மாயாவின் புதிய அவதாரம்!

மாயாவின் புதிய அவதாரம்!
Updated on
2 min read

படபடவெனப் பேசுவதற்காகவே பிரபலமானவர், நாடகக் கலைஞரும் யூடியூபருமான மாயா எஸ்.கிருஷ்ணன். தற்போது ஸ்டாண்ட்-அப் காமெடியிலும் களமிறங்கி கலகலப்பூட்டி வருகிறார். அண்மையில் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற அவருடைய நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்திருந்தது. அந்த உற்சாகத்தில் இருந்தவர், தன் புதியப் பயணம் பற்றி மனம் திறந்தார்.

காமெடியில் ‘மெசேஜ்’ - யூடியூபில் ‘மஞ்சுளா டீச்சர்’ என்கிற கதாபாத்திரத்தை ஏற்று மாயா பதிவிடும் காணொளிகள் எல்லாம் வைரல் ரகம். அதே மஞ்சுளா டீச்சர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘பொம்பளேல்’ என்கிற ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிக்கான கதையை எழுதியிருக்கிறார் அவர்.

“பல ஆண்டுகளாக நாடகம், ரியாலிட்டி ஷோ என இயங்கி இருக்கிறேன். ஆனால், ஸ்டாண்ட்-அப் ஷோவை நடத்த வேண்டுமென்கிற ஆசை நீண்ட நாள்களாகவே இருந்தது. கடந்த பிப்ரவரியில் அதைப் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். ஜூன் மாதத்தில் ஷோ நடத்தப்போவதாக அறிவித்தேன். அறிவிப்பு வெளியானவுடன் மூன்று ஷோக்களுக்கான டிக்கெட்டுகளும் மளமளவென விற்றுத் தீர்ந்தன.

மக்கள் தந்த வரவேற்பைப் பார்த்ததும் முழு மூச்சாக ஸ்டாண்ட் - அப்பில் இறங்கிவிட்டேன். ஆறு நாள்களில் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டு, அடுத்த ஆறு நாள்கள் ஒத்திகை பார்த்தேன். நண்பர்களிடம் நிகழ்ச்சியைச் செய்து காட்டியபோது, அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது” என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மாயா.

சரி, அதென்ன ‘பொம்பளேல்’ என்கிற தலைப்பு என்று கேட்டதுதான் தாமதம். “ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான ஷோ இது. அந்த எண்ணத்தில் தோன்றிய பெயர்தான் ‘பொம்பளேல்’. நான் சந்தித்த விஷயங்களையும் அனுபவங்களையும், கஷ்டமாக இருந்தாலும்கூட காமெடியாகச் சொல்ல வேண்டுமென நினைத்தேன். அப்படித்தான் இந்த ஷோவும் அமைந்திருக்கிறது” என்கிறார் மாயா.

நகைச்சுவையும் பொறுப்பும்: நகைச்சுவை என்றாலே யாரையாவது புண்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், நகைச்சுவை ஒருவரை யோசிக்க வைக்க வேண்டும் என்கிறார் மாயா. “இது ஒரு ‘இன்டராக்டிவ்’ ஷோ. நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ஒருவருக்கு இன்னொருவர் பேசிக்கொண்டிருப்பதுபோல இருந்தது என்று சொன்னார்கள். என்னையும் அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. சிலர் பாராட்டினார்கள். இன்னும் சிலர் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே எழுந்தும் சென்றார்கள்.

பெரிய விஷயங்களையும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, பெண் சிசுக்கொலை பற்றிப் பேசும்போது ‘கள்ளிப் பால் ஸ்கீம்’ என்று நகைச்சுவையாகச் சொல்கிறேன். அது மக்களிடம் எளிதாகக் கனெக்ட் ஆகிறது. நல்லது, கெட்டது என எல்லாமே இந்த ஷோவில் இருக்கிறது. நான் சொல்லும் விஷயங்களை இப்படித்தான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அவரவர்களுடைய பார்வையில் அதை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறா மாயா.

எதிர்மறையான பிம்பம்:

மாயா என்றாலே ‘நெகடிவ் பப்ளிசிட்டி’ மூலம் கவனம் பெறுபவர் என்கிற ஒரு பிம்பம் இருக்கிறதே என்று கொக்கியைப் போட்டவுடன் சிரிக்கிறார். “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் ஒரு ஆர்டிஸ்டாக வேலைக்குச் சென்றேன், அவ்வளவுதான். அதை வைத்து என்னை ‘ஜட்ஜ்’ செய்பவர்களைக் கண்டுகொள்வதில்லை.

நாம் எதைச் செய்தாலும் ஒரு தரப்பினருக்கு அது பிடிக்காமல் போகலாம். அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட்டையும் தொடர்ந்து ‘அப்டேட்’ செய்துகொண்டே இருக்கிறேன். இந்த ஷோவுக்காக ஒரு குழு செயல்படுகிறது. பலருடைய உழைப்பும் இதில் இருக்கிறது.

ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற விஷயங்களைப் பற்றிய என்னுடைய காமெடி, பெண்கள் பலருக்கும் கனெக்ட் ஆகிறது எனச் சொல்கிறார்கள். ஆனால், 2026 போன்ற காலக்கட்டத்திலும்கூடப் பெண்களுக்கு இன்னும் கனெக்ட் ஆகிறது என்பது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நகைச்சுவைக்கு என ஒரு ‘பவர்’ இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென நினைக்கிறேன். இனி ஊர் ஊராகப் பயணப்பட்டு டூர் ஷோக்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் மாயா.

மாயாவின் புதிய அவதாரம்!
நேபாள வெள்ளம்: பனிமலை ஏரி வெடிப்பு காரணமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in