் தயாரிக்கிறோம்” என்கிறார் ஜெயலெட்சுமி.

“ஆன்லைனில் இப்போது நிறையக் கடைகள் வந்துவிட்டாலும் அவற்றில் போலிகளும் உள்ளன. எனவே, பொருள்களை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர் புதுமையான கஸ்டமைஸ்டு வடிவமைப்புகளை விரும்புகின்றனர்.

இது சீசனல் தொழிலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமன்றி நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களிலும் விற்பனை நன்றாக இருக்கும்.

அப்பா, அம்மா, கணவர், தம்பி எனக் குடும்பத்தினர் தொடர்ந்து அளிக்கும் ஆதரவால், இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்” என்கிறார் ஜெயலெட்சுமி.

‘ஹவுஸ் ஆஃப் ஜெயா’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/house_of_jaya_returngifts/

நவராத்திரி ‘டிரெண்ட்’ இதுதான்!
சித்தப்பாவும் மாமாவும் எங்கே போனார்கள், ப்ரோ? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 2

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in